ॐ
உள்ளிருந்து தேடல் இல்லை என்றால்...
உள்ளிருந்து தேடல் இல்லை என்றால்...
அவன் தொலை பேசியில் பேசிக் கொண்டிருந்தான். "உங்களை ரெகுலராக ஸந்தித்து உங்கள் வழிகாட்டுதல் பெற விரும்புகிறேன். ஆனால், நீங்கள் எங்கோ தொலை தூரத்தில், வேறு மாநிலத்தில் இருக்கிறீர். என்ன செய்ய?" அவன் வருந்தினான்.
ஆறு மாஸங்கள் கழிந்த பின்....அவனுக்கு அவரிடம் இருந்து ஒரு தொலை பேசி அழைப்பு. "ஓ! நீங்கள் தமிழ் நாட்டிற்கே வந்து விட்டீரா? ரொம்ப ஸந்தோஷம். 200 கிலோமீட்டர் தூரம் தானே.. பைக்கில் கூட வந்து விட முடியும். மாஸத்தில் ஒரு தடவையாவது சந்தித்து விடுகிறேன். நிறைய பேச வேண்டும். நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்." அவன் பதில் அளித்தான்.
நான்கைந்து மாஸங்களுக்குப் பிறகு அவரை அழைத்தான். "எங்கே அசைய முடிகிறது? ஒன்றன் பின் ஒன்றாக பிரச்னைகள்.. இப்பொழுதுதான் தொழிலும் ஓரளவு (set) செட் ஆகத் தொடங்கி உள்ளது. ஆனால், வருவேன், நிச்சயம் வருவேன். உங்களை அவசியம் ஸந்திக்க வேண்டும்."
ஒரு வர்ஷம் கழிந்தது. மீண்டும் அவரிடம் இருந்து அழைப்பு. "ஓஹோ! ஹோ! ரொம்ப ரொம்ப ஸந்தோஷம். எங்கள் ஊருக்கே வந்து விட்டீர். ஆஹா! ஜாகை? ஓஹோஹோ! நீங்கள் சொல்லும் இடம் நம் வீட்டில் இருந்து ரொம்ப பக்கம். இரண்டு தெருக்கள் தாண்டினால் போதும். நான் பெரும் பாக்யசாலி. தினம் தினம் முடியா விட்டாலும் வாரத்தில் ஒரு முறையாவது உங்கள் காலடியில் ஒரு சில மணித் துளிகளாவது செலவழிக்க வேண்டும். நான் அத்ருஷ்டாசாலி தான்." அவன் குரலில் உத்ஸாஹம் தொனித்தது.
ஆறு எட்டு மாஸங்களுக்குப் பிறகு அவன் வீட்டு வாசற்கதவு தட்டப் பட்டது. கதவு திறந்த அவன், வாசற்படியில் அவரைப் பார்த்தான். "வாங்க, வாங்க. ஏய்! யார் வந்திருக்கிறார் பார். இவ்வளவு அருகில் இருந்தும் நம்மால் போக முடியவில்லை. அவரே வந்து விட்டார். வாங்க, வாங்க." பரபரப்பாக வரவேற்றான். "என்னது! நம் வீட்டில் ஒரு வாரம் தங்கப் போகிறீரா? What a surprise? அமருங்கள். இதோ, பத்து நிமிஷங்களில் நம் வீட்டு (guest) கெஸ்ட் ரூமைத் தயார் செய்கிறேன். ஸாதுக்களை வரவேற்கவும் ஸாதுக்களுக்கு ஆதித்யம் (playing host) செய்யவும் தானே இந்த வீடே கட்டி இருக்கிறேன். Feel Comfortable. ஏதாவது வேண்டும் என்றால் ஒரு குரல் கொடுத்தால் போதும். உங்கள் அறையிலேயே கொண்டு வந்திடுவோம்."
ஒரு வாரம் கழித்து, அவன் வீட்டில் உள்ள அனைவரும் வீட்டு வாசலில், அவரை வழி அனுப்ப. எல்லோரும் அவர் காலைத் தொட்டு வணங்கினர். "நான் எவ்வளவு பெரும் மூடன் பாருங்கள். எங்கள் வீட்டிலேயே ஒரு வாரம் இருந்திருக்கிறீர். ச்சே! பெரும் துர் பாக்யசாலி.. ஆனால், என்ன செய்வது. காலையில் எழுந்தவுடன் குழந்தைகளைத் தயார் செய்து பள்ளிக்கு அனுப்புவது பெரும் வேலை. அந்த சில மணி நேரங்கள் மூச்சு விடவும் நேரம் கிடைப்பதில்லை. பிறகு எங்கள் அன்றாட ஓட்டம்.. ஏதோ கொஞ்சம் வாயில் அள்ளிப் போட்டு, வெளியே ஓடுகிறோம். இரவு திரும்பினால் குழந்தைகளின் home work, assignment...என்று .. நேரம் எப்படிப் போகிறது என்றே அறியாமல் மாலை நேரமும் முடிந்து விடுகிறது. வீட்டில் 56 இஞ்ச் HD TV இருந்தும் டிவி கூட பார்ப்பதில்லை. நான் ஒரே ஒரு சீரியல் தான் பார்ப்பேன். நல்ல கதை. பிறகு செய்திகள், விவாதம் பார்த்து விட்டு, சாப்பிட்டு விட்டுப் படுக்கத்தான் நேரம். சரி, சனி ஞாயிறு உங்களை வந்து பார்க்கலாம் என்றால் ... அன்றுதான் கொஞ்சம் relaxed ஆக இருக்கிறோம். காலைச் சிற்றுண்டியே 10.30 / 11.00 மணிக்குத்தான் என்றால் பாருங்களேன். கொஞ்சம் டிவி, கொஞ்சம் outing. இதற்கு நடுவில் friends வேறு. Social Commitments வேறு. சனி ஞாயிறுதான் விடுமுறை என்று பெயர். ஆனால் அன்று தான் ஓட்டம் அதிகம். நீங்களே சொல்லுங்கள். ஏது நேரம்? நேரத்தை எப்படிக் கண்டு பிடிப்பது? இதற்கெல்லாம் நாம் ஆசைப் படக் கூடாது. எல்லோரையும் போல இருந்து விட வேண்டும். என்ன நான் சொல்வது??"
அவன் தடுமாறிக் கொண்டிருந்தான். அவர் புன்னகைத்த படி கேட்டுக் கொண்டிருந்தார்.
வாழ்நாள் கழிந்து விடுகிறது..
Comments
Post a Comment