ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 31
சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ் ... (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13)
Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13)
அர்தம் : சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ: குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது.
சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ:
சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான்
ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.
இதில் என்ன ஆஶ்சர்யம்?? ப்ரக்ருதியில்
உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே
படைத்திருக்க வேண்டும் ?? கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள்,
கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய
வைக்கிறது. கடவுளே படைத்திருக்கிறார்
என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??
இவர்கள் அனைவரும் ஜாதி அமைப்பை எதிர்க்கிறார்கள். அதுவே ஹிந்து ஸமுதாயத்தின் அனைத்து ப்ரஶ்னைகளுக்கும்
காரணம் என்று கருதுகிறார்கள். ஜாதி
அமைப்பிற்கு மூலம் வர்ண அமைப்பே என்று கருதுவதால், அந்த வர்ண அமைப்பினைத் தானே
ஸ்ருஷ்டித்ததாக பரமாத்மன் கூறுவதால் இவர்களது கோபம் இன்னம் கடுமையாகிறது. நவீன யுகத்தின் ஸமுதாய சீர்த்திருத்தவாதிகளின் ப்ரசாரத்தின்
தாக்கத்தினாலும் பணம் ஸம்பாதிப்பதையே வாழ்க்கையின் ப்ரதான கார்யமாகக் கருதி, தர்ம
க்ரந்தங்களைப் படிக்காமல் விட்டதாலும் நம்பிக்கையாளர் உள்ளத்தையும் ஸ்ரீ
க்ருஷ்ணனின் இந்த வாக்யம் குழப்பி விட்டால் ஆஶ்சர்யம் ஏதுமில்லை.
ஜாத அல்லது ஜாதி என்றால் பிறப்பு. வர்ணம் என்றால் நிறம். (Shade).
ஜாதி அமைப்பு என்பது பிறப்பின் அடிப்படையில் ஏற்பட்ட அமைப்பு. வர்ண வ்யவஸ்தா அல்லது வர்ண அமைப்பு என்பது தன்மை
அல்லது குணங்களின் அடிப்படையில் உள்ள அமைப்பு.
இதையே ஸ்ரீ க்ருஷ்ணன், ‘குண-கர்ம
விபாகஶ:’
என்கிறார். “குணம்
மற்றும் ஈடுபடும் தொழிலின் அடிப்படையில் நான்கு வர்ணங்களை நானே படைத்திருக்கிறேன்”,
என்கிறார்.
மனுஷ்யர்கள் அனைவரும் ஒரே ஸ்வபாவத்துடன், ஒரே தன்மையுடன்
இருக்கின்றனரா ?? இல்லையல்லவா ?
குண அடிப்படையில் இந்தப் பிரிவினை இயற்கையானது. ஒரு ஶரீரத்தின் வெவ்வேறு அங்கங்களைப் போல,
மனுஷ்யர்களின் ஸ்வபாவங்கள் வெவ்வேறு.
ஸவபாவங்களுக்கு ஏற்ப, அவர்கள் ஆற்றிடும் கர்மங்கள் வெவ்வேறு. அவர்களது ஆவஶ்யங்கள் அல்லது தேவைகளும்
வெவ்வேறு. இவர்களில் உயர்வு தாழ்வு
கற்பித்தால், அது இயற்கைக்கு விரோதமானது.
ப்ரக்ருதியில் பல விதம் உண்டு. பன்மை உண்டு.
வேறுபாடுகள் உண்டு. ஆனால், உயர்வு
தாழ்வு இல்லை. உயர்வு தாழ்வு என்ற
பேதங்களை உருவாக்குவது மனுஷ்யனின் பலஹீனம்.
ரோஜாவை உயர்வென்பான். கனகாம்பரம்
ஸாதாரணம் என்பான். எருக்கம்பூவைத்
தாழ்வென்பான். மனுஷ்யனுக்கு மாம்பழம்
உயர்ந்த்து. கொய்யா ஸாதாரணமானது. விளாம்பழம் தாழ்வானது. தோலில் சிவப்பு உயர்ந்த்து, கறுப்பு தாழ்ந்தது. தான்யத்தில் அரிஸி உயர்ந்தது. சோளம் தாழ்ந்தது. இவன் கற்பித்திடும் உயர்வு தாழ்வு பேதங்களுக்கு
ப்ரக்ருதி எவ்வாறு பொறுப்பாகும் ??
மனுஷ்யன் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் இயற்கையில் வேறுபாடுகள் உண்டு
என்பது நிஶ்சயம். ஸ்வபாவங்களில் பல
விதங்கள் உண்டு என்பது நிஶ்சயம். வேறுபாடுகள் ஸத்யம் என்றாலும் அவை மேம்போக்கானவை. உயர்வு தாழ்வு கிடையாது. அடிப்படையில் எல்லாம் ஒரே பரமனின்
ஸ்வரூபமே. “சாதுர்வர்ண்யம் மயா
ஸ்ருஷ்டம். நான்கு வர்ணங்கள் என்னால்
படைக்கப் பட்டுள்ளன”, என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.
அருமை. அருமை
ReplyDelete