\
எண்ணங்களை அறிதல்
மனஸினுள் புதைந்திருக்கும் எண்ணங்களை அறிய முடியுமா? தன்னுடைய எண்ணங்களை..? ஆம். முடியும். கடுமையான தொடர் பயிற்சிகளால் மனஸின் மேல் தளத்தில் நிறைந்துள்ள குழப்பங்கள் மற்றும் கலக்கங்களை நீக்கி, மனம் அமைதி அடைந்து விட்டால், அடி ஆழத்தில் புதைந்திருக்கும் எண்ணங்களையும் அறியலாம்.
பிறர் மனஸில் உள்ள எண்ணங்கள்? அவற்றை அறிய முடியுமா? கடவுளால் முடியும். அவன் அந்தர்யாமி. உயிர்களின் உள்ளங்களில் வஸிப்பவன். அவனால் சூக்ஷ்மமான எண்ணங்களையும் அறிய முடியும்.
யோகியரால் முடியும். அவர்களது மன நிலையே, ஸ்வய நலம், வெறுப்பு, விருப்பு, நிர்பந்தம் துளியும் இல்லாத அவர்களது மனநிலை அல்லது மனஸற்ற நிலை அல்லது மனம் அழிந்த நிலையே அதற்குக் காரணம்.
மனோ விஞானிகளால் முடியும். அதற்கேற்ற பயிற்சி எடுத்துள்ளதால் அவர்களால் தம் நோயாளிகளின் மன எண்ணங்களைப் படிக்க முடிகிறது.
நம்மைப் போன்ற ஸாமான்ய மனிதர்களாலும் இந்த ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியும். குறைந்த பக்ஷம் நம்மைச் சுற்றி உள்ள நெருக்கமான ஒரு சிலரின் மன எண்ணங்களையாவது படித்திட முடியும். அதற்கு நம் மனஸில் அவர்களைப் பற்றி நேர்மையான அன்பு பெருக வேண்டும். தன்னைப் பற்றிய கவலைகள் ஒழிய வேண்டும். பொதுவாக, ஒரு தாய், தன் மக்களின் மன எண்ணங்களை வெகு ஸுலபமாக அறிந்திடுகிறாள்.
மற்ற உயிரினங்கள், மிருகங்களும், பூச்சிகளும் மரம் செடி கொடிகளும், இந்த ஆற்றலை இயற்கையாகவே பெற்றிருப்பதாகத் தோன்றுகிறது. அருகில் பறந்திடும் ஒரு கொசுவை அடித்திட நான் கைகளை உயர்த்திடும் போதெல்லாம் அது வேகமாகவும் தாறுமாறாகவும் பறந்திடுவதை பார்க்கிறேன். தென் ஆப்ரிக்காவில் கண்ட ஒரு காட்சி நினைவிற்கு வருகிறது. ஒரு வீட்டில் அனைவரும் உணவு மேஜையில் அமர்ந்திருக்கும் போது அங்கு ஒரு ஈ வந்தது. (அங்கு ஈக்களைக் காண்பது அரிது.) ஈயைக் கண்ட அந்த வீட்டு யஜமான் மின்சார மட்டையைக் கையில் எடுத்து அந்த ஈயைத் துரத்தத் தொடங்கினார். அந்த ஈ அவரை வீடு முழுவதும் ஓட வைத்தது. பதினைந்து நிமிஷங்கள் பின்னர் களைத்துப் போய், தோல்வி முகத்துடன் அவர் திரும்பினார். "மரங்களை வெட்டுபவன் பத்தடி தூரத்தில் வந்தாலே மரம் நடுங்கும்" என்று என் சிறு வயஸில் வீட்டுப் பெரியோர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இது தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளும் ஒரு உணர்வு மட்டும் தான் (Survival Instinct) என்று சிலர் வாதிடலாம்.
வேறு சில அனுபவங்கள் எனது இக்கருத்தை ஊர்ஜிதப் படுத்தலாம். நாக்பூரில் சென்ற வர்ஷம் ஒரு ஸாதுவைச் சந்தித்தேன். அவர் கர்நாடகாவைச் சார்ந்தவர். நாடு முழுவதும் கால் நடையாக சுற்றிக் கொண்டிருப்பவர். அபரிக்ரஹம் என்ற பண்பின் உருவாகவே அவர் என் கண்களுக்குப் பட்டார். (அபரிக்ரஹம் என்றால் பொருட்கள் சேர்த்து உடைமை ஆக்குதலைத் தவிர்த்தல்.) அவர் ஒரு முறை மேற்கு கர்நாடகாவில் ஒரு நதிக்கரை ஓரம் ஒரு சிறிய ஊரில் சாதுர்மாஸ்ய வ்ரதத்திற்காக தங்கினார். அவர் தங்கி தனது ஜப தப ஸாதனைகளைச் செய்திட அந்த ஊர் மக்கள் ஒரு குடிசைக் கட்டிக் கொடுத்தனர். காலை வேளைகளில் ஸ்வந்த ஸாதனைகளில் மூழ்கிய அவர், மாலை வேளைகளில் மக்களைச் சந்தித்து உரையாடி வந்தார். முழுமையாக வளர்ந்த நல்ல பாம்பு ஒன்று அந்த குடிசையில் புகுந்து ஒரு ஓரத்தில் சுருண்டு படுத்துக் கொண்டது. மக்கள் மத்தியில் பீதியும் அதன் விளைவாக பாம்பின் உயிருக்கு ஆபத்தும் ஏற்படக் கூடாது என்று கருதிய அந்த ஸாது அமைதியாக இருந்தார். அவர் நடவடிக்கைகள் என்றும்
போல தொடர்ந்தன. கைக்கெட்டும் தூரத்தில் எட்டடி நீள நாகப் பாம்பு படுத்திருக்கையில் மூன்று இரவுகளும் மூன்று பகல்களும் கழித்தார் அந்த ஸாது. இறுதியாக, அவர் கைகளைக் கூப்பி, கண்களை மூடி அப்பாம்பு முன் அமர்ந்து, "நாகராஜா, தயவு செய்து இங்கிருந்துச் சென்று விடு", என்று பிரார்தித்தார். அதுவும் சென்று விட்டது. இது நடக்குமா?
அவரது கூற்று என்னையும் ஒரு பரிசோதனை செய்யத் தூண்டியது. ஒரு நாள் விடியற்காலையில் என் வீட்டினுள் ஒரு சுமார் இரண்டடி நீளப் பாம்பு நுழைந்தது. நான் கண்களை மூடி, அந்தப் பாம்பிடம் "தயவு செய்து ஊர் எழும் முன், மனைவி எழும் முன், இங்கிருந்து சென்று விடு. உன் உயிரை ஆபத்திற்கு உள்ளாக்காதே", என்று வேண்டிக் கொண்டேன். என் மனஸில் பயம் இல்லை என்று என்னால் கூற முடியாது. எனினும் பிடிவாதமாக இந்தப் பரிசோதனையில் ஈடுபட்டேன். ஒரு நிமிஷ நேரம். கண்களைத் திறந்த போது பாம்பு அங்கில்லை. தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரத்தில் ஒரு பள்ளி மாணவன் தன் வீட்டில் இரண்டு பாம்புகளை வளர்த்து வந்தான். அவை வீடு முழுவதும் சுற்றித் திரிந்தன. தாராபுரம் அருகில் ஆலாம்பாளையம் க்ராமத்தைச் சார்ந்த எனது நண்பர் ஸ்ரீ முருகேசனின் தோட்டத்தில் இரண்டு பாம்புகள் வஸிக்கின்றன. அவர் கவலைப் படுவதில்லை. அவையும் அவரை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை.
கொல்லானை புலால் மறுத்தானை கை கூப்பி எல்லா உயிரும் தொழும். என்கிறார் திருவள்ளுவர்.
மரம் செடி கொடிகள்? அவற்றால் நம் எண்ணங்களை அறிய முடியுமா? எனது நண்பர்களில் ஒருவரும் ஸங்க ப்ரசாரக்குமான ஸ்ரீ கோபால்ஸ்வாமி ஷஷ்டி வ்ரதம் அனுஷ்டிப்பார். ஷஷ்டி அன்று, காலையில் தன் வேலைகளை முடித்து விட்டு மதியம் கார்யாலயம் திரும்பி வருவார். அங்குள்ள ஒரு கொய்யா மரம் அவருக்காக ஒரு பழத்தைக் காப்பாற்றி வைத்திருக்கும். சென்ற பல வர்ஷங்களில் ஒரு முறை கூட அவருக்குப் பழம் கிடைக்காமல் இருந்ததில்லை. அவருக்கும் அம்மரத்திற்கும் எத்தகைய உறவு?? தினஸரி காலை அம்மரத்தருகில் நின்று அதைத் தடவிக் கொடுப்பார். காய்ந்த சருகுகளையும் பழுத்த இலைகளையும் எடுத்து விடுவார். அம்மரத்தின் வேருக்குத் தண்ணீர் பாய்ச்சிடும் எண்ணத்தில் அதன் அருகில் முகம் கை கால் அலம்புவார். அவர் மன எண்ணங்களை அறிந்த அம்மரமும் அதற்கேற்ற முறையில் செயல்படுகிறது.
ஒரு முறை நான் பொள்ளாச்சியில் ஒரு விவஸாயி வீட்டில் தங்கி இருந்தேன். தன் கேள்விக்கு பதில் என்னிடம் அறிய முற்பட்டார். அவரது தென்னைத் தோப்பில் மற்ற மரங்கள் சராசரியாக 200 காய்கள் கொடுக்கையில், இரண்டு வரிசைகளில் இருந்த மரங்கள் மட்டும் சுமார் 300 காய்கள் கொடுத்தன. அடுத்த வரிசையில் இருந்த மரங்களும் ஸராஸரியை விட அதிகக் காய்கள் கொடுத்தன. அதற்கான காரணம் அறிய விரும்பினார். ஒரே மண். ஒரே அளவில் நீர்ப் பாய்ச்சல். அவ்விரண்டு வரிசைகளின் நடுவே ஒரு மண் பாதை சென்றதைக் கண்டேன். "இப்பாதை எங்கு செல்கிறது? இதில் பயணிப்பவர் யார்?" நான் வினவினேன். "மலை அடிவாரக் கோவிலுக்குச் செல்ல, ஊர் மக்கள் இப்பாதையைப் பயன்படுத்துகின்றனர். அன்றாடம் ஒரு சிலரும், பௌர்ணமி அன்று அதிக எண்ணிக்கையிலும் செல்வார்கள்" என்றார் விவசாயி. மனிதனிடம் பல்வேறு கோணல்களும் இருந்தாலும் கோவிலுக்குச் செல்லும் போதும் இறை வழிபாட்டிற்குப் பிறகு கோவிலில் இருந்து திரும்பும் போதும் அவனது மனம் சற்றேனும் உயர்ந்த நிலையில், அமைதி நிலையில், இருந்திடும் என்பது உண்மை. அத்தகைய மனங்களை அம்மரங்கள் அறிகின்றன. ஆனந்தம் அடைகின்றன. அதற்கேற்றவாறு திருப்பி அளிக்கின்றன. மனத் தூய்மையின் வீர்யம் அதிகமாக இருந்தால் தாக்கம் அதிக தூரம் வரை இருந்திடும் என்பது நிச்சயம். அதிக விளைச்சலுக்கு இதைத் தவிர வேறு காரணம் ஏதும் இருக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.
அதே பொள்ளாச்சியில் ஒரு பள்ளியின் LKg, UKg ஆசிரியைகளைச் சந்தித்தேன். ஒரு ஆசிரியை அழகான அனுபவம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டாள். குழந்தைகள் உள்ளங்களில் இயற்கைப் பற்றிய அன்பு துளிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு பரிசோதனை செய்தாள் அவள். ஒவ்வொரு குழந்தையும் ஒரு தகர டப்பா கொண்டு வரச் செய்தாள். குழந்தைகள் தம் பிஞ்சுக் கைகளாலேயே அவற்றில் மண்ணை நிரப்பச் செய்தாள். தத்தம் வீட்டிலிருந்து ஒரு செடியைக் கொண்டு வரச் செய்தாள். டப்பாவில் அதை நடுவதற்கு உதவியும் செய்தாள். குழந்தைகள் தினசரி உணவு முடித்த பின் தத்தம் செடிகளுக்கு தண்ணீர் விடப் பயிற்சி அளித்தாள். ஒரு குழந்தையின் ரோஜா செடி, மலர் ஒன்றைக் கொடுத்த போது அக்குழந்தை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆவலுடன் மலரைத் தொடச் சென்ற அக்குழந்தையின் கை விரலில் முள் குத்தியது. குழந்தை அழுதது. தன் செடியை வெறுக்க முற்பட்டது. ஆசிரியை அக்குழந்தையின் மனசை மாற்றும் நோக்கத்துடன் "நீ அந்த செடியிடம் வேண்டிக் கேட்டுக் கொள். எனக்கு முள் வேண்டாம். மலரை மட்டும் கொடு" என்று கூறினாள். தூய மனம் கொண்ட குழந்தைகள் ஸந்தேஹம் கொள்வதில்லை அல்லவா? அக்குழந்தையும் ஷ்ரத்தையுடன் தினசரி அச்செடியிடம் பேசியது. சில நாட்களில் அச்செடியில் புதிய கிளை ஒன்று துளிர்த்தது, முட்கள் இல்லாத வழுவழுப்பான கிளை. நம் விஞான மனம் இதை ஏற்றுக் கொள்ள மறுக்கலாம்.
இயற்கையின் மற்ற அம்சங்களான வானம், காற்று, மேகம் ஆகியவை கூட நம் மனங்களை அறிகின்றன என்று நம் சாஸ்திரங்கள் பகர்கின்றன. "நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை" என்ற முதுமொழி நாம் அனைவரும் அறிந்ததே.
இது புதிர்கள் நிறைந்த ஆழமான விஷயம். திறந்த மனஸுடன் ஆய்வு செய்யக் கூடிய மாணவர்கள் தேவை.
Comments
Post a Comment