ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் 004
ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்ஸ்யசே மஹீம் ..(அத்யாயம் 2 - ஶ்லோகம் 37)
हतो वा प्राप्स्यसि स्वर्गम् जित्वा वा भोक्ष्यसे महीम् (अध्याय 2 - श्लोक 37)
हतो वा प्राप्स्यसि स्वर्गम् जित्वा वा भोक्ष्यसे महीम् (अध्याय 2 - श्लोक 37)
Hatho vaa praapsyasi Swargam jitvaa vaa bhokshyase Maheem (Chapter 2 - Verse 37)
இந்தச் சொற்றொடர் விஶேஷமான ஒன்று. "(யுத்தத்தில்) நீ கொல்லப் பட்டால் ஸ்வர்கத்தினை எய்திடுவாய். வென்றால் ராஜ போகத்தினை அநுபவிப்பாய்." பாரதத்து க்ஷத்ரியர்கள் தம் முழு திறனையும் யுத்த முயற்சியில் செலுத்திட இந்த கண்ணோட்டமே காரணமாக இருந்தது எனலாம்.
இந்தச் சொற்றொடர் ஒரு கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது. எந்த ஒரு முயற்சிக்கும் ரெண்டு வகை ஃபலன்கள் கிடைக்க வாய்ப்புண்டு. ஒன்று அநுகூலமானது, விரும்பப்படுவது. மற்றொன்று எதிர் மறையானது, விரும்பப்படாதது. ஒருவன் இந்த ரெண்டு வாய்ப்புகளால் உந்தப்பட்டு எதிர் திஶைகளில் அலைக்கழிக்கப் படும் போது அவனது செயலின் திறன் (efficiency) விழுந்து விடுகிறது. ரெண்டு வாய்ப்புகளும் தனக்கு ஆதரவானவையே, அநுகூலமானவையே என்று உணர்ந்திடும் போது, செயல்திறன் நூற்றுக்கு நூறாக மிளிர்ந்திடும் வாய்ப்பு அதிகரிக்கிறது. வாழ்க்கையின் எல்லா துறைகளுக்கும் இது பொருந்தும் என்றாலும் ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனிடம் யுத்த களத்தில் பேசிக் கொண்டிருப்பதால் அதற்கேற்ற சொற்களை பயன் படுத்துகிறார்.
யுத்தத்தின் விளைவாக ரெண்டு வாய்ப்புகள் உண்டு. "யுத்தம் செய், வெற்றி கொள்"; "ஸாஹஸத்துடன் சண்டையிடு, வீர மரணம் எய்திடு". 'இரண்டுமே உனக்கு அனுகூலமானவை' என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன். "யுத்தத்தில் ஜயித்தால் உலகத்து உன்னதமான ஸுகங்களை, ராஜ போகங்களை அனுபவிப்பாய். யுத்தத்தில் நீ கொல்லப்பட்டால் வீர ஸ்வர்கத்தினை அடைந்திடுவாய், தெய்வீக ஸுகங்களை அநுபவித்திடுவாய். பூ விழுந்தாலும் தலை விழுந்தாலும் உனக்கு ஸாதகமே" என்கிறார். 'மூன்றாவது வாய்ப்பு (தோல்வி பெற்றும் உயிருடன் இருப்பது) இருந்தாலும், அவ்வாய்ப்பு உனக்கு மறுக்கப் படுகிறது', என்று சொல்லாமல் சொல்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.
ஹிந்தியில் கரோ யா மரோ (करो या मरो), தமிழில் செய் அல்லது செத்து மடி, மற்ற பாரதீய மொழிகளில் இதே அர்த்தம் கொண்ட பொன் மொழிகள் உண்டு. யுத்தத்தில் எதிரியால் சிறைப் பிடிக்கப் பட்டு அவனது அடிமையாக காலம் கழிப்பதும் யுத்த களத்திற்குப் புறம் காட்டி ஓடிப் பிழைப்பதும் பாரதீய க்ஷத்ரியன் மிகக் கேவலமாக கருதிடும் வாய்ப்புகள். 18வது அத்யாயத்தில் ஒரு க்ஷத்ரியனை வர்ணித்திடும் போது ஸ்ரீ க்ருஷ்ணன் 'யுத்தே அபலாயனம்' (युद्धे अपलायनम्) என்ற பதத்தினை பயன் படுத்துகிறார். 'யுத்த களத்தில் இருந்து புற முதுகிட்டு ஓடாமை' க்ஷத்ரியனின் அடிப்படை தன்மை என்கிறார். உலகத்தில் மிகச் சிறந்த க்ஷத்ரியர்களை பாரதத் தாய் ஈந்தெடுத்திருக்கிறாள் என்றால் அதற்கு இந்த தன்மையே முக்ய காரணம் என்று சொல்வது மிகையாகாது. நம்முடைய வரலாற்றில் பாண்டிய, ராஜபுத்ர, மராத்திய, சீக்கிய, புந்தேலி வீரர்கள் புரிந்த ப்ரமிக்க வைத்திடும் ஸாஹஸங்கள் ஏராளம் ஏராளம். இன்றைய நவீன காலத்திலும் நம் பாரத தேஶ ஸேனை, சரியான கருவிகள் இல்லாத போதும் விபரீதமான சூழ்நிலைகளிலும் மிகச் சிறந்த போர் வெற்றிகளைப் பெற்றுத் தந்திருக்கிறது.
அதே ஸமயம், இந்த மனப்பான்மை வீரர்களில் தற்கொலை எண்ணமும் போரில் தோல்வியும் ஏற்படவும் காரணமாக இருந்துள்ளது. தோல்வி நிச்சயம் என்ற சூழ்நிலை வரும் போது வீரர்கள் செத்து விட வேண்டும், எப்படியாவது இறந்து விட வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு விட்ட தருணங்கள் நம் வரலாற்றில் பல உண்டு. முதலில் இந்த நியமத்தை உடைத்த பெருமை ஸ்ரீ சிவாஜி மகாராஜாவால் வழி நடத்தப் பட்ட மராத்தியர்களைச் சாரும். ஸ்ரீ சிவாஜி ஒரு புதிய நியமத்தினை முன் வைத்தார். 'யுத்தம் புரி, வெற்றி அடை' என்பதே அது. சூழ்நிலை பாதகமானால் யுத்த களத்தை விட்டு ஓடத் தயங்காதே, பிழைப்பதற்காக அல்ல, மீண்டும் அணி வகுத்து, போரிட்டு, வெற்றி அடைந்திட". ஸ்ரீ சிவாஜி வெற்றி என்ற ஒரே வாய்ப்பினை முன் வைத்தார். ரெண்டாவது வாய்ப்பான 'வீர மரணம்' என்பதை நீக்கி விட்டார்.
RSS என்ற மாபெரும் ஸங்கத்தை தோற்றுவித்த தீர்க தர்ஷியான Dr ஹெட்கேவார் வாழ்க்கையில் அழகான ஒரு ஸம்பவம் உண்டு. ஒரு முறை அவர் ஒரு ஓவியக் கண்காட்சியைக் காண வந்தார். அங்கு 'வாருங்கள், தேஶத்திற்காக உயிர் விடக் கற்போம்' என்ற தலைப்புடன் ஒரு ஓவியம் இருந்தது. Dr ஹெட்கேவார் அந்த தலைப்பிற்கு மாற்று ஒன்றை எடுத்துரைத்தார். 'வாருங்கள். தேஶத்திற்காக வாழக் கற்றிடுவோம்'.
Comments
Post a Comment