-: ॐ :-
நமஸ்காரம் - உலகத்திற்கு பாரதம் அளித்த பொக்கிஷம்.
நமஸ்தே! நமஸ்காரம்! நமஸ்கார்! நமஸ்கரிக்குன்னு! நமஸ்காரமண்டி! நொமோஷ்கார்! பாரதத்தின் எல்லா மொழிகளிலும் அதே வார்த்தை. அந்த வார்த்தை குறித்திடும் செயலும் அதே. அந்த செயலுக்குப் பின்னால் உள்ள பாவமும் (Bhaavam) அதே.
கோபத்தையும் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தையும் வெளிப்படுத்த உலகத்தின் அனைத்து ஸமுதாயங்களும் பயன் படுத்தும் வார்த்தைகள், "என் கால் உன் தலை மேல்", "என் செருப்பால் உன்னை அடிப்பேன்" போன்றவை. இந்த வார்த்தையே வன்முறை நிறைந்தது. செயலோ வன்முறையின் உச்சம்.
இதற்கு நேர் எதிர்மாறான பாவனையை வெளிப்படுத்தும் வார்த்தை மற்றும் செயல்தான் நமஸ்காரம். "என்னுடைய தலை உனது காலடியில்..." இச்செயல் வெளிப்படுத்தும் பாவனை பணிவு மற்றும் மன்னிப்புக் கோருதல்.
கோபம் மற்றும் பழி வாங்கும் உணர்வுகள் மிருக உணர்வுகள் ஆகும். இயற்கையாகவே மனிதனிடம் காணப்படுபவை இவை. ஆனால், பணிவு, மன்னிப்புக் கோருதல் ஆகியவை மனிதனிடம் மட்டுமே, அதிலும் தன்னை தெய்வ நிலைக்கு உயர்த்திக் கொள்ள விரும்பும் மனிதனிடம் மட்டுமே காணப்படும் பண்புகள். கீதையில் அத்யாயம் 16 'ல் ஸ்ரீ க்ருஷ்ணன் இப்பண்புகள் தெய்வ ஸம்பத்து என்கிறான். நம் ஸ்ரேஷ்ட முன்னோர்களான ரிஷி முனிவர்கள் இறை நிலையை எய்துவதையே மனிதனின் லக்ஷ்யமாக வைத்தனர். எனவே, பாரதத்தில் பண்டிகைகள், விளையாட்டுக்கள், கலைகள், இலக்கியம், பழமொழிகள், பழக்க வழக்கங்கள் போன்று அவர்கள் ஏற்படுத்திய எல்லாம் மனிதனை பரம நிலைக்கு உயர்த்திடும் வகையில் அமைந்துள்ளன. நமஸ்காரமும் அத்தகைய ஒரு வழக்கம்தான்,
நமஸ்காரம் வேத காலத்தில் இருந்தே இருந்து வரும் ஒரு வழக்கம். வேதங்களில் அதிகமான முறை உச்சரிக்கப் படும் வார்த்தை நமஹ என்ற வார்த்தையே. ராமாயண மஹாபாரதத்திலும் நமஸ்காரம் செய்யப் படும் காட்சி பல இடங்களில் வருகின்றன.
யாருக்கு நமஸ்காரம்? தேவ (தெய்வம்) த்விஜ (ப்ராஹ்மணன்) குரு. ப்ராக்ஞன் (மூதறிஞன்) ஆகியோருக்கு நமஸ்காரம் செய்தல் சரீரத்தால் ஆற்றப் படும் தவம் என்கிறது கீதை (அத்யாயம் 17 - ஸ்லோகம் 14). மற்றொரு இடத்தில் குருவிடம் ஞானத்தை எவ்வாறு பெற வேண்டும் என்று விளக்கிடும் போது அவருக்கு நமஸ்காரம் செய்தலையே முதலில் குறிப்பிடுகிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் (அத்யாயம் 4 - ஸ்லோகம் 34 ). ஏன்? அர்ஜுனன் விறைப்பாக நின்று வாதங்கள் புரிந்த வரை அமைதியாக இருந்த ஸ்ரீ க்ருஷ்ணன் அவன், "உன் பாதங்களில் ஷரண் அடைகிறேன் கண்ணா, எனக்கு வழிகாட்டு" (அத் 2 - ஸ்லோகம் 7) என்று கூறி நமஸ்கார மன நிலையை அடைந்த பிறகுதான் கீதையைச் சொல்லத் தொடங்குகிறார்.
மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ போன்ற வேத மந்த்ரங்கள் தாய் தந்தையருக்கு நமஸ்காரம் செய்தலை உயர்த்திப் பிடிக்கின்றன. ஔவைப் பாட்டி,,"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், தாயிற் சிறந்த கோவிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்த்ரமும் இல்லை" என்று பாடி, தாய் தந்தை பூஜிக்கப்பட வேண்டியதை வலியுறுத்துகிறாள். பிள்ளையார் தாய் தந்தையரைச் சுற்றி வந்து மாங்கனி பெற்ற கதை, ஷ்ரவண பாலன் குருட்டுத் தாய் தந்தையரை காவடியாகச் சுமந்து தீர்த்த யாத்ரை அழைத்து சென்ற கதை, மாமிசம் வெட்டி விற்றுப் பிழைத்த வ்யாதன் தாய் தந்தையரை அனுதினமும் வணங்கியதால் மட்டுமே ரிஷி குமரனுக்கு ஆன்மீக உபதேசம் வழங்கிடும் அளவிற்கு உயர்ந்த கதை இவை எல்லாம் தாய் தந்தையருக்கு செய்திடும் நமஸ்காரம் எத்தகை மஹத்வம் வாய்ந்தது என்பதைப் பகர்கின்றன.
ஸூர்ய நமஸ்காரமும் வேதத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று. பூமி, பசு, துளஸி, நதி, ... போன்று பலவும் நம்மால் நமஸ்கரிக்கப் படுகின்றன.
நம்மை விட பெரியவர்களை நமஸ்கரிக்க வேண்டும். வயஸில் பெரியவர்களை நமஸ்கரிக்க வேண்டும். வயஸில் சிறியவர்களாக இருக்கலாம், ஆயின் குணத்தில், ஆற்றலில் பெரியவர்களாக இருப்பவர்களையும் நமஸ்கரிக்கலாம். இவை வெளிப்படையாகத் தெரிவது இல்லையே. எனவே, அனைவரையும் நமஸ்கரிக்கலாமே. இப்படைப்பில் அனைவருமே பரமனுடைய உருவகம். அவனது உருவத்திற்குச் செய்திடும் நமஸ்காரம் அவனுக்கே செய்திடும் நமஸ்காரம் அல்லவா?
நமஸ்காரம் என்பது உடலால் செய்யப் படும் செயல்தான் என்றாலும், பாவனையே ப்ரதானம். மனஸில் கோபமும் பொறாமையும் இருந்தால் நமஸ்காரம் செய்ய முடியாது. அஹங்காரம் நமஸ்காரம் செய்து விடுவதைத் தடுக்க வல்லது. மனஸில் ஒரு க்ஷண நேரம் ஏற்படும் நெகிழ்வு, ஒரு க்ஷண நேரம் தோன்றி விடும் பணிவு, ஒரு க்ஷண நேரம் கரைந்து விடும் 'நான்', அதுவே உண்மையில் நமஸ்காரம் ஆகும். உடலைக் கிடத்தியோ கைகளைக் கூப்பியோ செய்யப் படும் செயல் இந்த பாவனையின் வெளிப்பாடு மாத்ரமே. உள்ளே பாவனை எழுந்து வெளிப்படையான செயலைச் செய்ய முடியாமல் போனால் தவறில்லை. ஆனால், உள்ளே பாவனை இல்லாமல் செயலை மாத்ரம் செய்தால் அது வெறும் சடங்காக மாறி விடும். சடங்கும் அவசியம் தான். என்றாவது ஒரு நாள் பாவனை எழ வாய்ப்பு உண்டல்லவா?
தன்னை விட உயர்ந்தவரை நமஸ்காரம் செய்தல் ஸுலபம். இந்த ஆலய ஸன்னிதி பெரும் ஷக்தி வாய்ந்தது; இந்த மனிதர் பெரும் ஆற்றல் கொண்டவர்; இந்த ஸந்யாஸீ அறிய பல ஸித்திகளைப் பெற்றவர்; போன்ற காரணங்கள் நமஸ்காரத்தை மிக ஸுலபமாகத் தூண்டி விடும். जहां चमत्कार वहां नमस्कार என்பார்கள் ஹிந்தியில். தன்னை விட கீழ் நிலையில் உள்ளவர்களை நமஸ்காரம் செய்ய முடியுமா? எல்லாம் அறிந்த ஆசார்யனை நமஸ்காரம் செய்தல் ஸுலபம். ஆயின், மூர்க்கனை, ஒன்றும் அறியா மூடனை நமஸ்காரம் செய்ய முடியுமா? பெரும் செல்வந்தனுக்கு நமஸ்காரம் செய்தல் ஸுலபம். தாரித்ர்யத்தில் வாடி இருக்கும் ஏழையை நமஸ்காரம் செய்தல்? "மாத்ரு தேவோ பவ", "பித்ரு தேவோ பவ", "ஆசார்ய தேவோ பவ", "அதிதி தேவோ பவ", போன்ற உபநிஷத வாக்யங்களில் "மூர்க்க தேவோ பவ", "தரித்ர தேவோ பவ" என்றஇரண்டு வாக்யங்களை சேர்க்கச் சொல்கிறார் ஸ்வாமி விவேகானந்தர். மிக அத்புதக் கருத்து.
செய்பவர் மனஸில், "எல்லாம் இறைவனே" என்ற அத்வைதப் பார்வையைத் திறந்து விட வல்லது நமஸ்காரம். வாங்குபவர் மனஸிலும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. அவருள் புதைந்திருக்கும் கோபம் கரைந்து விட வாய்ப்பு உண்டு. "நான் இதற்குத் தகுதி உள்ளவன் தானா?" என்ற கேள்வியை அவருள் எழுப்பி, ஸ்வய பரிசோதனை தோன்றி விட வாய்ப்பு உண்டு. ஒரு க்ஷண நேரம் அவருள் பணிவும் அஹங்காரமின்மையும் ஏற்பட வாய்ப்பு உண்டு. அந்த நிலையில், 'இவன் நன்றாக இருக்க வேண்டும்', என்று நமஸ்காரம் செய்பவரைப் பற்றி அவரது உள்ளத்தின் ஆழத்தில் இருந்து எழுந்திடும் தூய்மையான எண்ணமே உண்மையான ஆஷீர்வாதம் அல்லது வாழ்த்து. 'ஆயுஷ்யமான் பவ', சௌபாக்யவதீ பவ' என்ற ஆசீர் வசனங்கள் எல்லாம் அந்த எண்ணத்தின் வெளிப்பாடு மாத்ரமே.
மனித மனம் விசித்ரமானது. ஆரம்பத்தில் யாராவது தனக்கு நமஸ்காரம் செய்தால் கூச்சப் பட்டவர் மனஸில், நாளடைவில், "நமஸ்கரிக்கப் படும் தகுதி எனக்கு உண்டு" என்ற நினைப்பு ஏற்பட்டு விடும் வாய்ப்பு உண்டு. மேலும் சில நாட்களில், எவராவது நமஸ்காரம் செய்யவில்லை என்றால், அஹங்காரம் நிறைந்த கோபமும் தோன்றிடவும் வாய்ப்பு உண்டு. நமஸ்காரம் அந்த பரமனுக்குச் செய்யப் படுகிறது, எனக்கில்லை என்று தன்னை தானே விலக்கிக் கொள்ளுதல் இத்தகைய வீழ்ச்சியில் இருந்து காத்திடும்.
நமஸ்காரம் எவ்வாறு செய்ய வேண்டும்? சிரம் தாழ்த்தி நமஸ்காரம்; கைகளைக் கூப்பி நமஸ்காரம் (இரண்டு கைகளும் கூப்பியே நமஸ்காரம் செய்ய வேண்டும். ஒரு கையால் செய்யக் கூடாது); கீழே குனிந்து கால்களைத் தொட்டு, பாத தூசியை தன் தலையில் ஏற்றுக் கொண்டு நமஸ்காரம்; ஸாஷ்டாங்க நமஸ்காரம் (உடலின் எட்டு அங்கங்கள் பூமியை ஸ்பர்ஷம் செய்த வண்ணம் நமஸ்காரம்,); எந்த முயற்சியும் இல்லாமல் முழு உடலையும் பூமியில் கிடத்தி நமஸ்காரம்; என்று பல விதங்களில் நமஸ்காரம் செய்யலாம். [பெண்ணின் ஸ்தன பாகமும் ஜனன உறுப்பும் புனிதமானவை. அவை பூமியைத் தொடக் கூடாது. எனவே, பெண்கள் தம் உடலைச் சுருக்கி, பஞ்சாங்க நமஸ்காரமே செய்ய வேண்டும்.] பெரியவர்களை நமஸ்காரம் செய்து, தன் ப்ரவரம், கோத்ரம், வேத சாகை, பெயர் முதலியவற்றைக் கூறி அபிவாதனம் செய்திடும் ஒரு அழகான பழக்கம் ப்ராஹ்மணர்கள் இடையே உள்ளது. (ஸந்யாஸிகளுக்கு நமஸ்காரம் மாத்ரமே. அபிவாதனம் சொல்லக் கூடாது.)
'கை வீசிய படி கோவிலுக்குச் செல்லக் கூடாது' என்பார்கள். ஏதாவது எடுத்துச் செல்ல வேண்டும் என்பதல்ல அர்த்தம். கைகளைக் கூப்பி, பணிவுடன் வணங்கிய படி செல்ல வேண்டும் என்பதே அர்த்தம். கோவிலில் எல்லா இடங்களிலும் விழுந்து வணங்கக் கூடாது. த்வஜ ஸ்தம்பத்தின் அருகில் மாத்ரமே நமஸ்காரம் செய்ய வேண்டும். பொதுவாக, கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி நமஸ்காரம் செய்ய வேண்டும்.
'மத்யாஜி மாம் நமஸ்குரு' (அத் 9 - ஸ்லோகம் 34) "என்னை வழிபட்டு என்னை நமஸ்கரித்திடு", என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் கீதையில். ஸர்வ தரமான் பரித்யஜ்ய மாமேகம் ஷரணம் வ்ரஜ" (அத் 18 - ஸ்லோகம் 66) என்று ஆணை இடுகிறார். 'என்னை ஷரண் அடைந்திடு. எல்லா பாபங்களில் இருந்தும் உன்னை விடுவிக்கிறேன்' என்று வாக்குறுதி அளிக்கிறார்.
அனைவருக்கும் நமஸ்காரம்.
Comments
Post a Comment