\
ரயில் பயணம்
(ரயில் பட்ஜெட்
தாக்கல் செய்த மறுநாள் எழுதப் பட்டது.)
சிறு வயஸ்ஸில் விளையாடிய
ரயில் விளையாட்டு நினைவிற்கு வருகிறது. முன்னால் நிற்பவரின் சட்டையைப் பிடித்துக்
கொண்டு வரிசையாக நிற்போம். முதலில் நிற்பவன் கூ சுக் சுக் ...என்று சப்தம்
எழுப்புவான். எல்லோரும் ஓடுவோம், நேராக, வளைந்து, நெளிந்து, திரும்பி.. இணைப்பு
அறுந்து சிதறும் வரை ஓடுவோம். என்ஜினாக நிற்பவனே தலைவன். ரயிலைக் கட்டுப்படுத்துபவன்.
நாளடைவில், கடைசியில் ‘Gaurd’ ஆக நிற்பவனே தலைவன் என்றானது. அவன் ஒரு ஊதலை ஊதி
நிறுத்தச் சொன்னால் ரயில் நிற்க வேண்டும். மேலும் சில நாட்களில் மூன்றாவது தலைமை
எழுந்தது. ரயிலை விட்டு விலகி நிற்பவன் கையால் ‘Signal’ கொடுத்தால் ரயில் நகரும்.
அவன் விருப்பப்படி ரயில் நிற்க வேண்டும். ரயிலைப் பற்றிய எங்களின் புரிதல் வளர வளர
எங்கள் விளையாட்டும் பரிணமித்தது. ரயிலை ஓட்டுவது யார்? டிரைவரா, கார்டா, சிக்னல்
கொடுப்பவரா? ஸ்டேஷன் மாஸ்டர், மேலாளர், பொது மேலாளர், என்று தொடங்கி ரயில்வே
போர்ட் தலைவர், ரயில் மந்த்ரி வரை இப்பட்டியல் நீள்கிறது என்று புரிந்திடும் போது நாங்கள்
வளர்ந்து விட்டிருந்தோம். விளையாட்டு நின்று போயிருந்தது.
யானை, கடல் இவை
இரண்டும் சிறுவர்களை மட்டுமல்ல, அனைத்து வர்கத்தினரையும், அனைத்து வயஸ்ஸினரையும் ஆகர்ஷிக்கும்.
உத்ஸாஹப் படுத்திடும் என்பார்கள். ரயிலும் அப்பட்டியலில் சேரத் தகுதி பெற்றதே
என்பது என் கருத்து. கடக்கும் ரயிலைப் பார்ப்பவர்களை கவனியுங்கள். கடைசிப் பெட்டி
கடந்து போகும் வரை ரயிலைப் பார்ப்பவர்களே பெரும்பாலோர், ஒவ்வொரு முறையும் அலுப்பில்லாமல்
அதே உத்ஸாஹத்துடன்... சிறு வயஸில் தினசரி மாலையில் என் தாத்தா என்னை பெரம்பூர்
ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்வார், சென்னை – அஹமதாபாத் நவஜீவன் எக்ஸ்ப்ரெஸ்
கடந்து செல்வதைப் பார்ப்பதற்காக. நாங்களும் வெய்யிற்கால விடுமுறையில் தினமும் சென்று
வருவோம். குதூஹலத்துடன் ரயிலைப் பார்த்து விட்டு உத்ஸாஹத்துடன் திரும்புவோம்.
ரயில் ஓட்ட சப்தத்தில்
ஒரு இசை இருக்கிறது. மனதில் அமைதியைத் தூண்டக் கூடியது இந்த இசை. நம் கற்பனை
ஊற்றினை வளர்த்து விடக் கூடியது. பங்கிம் சந்திரர் எழுதிய உணர்ச்சி மிகுந்த பாடலான
வந்தே மாதரம் ரயிலில், ஜன்னல் வழியே வெளியே பார்த்தபடி அவர் பயணித்த போது வெளிப்பட்டது.
அடியேனும் என் குறுகிய கால சங்க வாழ்க்கையில் சில பாடல்கள் எழுதியுள்ளேன்.
அவற்றில் மிகையானவை ரயில் பயணத்தில் எழுதப் பட்டன. எனது மனோமயகோஷம் என்ற புஸ்தகம்
முழுவதும் ரயில் பயணத்தில் எழுதி முடிக்கப் பட்டது.
இந்த பூமியின் மீதும்,
இதில் உள்ள வளத்தின் மீதும் உணர்ச்சி பூர்வமான ஒரு பந்தத்தை, ஒரு பக்தியை ஏற்படுத்த
வல்லது ரயில் பயணம். ஜன்னல் அருகில் அமர்ந்து வெளியே பார்த்தபடி பயணிக்கும் போது
கடந்து செல்லும் வனங்களும், மலைகளும் நதிகளும் பரந்து விரிந்திருக்கும் பச்சைப்
பசேல் நிலப்பரப்பும்!! ஆஹாஹா!!! ப்ரமிக்க வைக்கக் கூடிய காட்சி. நம் நாட்டில் கொட்டிக் கிடக்கும் வளத்தைப்
பார்த்து இந்நாட்டின் மீது காதல் பிறந்து விடும். நதியைக் கடக்கும் போது நதியில் காசு
போட்டு கை கூப்பி வணங்கிடும் ஒரு பழக்கத்தினை என் மாணவப் பர்வத்தில் ஏற்படுத்தினாள்
என் தாயார். இந்நாள் வரை, நதியைக் கடக்கும் போதெல்லாம் என்னை அறியாமல் இப்பழக்கம்
தொடர்கிறது. அதே ஸமயம், வறண்ட நதிகளையும், பிளாஸ்டிக் குப்பை நிறைந்த பூமியையும் குப்பை
மேட்டில், சாக்கடை ஓரத்தில் உள்ள குடிசைகளையும் அவற்றில் வசித்திடும் மக்களையும்
பார்த்து மனதில் வருத்தமும் இக்காட்சி மாற வேண்டும் என்ற சங்கல்பமும் தோன்றுவதும்
நம் உள்ளத்தில் மலர்ந்துள்ள பக்தியின் விளைவால்தான்.
நம் மக்களைப் புரிந்து
கொள்ளவும் அரியதொரு வாய்ப்பினை அளிப்பது ரயில் பயணம். நம் மொழிகள், உடை மற்றும்
உணவுப் பழக்கங்களின் அறிமுகம் கிடைத்திட ரயில் பயணத்தை விட சிறந்த ஸாதனம் கிடைக்க
முடியாது. நான் ஒரு முறை மே மாஸத்தில், கொளுத்தும் வெய்யில் காலத்தில், பகலில்,
ராஜஸ்தான் பாலைவனத்தில் ஒரு பாசஞ்சர் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். பத்து
பதினைந்து நிமிஷங்களுக்கு ஒரு முறை வெவ்வேறு ஊர்களில் நின்ற படி சென்றது ரயில். ஒவ்வொரு
நிலையத்திலும் பத்து பதினைந்து பானைகளில் நிரப்பப் பட்ட குளிர்ந்த நீர், டம்ளர்களில்
அனைத்து பயணிகளுக்கும் விநியோகிக்கப் படும் காட்சியைக் கண்டேன். பகலில் அவ்வழியே
செல்லும் மூன்று ரயில்களிலும் இந்த சேவை உண்டாம். மார்வாடிகள் மற்றும் ஜைனர்கள்
மனங்களில் ஸாதுக்கள் ஆழமாகப் பதிய வைத்த பண்பு இக்காட்சியில் வெளிப்பட்டது.
வாழ்க்கைத் தத்வத்தினை,
மனிதனின் ஸ்வபாவத்தைப் புரிந்து கொள்ளவும் ரயில் பயணம் மிக அரிய வாய்ப்பினை
அளிக்கிறது. ஒருத்தருக்கொருவர் உதவிடும் மனப்பான்மை, அற்ப விஷயங்களுக்காக
சண்டையிடும் தன்மை, பகிர்ந்து கொள்ளுதல், ஸ்வயநலம், உண்மை, ஏமாற்றுதல், விட்டுக்
கொடுத்தல், திருடுதல் போன்ற positive, negative குணங்கள் அனைத்தையும் இங்கு
பார்க்கலாம். ஒரு முறை, கூட்டம் நிறைந்த பொதுப்பெட்டியில் குழந்தையை ஏந்திய பெண் ஒருத்தி
ஏறினாள். குழந்தையை மேல் தட்டில் (ஸாமான் வைக்கப்படும் தட்டு) வைத்து விட்டு,
சீட்டில் அமர்ந்திருந்த மற்றொரு பெண்ணிடம் சண்டையிட்டு இடம் பெற்று அமர்ந்தாள். சிறிது
நேரத்தில் குழந்தை சிறுநீர் கழித்தது. நேர்க்கீழே அமர்ந்திருந்த பெண்ணின் தலையில்
அபிஷேகம்!! பெரும் சண்டை (வாக் சண்டை மாத்ரம்) தொடங்கியது. இப்புயல் ஐந்து அல்லது
பத்து நிமிஷங்களே நீடித்திருக்கும். பிறகு, பெட்டியில் ஒரு சில நிமிஷ அமைதிக்குப்
பின் பேச்சும் ஆரவாரமும் நிறைந்த சஹஜ.நிலை திரும்பியது. (நம் நாட்டில், ஏதோ ஒரு
நகரச் சந்தையில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்திடும். அதிர்ச்சியின் விளைவாக பெரும்
அமைதி பிறந்திடும். ஒரே நாளில் சந்தை மீண்டும் ஸஹஜ நிலைக்குத் திரும்பிடும்
அல்லவா!! அதே போல்!) சிறிது நேரம் கழித்து, குழந்தையின் தாய் ஸஹ ப்ரயாணி ஒருவரின் கை
ரேகையைப் பார்க்கத் தொடங்கினாள். சண்டையிட்ட அந்தப் பெண்ணும் கையை நீட்டினாள். இவளும்
பார்த்தாள். பேசினாள். அவ்வளவுதான். ஏதோ நீண்ட கால நண்பர்களைப் போல பேசத் தொடங்கி
விட்டனர் இருவரும்.
ஒரு முறை, ஷூ பாலிஷ் போடும்
சிறுவன் ஒருவன் ரயிலில் ஏறினான். ஸஹ ப்ரயாணி தன் ஷூக்களுக்கு பாலிஷ் போட்டுக்
கொண்டார். ஐந்து ரூபாய்த் தர வேண்டும். சில்லறைக்காகத் தேநீர் வாங்கினார். தனியாக
அருந்த சங்கோஜப்பட்டு அச்சிறுவனுக்கும் சேர்த்து வாங்கினார். “பணம் மட்டும்
கொடுங்கள்” என்ற கூறி அவன் தேநீரை வாங்க மறுத்து விட்டான்.
பிற்காலத்தில்
கீதையில் நான் படித்த ஸத்வ, ரஜஸ், மற்றும் தமஸ் என்ற முக்குணங்களை நேரில் அனுபவித்து
அறிந்தது ரயிலில் தான். எவருக்கும் தொந்தரவு கொடுக்காமல் அமைதியாக
அமர்ந்திருப்பார், வீண் அரட்டையில் பங்கு கொள்ள மாட்டார், தேவை ஏற்பட்டால் உதவி
செய்திடுவார், மிதமாக உண்பார். பசிக்கு மட்டும் உண்பார், இவர் ஸத்வ குணீ. வரும் எல்லா
விற்பனையாளரிடமும் பேசுவார், தேவையோ இல்லையோ பொருட்கள் வாங்குவார், பசி இருக்கிறதோ
இல்லையோ, ஒன்று மாற்றி ஒன்று கொறித்துக் கொண்டே இருப்பார், அரசியல் பேசுவார்,
வாக்குவாதங்களில் ஈடுபடுவார், ஒரு இடத்தில் நிலையாக அமர மாட்டார், ஒவ்வொரு ரயில்
நிலையத்திலும் இறங்குவார், இவர் ரஜோ குணீ. ரயிலில் ஏறியது முதல் சென்றடைய வேண்டிய
ஊர் வரும் வரை தூங்கிக் கொண்டே இருப்பார், இவர் தமோ குணீ.
ரயிலில் ஒரு புது ரக
பிச்சைக்காரர்களைக் காணலாம். உழைக்கும் பிச்சைக்காரர்கள். ரயில் பெட்டியை சுத்தம்
செய்து விட்டு கையேந்தும் இவர்களில் பெரும்பாலோர் தத்தம் வீடுகளில் இருந்து ஓடி
வந்த சிறுவர்கள். ஒரு சிறுவனிடம் பேச்சு கொடுத்த போது அவன் கோலாபூரில் (மஹாராஷ்ட்ரம்)
வசிக்கும் டாக்டரின் மகன் என்றும், சிற்றன்னையின் கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு
ஓடி வந்தவன் என்றும் அறிந்தேன். “தந்தையுடன் சேர்த்து விடுகிறேன், வா” என்றழைத்த
போது மறுத்து விட்டான். இவர்களில் சிலர் ரயிலில் திருடுவதும் உண்டு.
ரயிலில் நடமாடும்
விற்பனையாளர்கள் ஒரு தனி ரகம். விற்பனைக்கலையைக் (Sales techniques) கற்பிக்கும்
ஒரு கல்லூரி என்று ரயிலைச் சொன்னால் மிகையாகாது. சிறிய கால அவகாசத்தில் விற்க
வேண்டும். ப்ரயாணிகளின் கூட்டத்தில் தன் பொருளை வாங்கக் கூடிய நபர்களைக் கண்டறிய
வேண்டும். அதற்கேற்றபடி பேச வேண்டும். கூட்டத்தில் நகர வேண்டும். ஓடும் ரயிலில் ஏற
வேண்டும். போட்டி விற்பனையாளரை சமாளிக்க வேண்டும். ரயில் அதிகாரிகளையும்
போலீசையும் சமாளிக்க வேண்டும். அதிக சப்தம் எழுப்பும் தேநீர் வடை விற்பனையாளர்
முதல் மெளனமாக விற்பனை செய்திடும் புஸ்தக விற்பனையாளர் வரை பல வகையினருக்கும்
ரயிலே புகலிடம்.
ஏஸீ வகுப்பிலோ
விமானத்திலோ பயணித்தால், இந்த அனுபவங்களில் எதுவும் கிடைத்திடாது. பொதுப்
பெட்டியிலோ ஸ்லீபர் வகுப்பிலோ பயணித்தால் மட்டுமே கிடைக்கக் கூடியவை இவை.
பொதுப் பெட்டியில்
அடைக்கப்பட்டுள்ள கூட்டம் எத்தகையது என்பதை சொற்களால் வர்ணிக்க முடியாது.
அனுபவித்தால் மட்டுமே புரியும். ஒரு முறை கும்ப மேளாவிளிருந்து வரும் போது மேலே
உள்ள சாமான் தட்டில் ஒரு கோடியில் கால்களை மடக்கி, கைகளால் கட்டிப் பிடித்து அமர்ந்த
நிலையில் எட்டு மணி நேரம் பயணித்தேன். மற்றொரு முறை, நடைப் பாதையில் side
சீட்டிலிருந்து main சீட் வரை, என் வேஷ்டியால் தூளி கட்டி, அதில் அமர்ந்தபடி
பயணித்திருக்கிறேன். இந்த கூட்டத்தில் ஒரு நபர் கூட புக முடியாது என்று நினைப்போம்
ஆனால், பத்து பதினைந்து பேர் ஏறி விடுவார்கள். வெளியே நிற்கும் போது, எப்படியாவது
ஏறி விட வேண்டும் என்று நினைப்பான். உள்ளே புகுந்த பின்னர், “இடமில்லை, ஏறக்
கூடாது”, என்று மற்றவரைத் தடுப்பான்.
இரயிலினுள் நடைபெறும்
இத்தகைய நிகழ்வுகளால் பாதிக்கப் படாமல் ரயில் தன பாட்டிற்குச் சென்று
கொண்டிருக்கும். மிக வேகமாக ஓடவும் செய்யும். தேவை ஏற்பட்டால் ஒரே இடத்தில்
மணிக்கணக்காக நிற்கவும் செய்யும். ஏறுபவர்களை நினைத்து மகிழ்வும் இல்லை,
இறங்குபவர்களை நினைத்து வருத்தமும் இல்லை. குணங்களைக் கண்டு பெருமிதமும் இல்லை,
அவகுணங்களைக் கருதி அவமானமும் இல்லை. பச்சை வயலானாலும், இருண்ட குஹையானாலும்
நகரமானாலும் ஆரண்யமானாலும் தன் போக்கில் ஓடிக் கொண்டிருக்கும் ரயில் கீதையின்
ஸ்தித ப்ரஞனை நினைவு படுத்துகிறது.
ஒருவரை மட்டும் நம்பி
இவ்வுலகம் இல்லை ஆனால், ஒவ்வொருவரும் முக்யமானவரே. ரயில்வேக்கு சரியாகப் பொருந்தும்
வாக்யம் இது. ஆயிரக்கணக்கில் ரயில்கள், லக்ஷக்கணக்கில் சிப்பந்திகள் மற்றும்
அதிகாரிகள், கோடிக் கணக்கில் ப்ரயாணிகள், பல்லாயிர கிலோ மீடர் நீள ரயில் பாதைகள்,
அவற்றின் மீது பல்லாயிர பாலங்கள் மற்றும் குஹைகள், பல்லாயிர ரயில் நிலையங்கள், சில
லக்ஷ சிக்னல்கள், ஓஹோஹோ !!! பாரதீய ரயில் என்பது மாபெரும் அமைப்பு. ஐரோப்பாவின்
சில நாடுகளின் ஜனத் தொகையை விட அதிக எண்ணிக்கையில் இங்கு ப்ரயாணிகள். வளர்ச்சியின்
வேகம் குறைவு என்றாலும் நிச்சயமான வளர்ச்சி உள்ளது. நான் பள்ளியில் படிக்கும் போது
வர்ஷா வர்ஷம் வெய்யில் கால விடுமுறையில் சென்னை வருவோம். ரயிலில் முன்பதிவு செய்ய
மூன்று நாட்கள், இரவும் பகலும் க்யூவில் நிற்போம், உட்காருவோம், உண்போம்,
படுப்போம். Onward Journey முன்பதிவு வேண்டும் என்றால் நாக்பூரில் இருந்து
சென்னைக்குத் தந்தி மூலம் செய்தி அனுப்பப்பட்டு, சென்னையில் முன்பதிவு ஆகி,
நாக்பூருக்கு செய்தி வந்து, எங்களுக்கு மூன்று நான்கு நாட்களுக்குப் பிறகு தெரிய
வரும். தற்போது முன்பதிவு எவ்வளவு சுலபமாகி விட்டது பாருங்கள். 3௦ மணி நேரம் வந்து
கொண்டிருந்த ரயில்கள் இன்று 16 மணி நேரத்தில் வருகின்றன. வசதிகள் பன்மடங்கு பெருகி
விட்டன. அளவை வைத்துப் பார்க்கையில் விபத்துக்களும் குறைவு என்றே சொல்ல வேண்டும்.
நடந்திடும் விபத்துகளில் பெரும்பாலும் தனி மனிதனின் அலக்ஷ்யமும் நூறு
வர்ஷத்திற்கும் பழமையான நிர்மாணமும் தான் காரணம். சமீபத்தில் நாக்பூர்
மாநகராட்சிக்கு இங்கிலாந்த் நாட்டின் ஒரு கம்பனியின் கடிதம் ஒன்று வந்தது. நாக்பூரில்
உள்ள ஒரு பாலம் 19௦௦’ல் அக்கம்பனியால் கட்டப்பட்டதாம். நூறு வர்ஷங்கள் ஆகி
விட்டதால் அது இடிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட வேண்டும் என்பதை ஞாபகப் படுத்துவதே
அக்கடிதத்தின் நோக்கம். (பணம் இல்லை என்ற காரணம் கூறி அப்பாலம் இன்றும் கட்டப்படாமல்
இருக்கிறது என்பது வேறு விஷயம்.)
புதிய ரயில் நிலையங்கள் வேண்டும், புதிய பாதைகள் வேண்டும், புதிய பாலங்கள் வேண்டும், புதிய ரயில் பெட்டிகளும் என்ஜின்களும் வேண்டும், சரக்குப் போக்குவரத்திற்கு தனிப் பாதை வேண்டும், வேக ரயில்களும், அதிவேக ரயில்களும் வேண்டும், அதே ஸமயம் பழையன புதுப்பிக்கப் பட வேண்டும். ப்ரயாணிகளின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஆதலால், போக்குவரத்து பாதிக்கப் படாமல் துரிதமாய் இப்பணிகள் நடைபெற வேண்டும். இதற்கு மிகப் பெரும் பணம் வேண்டும். டிக்கட்டில்லா பயணம் தடுக்கப் பட வேண்டும், ரயில் சொத்துக்களின் திருட்டு தடுக்கப் பட வேண்டும், ரயில் நிலத்தின் மீது ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட வேண்டும். பாதுகாப்பும் வேண்டும், தூய்மையும் வேண்டும், வேகமும் வேண்டும், வசதிகளும் வேண்டும். ரயில் மந்த்ரியால் மட்டும் நடக்கக் கூடிய வேலையா இது? பொது மக்களான நம் பங்கு ஏதேனும் உள்ளதா? தனியார்மயமும் வெளி நாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதியும் வேண்டுமா கூடாதா?
புதிய ரயில் நிலையங்கள் வேண்டும், புதிய பாதைகள் வேண்டும், புதிய பாலங்கள் வேண்டும், புதிய ரயில் பெட்டிகளும் என்ஜின்களும் வேண்டும், சரக்குப் போக்குவரத்திற்கு தனிப் பாதை வேண்டும், வேக ரயில்களும், அதிவேக ரயில்களும் வேண்டும், அதே ஸமயம் பழையன புதுப்பிக்கப் பட வேண்டும். ப்ரயாணிகளின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஆதலால், போக்குவரத்து பாதிக்கப் படாமல் துரிதமாய் இப்பணிகள் நடைபெற வேண்டும். இதற்கு மிகப் பெரும் பணம் வேண்டும். டிக்கட்டில்லா பயணம் தடுக்கப் பட வேண்டும், ரயில் சொத்துக்களின் திருட்டு தடுக்கப் பட வேண்டும், ரயில் நிலத்தின் மீது ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட வேண்டும். பாதுகாப்பும் வேண்டும், தூய்மையும் வேண்டும், வேகமும் வேண்டும், வசதிகளும் வேண்டும். ரயில் மந்த்ரியால் மட்டும் நடக்கக் கூடிய வேலையா இது? பொது மக்களான நம் பங்கு ஏதேனும் உள்ளதா? தனியார்மயமும் வெளி நாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதியும் வேண்டுமா கூடாதா?
பயணிகளான நமக்குச் சில
பொறுப்புக்கள் உண்டு. நாம் எடுக்கக் கூடிய ஸங்கல்பங்கள் சில....
Ø டிக்கட் இல்லாமல் பயணிக்க மாட்டேன்.
Ø பொதுப் பெட்டிக்கான (Unreserved Compartment) டிக்கட் வாங்கி ஸ்லீபர் அல்லது
ஏஸீ வகுப்பில் நுழைய மாட்டேன். அவ்வாறு நுழைவதும் டிக்கட் இல்லா பயணமே.
Ø குப்பையை ஜன்னல் வழியாக காடுகளிலும் வயல்களிலும் தூக்கி எறிய மாட்டேன்.
Ø
குப்பையை ரயில் உள்ளும் எறிய மாட்டேன். பயணத்தில் சேர்ந்த குப்பையை ஒரு பையில்
சேகரித்து, ரயில் நிலையத்தில் இறங்கும் போது அதற்கான தொட்டியில் போடுவேன்.
Ø உரத்த குரலில் பேச்சு பாட்டு, சிகரெட், பீடியின் புகை, ஸாமான்கள் வைத்து
பிறரின் இடத்தில் ஆக்ரமிப்பு,போன்ற செயல்களால் ஸஹ ப்ரயாணிகளுக்கு ஹிம்ஸை அளிக்க
மாட்டேன்.
Ø
அபாயம் என்று அறிவிக்கப் பட்ட பொருட்களை எடுத்துச் செல்ல மாட்டேன்.
Ø ரயில் பாதையை அதற்குரிய இடத்தில் மட்டுமே கடப்பேன்.
Ø ரயில் வசதிகளைப் பயன்படுத்தும் போது, உ.ம் : மின்சார ஸ்விட்சைத் தட்டும் போது,
கதவை மூடும் போதும், போர்வைகளை, விரிப்புகளைப் பயன்படுத்தும் போது, “இது எனதல்ல, பொதுச் சொத்து” என்பதை ஆழமாக நினைவில் நிறுத்தி வைப்பேன்.
Ø ரயில் பயணத்தின் போது சற்று விழிப்புடன் இருந்து என் பாதுகாப்பு, ஸஹ ப்ரயாணிகளின்
பாதுகாப்பு, ரயில் சொத்தின் பாதுகாப்புப் பொறுப்பினை சிறிதளவாவது என் மேல் ஏற்றிக்
கொள்வேன்.
Ø பயணம் தொடங்கும் முன் பாதுகாப்பு அதிகாரியின் மொபைல் எண்ணைக் குறித்துக்
கொள்வேன்.
அரசாங்கத்திடமும்,
ரயில் நிர்வாகத்திடமும் பற்பல எதிர்பார்ப்புகள் உள்ளன. எனினும் இங்கு வெளியிட
விரும்பவில்லை.
நம் ரயில் பயணங்கள்
ஆனந்தமயமாகட்டும். வாழ்க்கைப் பயணமும் ஆனந்தமயமாகட்டும்.
superb description in every aspect.
ReplyDeleteTVS
Ji. We are also feel this things. But, you are present right way. Nice thoughts.
ReplyDelete