ॐ
யந்த்ராரூடானி மாயயா...
"பரமாத்மன் தனது மாயையால் ஜீவன்களை மஹா யந்த்ரத்தின் மேல், ஒரு மாபெரும் யந்த்ரத்தின் மேல் ஏற்றி, தனது விருப்பப்படி ஜீவன்களை ஆட்டுவிக்கிறான்." கீதையின் 18வது அத்தியாயத்தின் 61வது ஸ்லோகம் இது. வாக்கு வாதங்களை எழுப்பக் கூடிய ஸ்லோகம் இது. ஆனால், நம்மைச் சுற்றி நிகழும் பல நிகழ்ச்சிகள் நமக்கு மீண்டும் மீண்டும் இக்கருத்தினை வலியுறுத்தும் வகையில் அமைகின்றன.
நேற்று வரை துள்ளிக் குதித்து ஆட்டமும் பாட்டமுமாக இருந்தவர், இன்று அவருடைய திட்டத்தில் இல்லாத பாதையில் பயணித்து, விபத்தில் மாட்டி, முடமாகி, படுக்கையிலோ நாற்காலியிலோ முடங்கி விடுகிறார்.
பத்து நிமிஷங்கள் முன் பேருந்தின் ஜன்னல் இருக்கையில் அமர்ந்திருக்கிறார். அருகில் உள்ளவர் சண்டையிட்டு, வாக்குவாதம் செய்து இவருடைய இருக்கையை அடைகிறார். பத்து நிமிஷம் கழித்து நடந்த விபத்தில் ஜன்னல் அருகில் புதிதாக அமர்ந்திருக்கும் அந்த புதிய நபர் மட்டும் இறக்கிறார்.
ரயில் கேட் அருகில் பல வண்டிகள் நின்று கொண்டிருக்கின்றன. இரண்டு சக்ர வாஹனம் ஒட்டி வந்த அவரும் கேட் திறப்பதற்காகக் காத்திருக்கிறார். மேலே பறக்கும் கழுகு ஒன்று தான் ஏந்தி வந்த பாம்பை நழுவ விடுகிறது. அப்பாம்பு இவர் தோளின் மேல் விழ்கிறது. விழுந்துடன் கழுத்தில் கொட்டுகிறது. இவர் இறக்கிறார்.
பள்ளிக்கூடம் ஏற்பாடு செய்திருந்த பிக்னிக்கில் அந்த ஆசிரியர் போவதாகத் திட்டம் இல்லை. மாணவர்களுடன் போக வேண்டிய ஆசிரியர் உடல் நிலை மோசமானதால் முந்தைய இரவுதான் இவரைப் போகச் சொல்லி உத்தரவு வந்தது. இவரும் ஸம்மதித்தார். அடுத்த நாள் மாணவர்களுடன் சென்றார். சென்ற இடத்தில் நீர் நிலையில் மூழ்கி இறந்தார்.
விமான நிலையத்திற்குச் சென்றார். நேரம் கழித்து வந்தார் என்று கூறி அவருக்கு அனுமதி மறுக்கப் பட்டது. ஆயிரம் மன்றாடியும் போர்டிங் பாஸ் கிடைக்கவில்லை. மன வருத்தத்துடன் வீடு திரும்பினார். "விமானம் மும்பையில் இருந்து கிளம்பிய சில நிமிஷங்களில் வெடித்துக் கடலில் விழுந்தது. அனைவரும் இறந்தனர்" என்ற செய்தி இவரது வீட்டில் இவருக்காகக் காத்திருந்தது.
விபத்து, மரணம், போன்ற நிகழ்வுகள் திடீர் என்று (Dramatic) நிகழ்ந்து விடுகின்றன என்பதால் இத்தகைய நிகழ்வுகள் உடனுக்குடன் நினைவிற்கு வருகின்றன. ஆனால், ஜீவன்களான நாம் அவன் கையால் ஆட்டுவிக்கப் படுகிறோம் என்பதை வாழ்க்கையின் மற்ற நிகழ்வுகள் மூலமும் உணர முடிகிறது.
பல வர்ஷங்கள் முன்னர் அறிமுகமான ஒரு நபர் திடீர் என்று வாழ்க்கையில் மீண்டும் வருகிறார். வாழ்க்கையின் திசை மாறி விடுகிறது.
சிறு வயஸில் அறிமுகப் படுத்தப் பட்ட ஒரு விஷயம் மறந்து போகிறது. வாழ்க்கை ஓட்டம் வேறு ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டு ஓடுகிறது. பல வர்ஷங்கள் கழித்து, மறக்கப் பட்ட அந்த விஷயம் திடீர் என்று மீண்டும் வாழ்க்கைத் தடத்தில் வருகிறது. வாழ்க்கையின் திசை, வாழ்க்கையின் மையம் மாறி விடுகிறது.
எப்பொழுதோ பட்ட சிறிய அடி பல வர்ஷங்கள் கழித்து பெரும் பிரச்னையாக மாறி வாழ்க்கையின் முன்னேற்றத்தைத் தடுத்து விடுகிறது. வர்ஷம் முழுதும் படித்து சிறப்பாகத் தயார் செய்திருந்தும், பரீக்ஷைக்கு முதல் நாள், கையில் ஸ்லாம்பு ஏறியதால் பரீக்ஷை எழுத முடியாமல் போன 12 'ம் வகுப்பு மாணவனையும் அறிவேன். இரண்டு வர்ஷங்கள் முன்னர் காலில் அடிபட்டு, ஏற்பட்ட hairline fracture பெரிய வீக்கமாக வளர்ந்து காய்ச்சலாக வெளிப்பட்டதால் IAS பரீக்ஷையைத் தவற விட்டவரையும் அறிவேன்.
இஞ்ஜினியரிங் படித்து பெரிய வேலையில் இருப்பவன் திடீர் என்று இசைத் துறையில் நுழைந்து விடுகிறான். பெரிய படிப்பு படித்து விட்டு அமெரிக்காவில் பெரிய வேலையில் இருப்பவன் எல்லாவற்றையும் விட்டு விட்டு, பாரதம் திரும்பி, வேதம் படிக்கத் தொடங்கி விடுகிறான். கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று வருந்திய மாணவன் பிற்காலத்தில் கல்லூரியின் முதலாளி ஆகி விடுகிறான். சிறு வயஸில் பள்ளியில் ஸஹ மாணவ/மாணவியாக இருந்தவர் பிற்காலத்தில் திருமண பந்தம் மூலம் குடும்பத்தில் ஒருவராக இணைந்து விடுகிறார். பல வர்ஷங்கள் முன்னர் "இது பயன் படாது" என்று பரண் மேல் தூக்கி எறியப் பட்ட ஒரு பொருள் மிகச் சரியான தருணத்தில், மீண்டும் கண்ணில் படுகிறது. மிக முக்யமான கார்யத்தைச் ஸாதிப்பதில் துணை புரிகிறது. நாம் அனைவரும் கண்டிருக்கக் கூடிய காட்சிகளே இவை.
அறிமுகமாகும் ஒவ்வொரு நபரும், நடக்கும் சிறு சிறு நிகழ்வுகளும், கிடைக்கும் ஒவ்வொரு அனுபவமும், ஏதோ ஒரு காரணத்துடன் தான் என்பது ஸத்யம். காரணம் இல்லாமல், 'சும்மா' எதுவும் நிகழ்வதில்லை. அவன் காய் நகர்த்துகிறான். நம் வாழ்க்கை நகருகிறது.
என் வாழ்க்கையின் சில அனுபவங்கள்....
சிறு வயது முதல் ரேடியோ செய்தி கேட்கும் பழக்கம் தாத்தா மூலம் கிடைத்திருந்தது. வீட்டில் நடந்த சர்ச்சைகள் மூலம் அரசியலில் ஆர்வம் இருந்தது. 7 'ம் வகுப்பில் துக்ளக் வாசகன் ஆனேன். 11 'ம் வகுப்பு படிக்கும் பொது நாட்டில் emergency அறிவிக்கப் பட்டது. மனஸில் இந்திரா காந்திக்கு எதிரான தீவ்ரக் கருத்துக்கள் வளர்ந்தன. 1977 'ல் தேர்தல் நடந்த போது ஜனதா கட்சிக்கு ஆதரவாக வேலை செய்தேன். 77'ல் நாக்பூர் அருகில் பூடி போரி (ButiBori) என்ற நதியில் வெள்ளம் வந்தது. ஜனதா கட்சி சார்பாக வெள்ள நிவாரணப் பணி நடக்கப் போவதாகவும், விருப்பம் உள்ளவர்கள் கட்சி அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றும் ஒரு மிகச் சிறிய செய்தி நாக்பூர் செய்தித்தாளில் வந்தது. என் கண்ணிலும் பட்டது. வீட்டில் இருந்து 10 கி மீ தூரம் இருந்த அந்த அலுவலகத்திற்கு காலை 7 மணிக்குச் சென்றேன். அதிக எண்ணிக்கையில் நபர்கள் வராததால் நிகழ்ச்சி ரத்தானது என்றும், அடுத்த சதுக்கத்தில் இருந்து RSS சார்பாக 10/15 பஸ்கள் வெள்ள நிவாரணப் பணிக்குச் செல்வதாகவும் கட்சி அலுவலகர் சொல்லி விட்டார். நான் அங்கு சென்றேன். வெள்ள நிவாரணப் பணியில் கலந்து கொண்டேன். எனக்கு RSS அறிமுகமானது. என் வாழ்க்கையின் திசை மாறி விட்டது.
ஸங்கப் பணியில் இருந்து ஒய்வு பெற்ற பின்னர், மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று முடிவு எடுத்திருக்கவில்லை. நாஸிக்கில் ஒரு ப்ரபல ஸ்பார்க் ப்ளக் (Spark Plug) கம்பெனியின் பொது மேலாளர் ஆக இருந்த என் கல்லூரி நண்பனைச் சந்திக்கச் சென்றேன். கல்லூரி காலத்தில் நன்றாகப் பாடியவன். தபலா வாசித்தவன். அக்காலத்தில் உத்ஸாஹமாகவும், ஆனந்தமாகவும் இருந்த அவன் அன்று சோர்ந்து காணப் பட்டான். "ஏனடா? தபலா வாசிப்பதுண்டா? பாடல்கள் பாடுகிறாயா?" என்று கேட்டேன். பெருமூச்சு விட்டான். "மாசம் 75,000 ரூபாய் வாங்குபவனுக்கு என்ன கவலை இருக்க முடியும்?" தன் எதிர்க்காலத்தைப் பற்றிய கவலை என்றான். இந்த கம்பெனி இருக்குமா இருக்காதா என்ற கவலை. வேறு ஏதாவது நல்ல வேலை தேடும் கவலை. என்றான். "மனைவியுடன் அவ்வப்போது வெளியில் செல்கிறாயா?" "நேரம் இல்லை." பத்தாம் வகுப்பில் இருக்கும் மகனுடன் அளவளாவுகிறாயா?" "எங்கு நேரம்?" "வயஸான தாயாருக்கு அருகில் உட்காருகிறாயா?" பெருமூச்சு தான் பதில். "நீ செத்து விட்டால் உன் இடத்தில் மற்றவனை நியமிக்க இந்த கம்பெனிக்கு எவ்வளவு நேரம் ஆகும்?" நான் கேட்டேன். வறண்ட சிரிப்புடன் "இதோ வாசலில் 8 / 10 துணை மேலாளர்கள் தயாராக காத்திருக்கிறார்கள் என் சீட் எப்பொழுது காலியாகும் என்று." "உன் மனைவிக்கும், மகனுக்கும் தாயாருக்கும் உன்னுடைய replacement எவ்வளவு நேரத்தில் கிடைக்கும் (நீ செத்தால்)?" என்று நான் கேட்டவுடன் அவன் சீரியஸ் ஆனான். "எங்கு உன் தேவை அதிகம் இருக்கிறதோ அங்கு நீ நேரம் கொடுப்பதில்லை. எங்கு உன் கைநாட்டு மட்டும் தேவையோ அங்கு ஒரு நாளின் 15/18 மணி நேரத்தை செலவிடுகிறாய். இது ஞாயமா? வாழ்க்கையை கொஞ்சம் balance செய்ய வேண்டாமா?" நான் திட்டமிட்டு, சிந்தித்துச் சொன்ன பதில் இல்லை இது. ஆனால், என் வாழ்க்கைக்கு ஒரு திசை கிடைத்தது இந்த பதிலிலிருந்து. அவன் என்னை மூன்று நாட்கள் தங்க வைத்து, கம்பெனியின் மேலாளர்களுக்கு ஒரோரு மணி நேரம் வகுப்பு எடுக்கச் சொன்னான். கீதை படிக்க வேண்டும் என்ற முடிவிற்குக் காரணமானது அவனது இந்த வேண்டுகோள். பணம் ஸம்பாதிப்பதற்காக எந்த ஒரு வேலைக்கும் செல்ல வேண்டாமே என்ற எண்ணத்தை என் மனஸில் விதைத்தது இந்த ஸம்பவம்.
சென்னையில் பிஜேபியின் அகில பாரத செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தின் துவக்க நிகழ்ச்சியில் நான் வந்தே மாதரம் பாட வேண்டும். பொதுவாக நன்றாகப் பாடுபவன், நல்ல குரல் வளம் கொண்டவன். என்ன நடந்தது, ஏன் நடந்தது, தெரியவில்லை. ஆனால், அன்று குரல் உடைந்து, மிக மோசமாகப் பாடினேன். நன்றாகப் பாடி இருந்தால்??? ப்ரதமர் வாஜ்பாய் முதல் கட்சியின் அனைத்துத் தலைவர்களும் இருந்த அக்கூட்டத்தில் ..அவர்களின் கவனத்தில் விழுந்து, சிறப்பானதொரு அறிமுகம் கிடைக்கப் பெற்று, ...என் வாழ்க்கை வேறு திசையில் சென்றிருக்க முடியும். பரமனது விருப்பம் அதுவல்ல போலும்!!
நம் கையில் எதுவும் இல்லையா? என்ற ஒரு கேள்வி எழ வாய்ப்புண்டு. இல்லை என்பதே என் கருத்து. நாம் செயல்கள் புரிய வேண்டும். முயற்சிகள் செய்ய வேண்டும். நம் ஸ்வபாவப்படி செய்ய வேண்டும். "நான் செய்கிறேன்" என்ற எண்ணம் மேலோங்காமல், "நான் அவன் கைகளில் ஒரு கருவி மாத்ரமே" என்ற உணர்வுடன் செய்ய வேண்டும். "நான் எதிர்ப்பார்த்திடும் வகையில் விளைவுகள் இருந்திட வேண்டும்" என்ற பிடிவாதம் இல்லாமல் செய்ய வேண்டும். எல்லாம் அவன் விருப்பம் என்ற ஆழ்ந்த ஸமர்ப்பண எண்ணத்துடன் செய்ய வேண்டும். அரைகுறை மனஸுடன் செய்திடாமல் முழு ஈடுபாட்டுடன் செய்திட வேண்டும். நம் கைகளில் இருப்பது இது மட்டும் தான்.
யந்த்ராரூடானி மாயயா ... மிக அழகான ஸ்லோகம் இது.
தமேவ சரணம் கச்ச ...அவனது சரண் அடைவோம்.. அடுத்த ஸ்லோகம் சொல்கிறது.
Comments
Post a Comment