ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் 002
सेनयोरुभयोर्मध्ये ... (अध्याय १ - श्लोक २१, २४ ; अध्याय २ - श्लोक १०.)
ஸேனயோருபயோர் மத்யே ... (அத்யாயம் 1 - ஶ்லோகம் 21, 24. அத்யாயம் 2 - ஶ்லோகம் 1௦).
Senayorubhayor madhye ... (Ch 1 - Shloka 21 & 24; Ch 2 - Shloka 10).
இந்த சொற்றொடர் கீதையில் மூன்று இடங்களில் வருகிறது. ஒரு இடத்தில் (அத்யாயம் 1 - ஶ்லோகம் 21) அர்ஜுனனும் மற்ற இரண்டு இடங்களில் ஸஞ்ஜயனும் இவ்வார்தைகளைப் பேசுகின்றனர். (ஸஞ்ஜயன் குருட்டு அரசன் த்ருதராஷ்டிரனின் தேரோட்டி. வேத வ்யாஸரிடம் திவ்யக் கண்களைப் பெற்றவன். குருக்ஷேத்ர யுத்தக் காட்சிகளை த்ருதராஷ்டிரனுக்கு எடுத்துக் கூறியவன் ஸஞ்ஜயன்.)
ஶ்லோகம் 21'ல் அர்ஜுனன் வில்லை உயர்த்திப் பிடித்து, தனது தேரோட்டியான ஸ்ரீ க்ருஷ்ணனுக்குக் கட்டளை இடுகிறான். "எனது தேரினை இரண்டு ஸேனைகளுக்கும் இடையில் கொண்டு சென்று நிறுத்து, அச்யுதனே !" என்கிறான். இந்த தருணத்தில் அர்ஜுனனிடம் போரிடும் ஆர்வமும் உத்ஸாஹமும் காணப் படுகிறது.
இந்த ஶ்லோகத்தில் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன் வேலைக்காரனாகிறார். அர்ஜுனன் ஒரு வேலைக்காரனுக்குக் கட்டளை இடுவதைப் போல ஸ்ரீ க்ருஷ்ணனுக்குக் கட்டளை இடுகிறான். பகவான் நம் வேலைக்காரனாகவும் ஸித்தமாக இருக்கிறான் என்பதை உணர்த்திடும் ஶ்லோகம் இது.
ஶ்லோகம் 24'ல் ஸ்ரீ க்ருஷ்ணன் யஜமான் அர்ஜுனனின் கட்டளைக்குப் பணிந்து அவனது தேரினை இரு ஸேனைகளுக்கும் இடையில் நிறுத்துகிறான். அத்துடன் நின்று விடாமல், தன் பக்தன் அர்ஜுனன் மீதுள்ள ப்ரியத்தை வெளிப்படுத்துகிறான். இந்த யுத்தத்தில் பாண்டவர் அணியில் அர்ஜுனன் மீது பெரும் பாரம் இருந்தது. பாண்டவர்கள் தம் வெற்றிக்கு அர்ஜுனனையே பெரிதும் நம்பி இருந்தனர். யுத்தமோ உணர்ச்சிக் கொந்தளிப்பு நிறைந்த ஒரு நிகழ்வு. அர்ஜுனனிடம் இதைத் தாங்கக் கூடிய மன உறுதி உள்ளதா என்று ஶோதித்துப் பார்க்க விரும்புகிறான் ஸ்ரீ க்ருஷ்ணன். எதிரணியை மட்டும் பார்க்க விரும்பிய அர்ஜுனனிடம் "இரு பக்கமும் குழுமி இருக்கும் குரு வம்ஶத்தினரைப் பார், அர்ஜுனா" என்கிறான். ரெண்டு பக்கமும் பார்த்த அர்ஜுனன் இரு அணிகளிலும் 'என்னுடைய' வர்களே உள்ளனர் என்பதைப் பார்த்து சோர்ந்து போனான். போர் புரிய மாட்டேன் என்று கூறி தேரின் பின் இருக்கையில் குலைந்து விட்டான்.
மூன்றாவது முறை இச்சொற்றொடர் வரும் போது அர்ஜுனன் பரிதாப நிலையில், சோர்ந்த நிலையில், கண்ணீரும் கம்பலையுமாய் இருக்கிறான். இப்பொழுது ஸ்ரீ க்ருஷ்ணன் அர்ஜுனனுக்கு வழிகாட்டும் ஆசிரியனாக, அவன் உள்ளத்தில் ஒளியேற்றும் குருவாக வெளிப்படுகிறான்.
மநுஷ்யனின் மனஸின் தன்மையை வெளிப்படுத்துகின்றது இந்த சொற்றொடர். ஒரு க்ஷணம் மன உறுதியுடன் காணப்படும் மநுஷ்யன் அடுத்த க்ஷணமே உறுதி குலைந்து சோர்ந்து விடுகிறான் என்பதை பறை சாற்றுகிறது இந்த சொற்றொடர்.
பகவானின் க்ருபையை, அருளை, பக்தனை காத்து அரவணைத்திடும் அவனது அன்பை வெளிப்படுத்துகிறது இந்த சொற்றொடர். அவன் தனது பக்தனுக்காக எதுவும் செய்யத் தயார். வேலைக்காரன் ஆகவும் தயார். அதே ஸமயம் பக்தனை கைவிடாமல், வீழ்ந்து விடாமல் அவனைக் காத்து, அவனை உயர்த்தி தம்முடன் இணைத்திடுபவர் பகவான் என்பதை வலியுறுத்தும் சொற்றொடர் இது.
Comments
Post a Comment