\
ரக்ஷா பந்தன்
உத்ஸவமும் உபவாஸமும் ஹிந்துவின் வாழ்வில் இரண்டு முக்ய ஆதாரங்கள் ஆகும். உத்ஸவத்தின் ருசிகர விருந்து மற்றும்
உபவாஸத்தின் உண்ணா நோன்பு என்ற இரு த்ருவங்களுக்கு இடையில் தான் ஸராஸரி ஹிந்துவின்
வாழ்க்கைப் பயணம். சில உத்ஸவங்கள் பாரத
நாடு முழுவதும், அனைத்து ஜாதியினராலும், அனைத்து மொழியினராலும், அனைத்து
ஸமூஹங்களாலும் கொண்டாடப் படுகின்றன.
அந்தந்த ஊரில் மட்டும், ஒரு ஸமுதாயத்தினரால் மட்டும் கொண்டாடப் படும்
உத்ஸவங்களும் உண்டு. சேர்ந்து வருதல்,
சேர்ந்து ஆடுதல் மற்றும் பாடுதல், சேர்ந்து உண்ணுதல் ஆகியவை மூலம் குடும்ப
அளவிலும் க்ராம அளவிலும் ஸமுதாய அளவிலும் உள்ள உறவுகளை திடப் படுத்துவதும், உத்ஸவக்
கொண்டாட்டத்திற்கானத் தேவைகளை உள்ளூர் விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள் மற்றும்
வ்யாபாரிகளிடம் வாங்க வேண்டிய நிர்பந்தம் காரணமாக பொருளாதாரத்தை திடப்
படுத்துவதும், மக்களிடம் உத்ஸாஹம், ஆனந்தம் மற்றும் ஆக்கபூர்வ மனப்பான்மை ஆகியவைப்
பெருக வைப்பதும், உத்ஸவத்தில் நடத்தப்படும் கதை, ஆடல், பாடல், விளையாட்டு போன்ற
நிகழ்வுகள் மூலம் ஸராஸரி மனிதனின் வாழ்க்கைக் கண்ணோட்டத்தை சீராக்கி ஆன்மீக உயர்வை
ஏற்படுத்துவதும் உத்ஸவங்களின் பொதுவான நோக்கங்கள் ஆகும். நம் நாட்டில் ஸராஸரி ஹிந்துவிடம் புத்திசாலித்தனம் (general wisdom), ஆனந்தம் அதிகமாகவும் தற்கொலை எண்ணம், மனம்
சம்பந்தப் பட்ட ப்ரச்னைகள் குறைவாகவும் காணப்படுவதற்கு இங்குள்ள உத்ஸவங்கள் தான்
காரணம் என்பது அறிஞர்களின் கருத்து.
இத்தகைய ஒரு உத்ஸவமே ரக்ஷா பந்தன்.
ஸ்ராவண பௌர்ணமி தினத்தன்று வருகிறது.
{ஆவணி மாஸப் பௌர்ணமி அல்லது ஆடி மாஸப் பௌர்ணமி. சாந்த்ரமான வர்ஷ கணிப்பில், அதாவது யுகாதி
அன்று துவங்கும் வர்ஷ கணிப்பில் ஐந்தாவது மாஸமே ஸ்ராவணம். அதிக மாஸம் அல்லது மல மாஸம் வரும் ஆண்டுகளில்
ஆறாவது மாஸமாகவும் வர வாய்ப்பு உண்டு. சூர்யமான
கணிப்பில், அதாவது சித்திரை முதல் நாளன்று துவங்கும் வர்ஷ கணிப்பில் ஐந்தாம் மாஸம்
ஆவணி.}
ஹிந்துவின் வாழ்வில் ‘நூல்’ பெரும் மஹத்வம் வாய்ந்த ஒரு அடையாளம். ஒரு ஸங்கல்பத்தின் அடையாளம். வாழ்வின் திசையை உணர்த்தவல்லதொரு
அடையாளம். ஒரு ஹிந்துவிற்கு அவனது கடமையை
நினைவூட்டிடும் அடையாளம். ஒருவன்
ஒருத்தியின் கழுத்தில் கட்டும் நூல் அவர்களை கணவன்-மனைவியாக்கி பிரிக்க முடியாத
பந்தத்தில் இணைக்கிறது. ஒருவர் மற்றவரின்
துணையுடன் இவ்வுலகத்தில் வாழ்ந்து இறை நிலையை அடைய முயலுவோம் என்ற ஸங்கல்பம்
எடுக்க வைக்கிறது அந்நூல். சிஷ்யனின்
மணிக்கட்டில் குரு கட்டிடும் நூல் அவர்களுக்கிடையே அத்புதமானதொரு பந்தத்தை
ஏற்படுத்துகிறது. \ ஸஹநா வாவது, ஸஹநௌ புனக்து ... என்ற மந்த்ரத்திற்கு ஏற்ப, “இணைந்து கற்போம்,
பகிர்ந்து வாழ்வோம், ஒன்றாக உயர்ந்திடுவோம்” என்ற சங்கல்பத்தினை அறிவிக்கிறது
அந்நூல். புரோஹிதன் யக்ஞம் செய்யும்போது
எஜமானனின் மணிக்கட்டில் கட்டிடும் நூல், “உலகாயத வாழ்க்கைக்கான என் தேவைகளை நீ
பூர்த்தி செய். உனது ஆன்மீகத் தேவைகளை
நான் பூர்த்தி செய்கிறேன்” என்ற ஸங்கல்பத்தின் அடிப்படையில் ஒரு பந்தத்தை
ஏற்படுத்துகிறது. தந்தை தனது மகனின் இடது
தோளில் அணிவிக்கும் நூல் மகனின் உள்ளத்தில், “வேதங்களைப் படிப்பேன். வேதங்களைச் சார்ந்து, தர்மத்தை மையமாகக் கொண்ட
வாழ்வினை வாழ்வேன்” என்ற ஸங்கல்பத்தைத் தோற்றுவித்து அவனை ஆன்மீகப் பாதையில் அடி
எடுத்து வைக்கத் தூண்டுகிறது. அதே போல், ஒரு
பெண்ணால் தன் ஸஹோதரனின் மணிக்கட்டில் கட்டப்படும் ரக்ஷை அல்லது ராகீ என்ற இந்த
மெல்லிய பட்டு நூலும் ஒரு ஸங்கல்பத்தின் அடையாளம். ஒரு பந்தத்தினை, ஒரு கடமையை உறுதிப்படுத்தும்
ஒரு அடையாளம்.
ஸங்கல்பம் என்பது வாழ்வில் ஒரு முறை எடுக்கப் பட வேண்டியது. வர்ஷா வர்ஷம், மீண்டும் மீண்டும் எடுப்பது
அவசியமா? ஒருவன் ஒரு பெண்ணைத் தன மனைவியாக
ஏற்பதும், குரு ஒரு சிஷ்யனை மாணவனாக ஏற்பதும், தந்தை மகனுக்கு பூணூல் அணிவித்து
ப்ரஹ்மோபதேசம் செய்வதும், ஸஹோதர- ஸஹோதரி என்ற உறவு ஏற்படுவதும் வாழ்க்கையில் ஒரு
முறை நிகழக் கூடியதே. அந்த நிகழ்வன்று
அதற்கேற்ற ஸங்கல்பம் எடுப்பதும் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை தான். ஆயினும், அந்த ஸங்கல்பத்தினை மீண்டும் மீண்டும்
நினைவூட்ட வேண்டிய தேவை மனிதனுக்கு இருக்கிறது.
ஜட உலகில் வாழ்ந்திடும் போது ஏற்படும் சுக – துக்க அனுபவங்கள், வாழ்வின்
போராட்டங்கள் நம்மை அலைக்கழித்து நம் பாதையிலிருந்து விலக்கி விடும் ஆற்றல்
படைத்தவை. விலகுதல் உடல் அளவில் மட்டும்
அல்லாது மன அளவிலும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
எனவே, நம் ஸங்கல்பங்களும், பந்தங்களுக்கான நம் கடமைகளும் மீண்டும் மீண்டும்
வலியுறுத்தப் படுதல் தவிர்க்கவே முடியாதது.
பிஹாரில் சாட், உத்தர ப்ரதேஷம் மற்றும் மற்ற வட பகுதிகளில் கடவா சௌத்,
மகாராஷ்டிரா குஜராத்தில் மங்களா கெளரி, ஆந்த்ர கர்நாடகத்தில் வட ஸாவித்ரி வ்ரதம்,
தமிழ் நாட்டில் காரடையான் நோன்பு ஆகிய உத்ஸவங்கள் விவாஹ ஸங்கல்பத்தை
வலியுறுத்திடும் உத்ஸவங்கள். உபநயன
ஸங்கல்பத்தை புதுப்பித்திடும் உத்ஸவம் ஸ்ராவண பௌர்ணமி தினத்தன்று வந்திடும்
உப-கர்மா. (ஸாம வேதிகளுக்கு ஸ்ரீ கணேஷ
சதுர்த்தி அன்று உப-கர்மா.) ரக்ஷா பந்தன்
(ஸ்ராவண பௌர்ணமி), பாய்-துஜ் (தீபாவளி அடுத்து வரும் த்விதீயை), கனுப்பொங்கல்
(பொங்கலுக்கு அடுத்த நாள்) ஆகியவை ஸஹோதர ஸஹோதரிகளுக்கு இடையிலான பந்தத்தை,
ஸஹோதரத்வ ஸங்கல்பத்தை வலியுறுத்தும் உத்ஸவங்கள்.
முன்னால் குறிப்பிட்ட உத்ஸவங்களில் இருந்து இவை சற்று மாறுபட்டவை. மற்ற பந்தங்கள் இவ்வுலக வாழ்க்கையில்
ஏற்படுத்தப் பட்டவை. ஸஹோதர பந்தம்
இயற்கையானது. பிறப்பிலிருந்தே
தோன்றியது. ரக்ஷா பந்தன் இந்த உறவினை
ஆண்டு தோறும் மேலும் மேலும் வலுப்படுத்துகிறது.
ரக்ஷா பந்தன் குடும்பத்தினுள் நடந்திடும் ஒரு உத்ஸவம். தனிப்பட்ட உத்ஸவம் (Personal). ஆயினும், இதன் விஸ்தாரத்தைப் பரவலாக்கும்
முயற்சி பல முறை நடந்துள்ளது. “அயம் நிஜ:
பரோ வேத்தி கணானாம் லகு சேதஸாம். உதார
சரிதானாம் து வஸுதைவ குடும்பகம்”, என்பது முதுமொழி. (இவர் என்னுடையவர், அவர் என்னுடையவர் அல்லர்
என்பதெல்லாம் குறுகிய மனம் கொண்டவரின் எண்ணம்.
பரந்த மனம் படைத்தவருக்கு உலகமே குடும்பம்.) ஸஹோதர உணர்வு, எல்லைகளைத் தாண்டி விரிய
முடியும். ஸ்ரீ ராமன் – படகோட்டி குஹன்,
ஸ்ரீ ராமன் – வானர ஸுக்ரீவன், ஸ்ரீ ராமன் – வானர ஆஞ்சநேயர், ஸ்ரீ க்ருஷ்ணன் – குசேலர்
(கிழிந்த சேலையை உடுத்திய ஏழை.) இவை எல்லாம் மனிதனை மனிதனிடம் இருந்து பிரித்திடும்
சுவர்களைத் தகர்த்த, குறுகிய எல்லைகளைத் தாண்டிய ஸஹோதரத்வத்தின் உதாஹரணங்கள். 1893’ல் சிகாகோ ஸர்வ தர்ம மாநாட்டில் ஸ்வாமி
விவேகானந்தர், “எனதருமை ஸஹோ தரர்களே, ஸஹோதரிகளே” என்று பேசிய போது குறுகிய
வரம்புகளைத் தாண்டிய ஸஹோதரத்வத்தையே வெளிப்படுத்தினார்.
நம் நாட்டு வரலாற்றில் பல முறை ரக்ஷா பந்தன் உத்ஸவத்தின் ஸஹோதர உணர்வு ஸமுதாய,
தேசீய எழுச்சிக்காகப் பயன் படுத்தப் பட்டுள்ளது. 19௦5’ல் வங்கப் பிரிவினையின் போது
செய்யப்பட்ட ப்ரயோகம் மிகச் சிறப்பானது. ஆனந்த
மடம் என்ற நாவலில் இடம் பெற்ற ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் விடுதலைப் போராட்டத்தில்
ஈடுபட்டிருந்த தீவ்ர தேச பக்தர்களின் எழுச்சி கானமாக மாறியது. வந்தே மாதரம் என்றால் ‘தாயே, உன்னை
வணங்குகிறேன்’ என்று அர்த்தம். பாரதம்
நமக்கு அன்னை என்றால் அவளது குழந்தைகளான நாம் ஸஹோதர-ஸஹோதரிகள் அல்லவா? 19௦5’ல் ஆங்க்லேயனால் அன்னை துண்டாடப்
பட்டாள். நிர்வாஹ வசதிக்காகச் செய்யப்
பட்டதல்ல வங்கப் பிரிவினை. மாறாக, மத
அடிப்படையில் ஹிந்து – முஸ்லிம் என்று மக்களைப் பிரித்து, ஸ்வதந்த்ரப்
போராட்டத்தைத் தகர்ப்பதற்கான சதித் திட்டமே வங்கப் பிரிவினை. ரக்ஷா பந்தன் உத்ஸவத்தை மாபெரும் விழாவாகக்
கொண்டாடும் படி மக்களுக்கு அறைகூவல் விடுத்தனர் வங்கத்தின் தலைவர்கள். மக்களும் பெருந்திரளாக கங்கைக் கரையில் கூடினர். ஜாதி, மதம், போன்ற வேலிகளைக் கடந்து
லக்ஷக்கணக்கில் ராகிகளை பரஸ்பரம் கட்டிக் கொண்டனர். வந்தே மாதரம் என்ற முழக்கம் விண்ணை
நிறைத்தது. மிக வலுவான ஸஹோதர உணர்வு
கிளர்ந்தெழுந்தது. வங்கப் பிரிவினைக்கு
எதிரான போராட்டம் வலுத்தது. ஆங்க்ல அரசு
பணிந்தது. வங்கப் பிரிவினை ரத்தானது. அது மட்டுமில்லை. மென்மையான ராகீ நூலின் வல்லமை எந்த அளவிற்கு
ஆனதென்றால், வங்கத்தில் எழுந்த ஸஹோதரத்வத்தின் வலிமையும் அதன் விளைவாகத் தூண்டப்
பட்ட தேசபக்தியும் எந்த அளவிற்கு சக்தி வாய்ந்ததாக ஆனதென்றால் ஆங்க்ல அரசு தன் தலைமை
கேந்த்ரத்தை கொல்கொத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்கு
ஆளானது.
மிக வருத்தமான விஷயம் என்னவென்றால் 1947’ல் பாரத தேசமே மத அடிப்படையில்
கொடுமையாகப் பிளக்கப்பட்டு பாகிஸ்தான் என்ற இஸ்லாமிய நாடு உறவாக்கப்பட்ட போது காங்க்ரஸின்
தேசீயத் தலைமை இதே போன்றதொரு ஸஹோதர உணர்வைத் தூண்டத் தவறியது. ஆங்க்லேயனிடம் பரிதாபமாக அடி பணிந்தது. பாரத தேசம் இரு கூறுகளாக வெட்டப் பட்டதற்கு
காங்க்ரஸ் தான் காரணம் என்பது என் கருத்து.
1920’ல் காந்திஜி தலைமைக்கு வந்த பிறகு காங்க்ரஸ் வந்தே மாதரப் பாடல்
எழுப்பிய உணர்ச்சிக் கொந்தளிப்பைத் திட்டமிட்டு அழித்து பேரம் பேசும் ஒரு பலஹீனமான
அமைப்பாக மாறியது. முஸ்லிம் தலைவர்களின்
மிரட்டலுடன் கூடிய கோரிக்கைக்கு அடி பணிந்து, உணர்ச்சி மிகுந்த வந்தே மாதரப் பாடலை
நிராகரித்தது. தேச பக்தர்களுக்கு உத்வேகம்
அளித்த இந்தப் பாடலுக்கு பதிலாக ‘ஜன கண மன’ என்ற ஒரு சப்பைப் பாடலை
ஆதரித்தது. பிற்காலத்தில் அதை தேசீய
கீதமாகவும் அறிவித்தது. ஜன கண மன என்ற
பாடல் ஜார்ஜ்-V என்ற ஆங்க்ல மன்னன் 1911’ல் பாரதம் வந்த போது அவருக்கு அளிக்கப்பட்ட
வரவேற்பில் அவரைப் புகழ்ந்து பாடப் பட்டது. “எங்கள் ஜனங்களின், எங்கள் மனங்களின் அதிநாயகனே
(ஸர்வாதிகாரியே), பாரத பாக்ய விதாதா (பாரத்தின் பாக்யத்தை நிர்ணயிப்பவனே) ஜய ஹோ
(உனக்கு வெற்றி உண்டாகட்டும்)” என்று அர்த்தம் கொண்டது அப்பாடல். அதே போல், ஸஹோதரி நிவேதிதையாலும் காங்கிரஸின்
கொடி கமிட்டீயாலும் ப்ரஸ்தாபிக்கப் பட்ட காவிக் கொடியை நிராகரித்து, அதில் பச்சையை
முஸ்லிம்களுக்காகவும் வெள்ளையை க்றிஸ்தவர்களுக்காகவும் நீல நிற சக்ரத்தை
பௌத்தர்களுக்காகவும் சேர்த்து ஒரு கலவையை உருவாக்கியது காங்க்ரஸ் தலைமை. ஸஹோதரத்வம், ஒற்றுமை மற்றும் கடமை என்ற
செய்தியை ப்ரகடனம் செய்ய மறுத்தது. மாறாக
பயம், கையாலாகாமை, ஸ்வயநலம் மற்றும் மிரட்டலுக்கு அடி பணியும் பேடித்தனம் போன்ற
தன்மைகளின் உருவமாக நின்றது. சொல்லவும்
வேண்டுமா? முஸ்லிம் லீகின் பாகிஸ்தான்
கோரிக்கையை எந்த எதிர்ப்பும் இன்றி ஏற்றது.
நேரடி நடவடிக்கை என்ற பெயரில் லக்ஷக்கணக்கில் ஹிந்துக்கள் கொல்லப்பட்ட
போதும் சொந்த பூமியிலிருந்து வேருடன் பிடுங்கப்பட்டு விரட்டி அடிக்கப்பட்ட போதும்
காங்க்ரஸ் தலைமையிடம் வெறும் கண்ணீரும் பெருமூச்சும் புலம்பலும் தான் இருந்தன.
ஆவணி அவிட்டம் என்று பரவலாக அறியப்பட்ட உபகர்மாவும்
ஸ்ராவண பௌர்ணமி அன்றே வருகிறது. முன்பே
குறிப்பிட்ட படி வேதங்களைப் படிப்பதற்கும் தர்மத்தைச் சார்ந்த வாழ்க்கை
வாழ்வதற்கும் நம் உபநயனம் நடந்த போது நாம் எடுத்த ஸங்கல்பத்தினை அன்று
புதுப்பித்துக் கொள்கிறோம். நம் நாட்டின்
ஸ்வதந்த்ர தின வைபவமும் இதே நாட்களில் வருகிறது. ஒரு உத்ஸவம் வறண்ட சடங்காக
மாறுவது எப்போது? அதில் பின்னிப்
பிணைந்திருக்கும் உணர்ச்சி வறண்டு விடும் போது ஒரு உத்ஸவம் வெறும் சடங்காக மாறி
விடுகிறது. நாம் வெறும் சடங்குகளில்
மூழ்கிட மறுப்போம். உணர்ச்சியே
உத்ஸவத்திற்கு உயிர் ஊட்டுகிறது. ஒவ்வொரு
உத்ஸவத்தின் போதும் அதன் தாத்பர்யத்தினை அறிந்திட முற்படுவோம். அதன் பின்னணியில் உள்ள உணர்ச்சி (Emotion)
நம்முள் துளிர் விட அனுமதிப்போம்.
Comments
Post a Comment