ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் 001
मामकाः पाण्डवाश्चैव ... (अध्याय १ - श्लोक १)
மாமகாஹ பாண்டவாஶ்சைவ ... (அத்யாயம் 1 - ஶ்லோகம் 1)
Maamakaah Paandavaaschaiva....(Ch I - Shloka 1)
இவை குருட்டு ராஜா த்ருதராஷ்ட்ரனின் வார்த்தைகள். என்னுடைய (புதல்வர்களும்) பாண்டுவின் (புதல்வர்களும்) என்பது அர்த்தம். பாண்டு தென் ஆப்ரிகா அல்லது தென் அமெரிக்காவை சார்ந்தவனா? இவனுக்கு சம்பந்தம் இல்லாத 'ஏதோ' ஒரு மனிதனா? இவனுடைய சொந்த தம்பி. ஆனால், பிரித்துப் பேசுகிறான். என்னுடைய ...பாண்டுவினுடைய... தம்பியின் குழந்தைகளைத் தன் குழந்தைகளாகக் கருதுவது நம் பாரத நாட்டில் உள்ள மிகச் சாமான்ய மனிதனின் பண்பு. இவனோ அரசன். பெருமை வாய்ந்த வம்சத்தில் பிறந்தவன். சிறந்த ஞானிகளின் வழிகாட்டினைப் பெற்றவன். எனினும், இவ்வாறு பேசுகிறான்...
ஒருவன் மனஸில் உள்ளதைத் தான் பேசுவான். இல்லை. அவனுள் அடியாழத்தில் புதைந்திருக்கும் அவனது பாவம் தான் வார்த்தைகளாகவும் செயல்களாகவும் வெளிப்படுகின்றன. (மனப்பாடம் செய்ததை ஸ்வய நினைவுடன் பேசும்போது மட்டும் பாவனையை மறைப்பதில் வெற்றி அடையலாம்.) பாவனைதான் ஒருவனின் Personality. 'என்னுடைய - எனது இல்லை' என்பதுதான் த்ருதராஷ்ட்ரனின் personality. குருக்ஷேத்ர யுத்தத்தின் மூல காரணமே இதுதான்...
ஹஸ்தினாபுர ராஜ்யம் என்னுடையது. என்னிடம் இருந்து அந்யாமாக பறிக்கப் பட்டது. நான்தான் ஹஸ்தினாபுர ஸிம்ஹாஸனத்திற்கு உண்மையான அதிகாரி. எனக்குப் பிறகு என்னுடைய புதல்வன் துர்யோதனனுக்கே அதன் மீது உரிமை."
"துர்யோதனன் என்னுடையவன். அவன் என்ன செய்தாலும், எப்படி நடந்து கொண்டாலும் என்னுடையவன். அவனுக்கு எதிராக இருப்பவர்கள் என்னுடையவர்கள் இல்லை. அவனது எதிரிகள் எனக்கும் எதிரிகள்."
எனினும் , த்ருதராஷ்ட்ரன் துர்யோதனன் அளவிற்கு அடாவடித்தனம் இல்லாதவன் ... அவன் தர்மம் எது என்பதைத் தெளிவாக அறிந்திருந்தான். அவனுள் தர்மம், 'என்னுடைய' என்ற மோஹம் இவை ரெண்டிற்கும் இடையே நிரந்தர போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ஆனால் , அவன் பலஹீனமானவன் ... 'என்னுடைய' என்ற உணர்வின் விளைவு தர்மத்திற்கு எதிராக இருப்பதை அறிந்தும், அவனால் தர்மத்தின் பக்கம் உறுதியாக நிற்க முடியவில்லை. பலஹீனமானவன் மீது கோபம் வராதல்லவா? பரிதாப உணர்வுதான் வரும் ... ஒரு புழுவின் மீது கோபம் வருமா ? [நினைவில் கொள்ளுங்கள். அடுத்த முறை உங்களுக்கு ஒருவர் மீது கோபம் வந்தால் நீங்கள் அவரை உங்களை விட பலமானவர் என்றும் உங்களையே பலஹீனமானவர் , helpless என்று கருதுகிறீர்கள் என்று அர்தம்.] அதனால்தான், மஹாபாரதம் படிப்பவர்களின் உள்ளங்களில் த்ருதராஷ்ட்ரன் பற்றி கோபம் வருவதில்லை. மாறாக, பரிதாப உணர்வுதான் வருகிறது. (கோபம் வராததற்கு மற்றொரு காரணமும் உண்டு. நாமும் அவனைப் போல் இத்தகைய போராட்டத்தில் சிக்கியவர்தானே !!!)
Comments
Post a Comment