ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் 005
व्यवसायात्मिका बुद्धिः एकेह | (अध्याय २ - श्लोक ४१)
வ்யவஸாயாத்மிகா புத்திஹி ஏகேஹ. (அத்யாயம் 2 - ஶ்லோகம் 41)Vyavasaayaatmikaa Buddhihi Ekeha. (Chapter 2 - Shlokam 41)
அர்தம் : கிளைகள் இல்லாத ஒரே புத்தி பரமனை அடைவதிலும், ஆத்மாவை அறிவதிலும் வெற்றி அடைகிறது. வேறொரு விதத்தில் சொன்னால் பரமனை அடைவதற்கு, ஆத்மாவை அறிவதற்கு கிளைகள் இல்லாத ஒரே புத்தி அவஶ்யமான கருவி.
கிளைகள் இல்லாத ஒரே புத்தி என்பது ஒரு மேன்மையான தன்மை. லௌகீக முயற்சிகள் வெற்றி அடைய வேண்டும் என்றாலும், மனஸில் அமைதி நிறைந்திருக்க வேண்டும் என்றாலும், கிளைகள் இல்லாத ஒரே புத்தி (ஏக புத்தி) வேண்டும். ஆயின், இது அடைவதற்குக் கடினமானதும் கூட. பொதுவாக, மநுஷ்யனின் புத்தி பலப்பல கிளைகளுடன் கூடியது. பல திஶைகளிலும் அலையக் கூடியது. அதன் விளைவாக மநுஷ்யனின் முயற்சியும் ஆற்றலும் சிதறி விடுகின்றன. பெரும்பாலான மநுஷ்யர்களில் காணப்படும் 'முடிவு எடுக்க முடியாத தன்மை'க்கும் இதுவே காரணம்.
முடுவெடுத்திடும் வகையில் யோஜனை சொல்வதே புத்தியின் வேலை. ஆயின், "இந்த வைபவத்திற்கு எந்த ஆடையை உடுத்த வேண்டும்", "உணவகத்தில் எந்த தீனியை தருவிக்க வேண்டும்" என்பது போன்ற மிகஸ் ஸாதாரண விஷயத்திலும் ஆயிரம் யோசனைகள் சொல்லக் கூடியது நம் புத்தி. நூற்றுக் கணக்கில் அடுக்கப் பட்டிருக்கும் ஆடைகளில் இருந்து எதைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுக்க முடியாமல் அலமாரி முன் பல நிமிஷத் துளிகளை செலவிடுபவர்கள், கடையில் எதை வாங்குவது என்று முடிவு எடுக்க முடியாமல் மணிக்கணக்கில் செலவிடுபர்கள், (அதிலும் இன்றைய Mall களில் இன்னம் அதிகம்.) ஹோட்டல்களில் ஸர்வர் வந்து என்ன வேண்டும் என்று கேட்ட பின் ஐந்து நிமிஷம் கழித்து வாருங்கள், என்று சொல்லி அவரை திருப்பி அனுப்பி விடுபவர்கள், என்று நம்மைச் சுற்றிலும் பலரைக் காண்கிறோம். தேஹத்திற்கு நோய் ஏற்படும் போது வீட்டு வைத்யத்தில் இருந்து நவீன மருத்துவம் வரை, நண்பர்களும் பத்ரிகைகளும் முன்னர் எப்பொழுதோ கூறியவற்றை நினைவுப் பெட்டகத்தில் இருந்து கிளறி எடுத்து புத்தி அளித்திடும் பற்பல யோஜனைகளின் வலையில் சிக்கித் தவிப்பவர்களைக் காண்கிறோம். எடுத்துப் படிக்க வேண்டிய கல்வித் துறை, தேர்ந்தெடுக்க வேண்டிய தொழில், விடுமுறையில் செல்லக் கூடிய சுற்றுலா ஸ்தலம், வழிபாடு செய்ய இறைவனின் ஒரு உருவம், வழிபாட்டிற்கான வழிமுறை, போன்ற பல விஷயங்களிலும் பற்பல யோஜனைகளை நம் முன் வைக்கிறது பல கிளைகளுடன் கூடிய மநுஷ்ய புத்தி.
ஏக புத்தியை அடைவதற்காக அனைத்து மாற்றுக்களையும், அனைத்து choiceகளையும் அழித்து விடுவதுதான் வழியா? மாற்றுக்கள் எதுவும் இல்லை என்றால் 'ஏக புத்தி' அமைந்து விடுமா? மாற்றுக்களைப் பற்றி அறிந்திடவே இல்லை என்றால் புத்தியில் கிளைகள் தோன்றிட வாய்ப்பு இல்லை. மன அமைதியும் கெட வாய்ப்பு இல்லை. ஆதி கால மநுஷ்யன் அந்நிலையில் நிம்மதியாக வாழ்ந்திருக்கக் கூடும். அனால், மற்ற ஸமுதாயங்களுடன் ஏற்படும் தொடர்புகள், இயற்கையின் இயல்பாகக் காணப் படும் பன்மை, மனிதனின் இயல்பான ஆராயும் மனப்பான்மை ஆகியவற்றின் விளைவாக மநுஷ்யன் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் பற்பல மாற்றுகளை உருவாக்கி உள்ளான். எனவே மாற்றுக்களை அழித்து விட முடியாது.
ஸர்வாதிகார அரசு மற்றும் ஸமூஹக் கட்டுப்பாடுகளின் மூலம் மாற்றுக்கள் ஜனங்கள் கைக்கு எட்டாமல் செய்து விடலாமா? இவ்வழியும் வரலாற்றில் பல முறை பல ப்ரதேஶங்களில் முயற்சிக்கப் பட்டது. அதனால் அத்ருப்தியும் ஒழுக்கக்கேடும் கள்ளக்கடத்தல், பதுக்கல் போன்ற முறைகேடுகளும், வன்முறையும் ரக்தக்களரியும் ஏற்பட்டனவே அன்றி அமைதி நிஶ்சயம் ஏற்படவில்லை.
ஏக புத்தி என்பது உள்ளுக்குள் நிகழும் ஒரு புரட்சி. இல்லை, இல்லை, மனஸினுள் ஏற்படும் ஒரு அத்புத மலர்ச்சி. ஆடைகள்... கவர்ச்சிகரமான வண்ண வண்ண உடைகள் பல இருந்தும் வெள்ளை ஆடையை உடுத்திடும் முடிவு; பளபளக்கும் பல வகைத் துணிகள் ஸந்தையில் இருந்தும் எளிமையான கதர் ஆடையை உடுத்திடும் நிஶ்சயம்; பல வண்ணங்களிலும் பல உருவங்களிலும் உமிழ் நீர் சுரக்க வைத்திடும் பற்பல ருசிகளிலும் பல இனிப்புகளும் தின்பண்டங்களும் உணவகத்தில் இருந்தும் பசியைத் தணிக்க மட்டும் உண்பேன் என்ற முடிவு; ஒரு இறை வடிவம், ஒரு வழிபாட்டு முறை, ஒரு குரு என்ற உறுதி; (ஆப்ரஹாமிக் மதங்களான க்றிஸ்தவம், இஸ்லாம் சொல்வது போன்றதில்லை. அவையும் ஒரு இறை வடிவம், ஒரு வழிகாட்டி புஸ்தகம், ஒரு வழிகாட்டி, என்பதை வலியுறுத்துகின்றன என்பது உண்மைதான். ஆனால், அவை மற்ற எந்த பாதையையும் ஶைதானின் பாதையாக, உண்மையல்லாத பாதையாகக் கருதுகின்றன. மாறாக, இங்குக் கூறப்படுவது "பற்பல பாதைகள் உண்டு. அவற்றில் ப்ரயாணம் செய்பவர்களும் பலர் உண்டு. அவை அனைத்தும் ஸத்யத்தை நோக்கி அழைத்துச் செல்லக் கூடியவையே. எனினும், நீ உனக்காக ஒரே ஒரு பாதையைத் தேர்ந்தேடுத்து அப்பாதையில் உறுதியாக முன்னேறிடு". என்ற கருத்தே.)
இந்த்ரிய விஷயங்களில் பற்று, இந்த்ரிய ஸுக நாட்டம், உலகாயத விஷயங்களான பெயர், புகழ், செல்வம், பதவி, அதிகாரம் ஆகியவற்றைத் துரத்தி ஓடுதல், புத்தியில் பற்பல கிளைகளைத் தோற்றுவிக்கும். ஆன்மீக நாட்டம் கொண்டு, ஶரீரத்தைத் தாண்டி, குறுகிய 'நானைத்' தாண்டி உயர்ந்தால் மட்டுமே கிளைகள் இல்லாத ஒரே புத்தியை எய்திட முடியும்.
ஸ்ரீ அல்பர்ட் ஷ்வைட்ஸர் (Dr. Albert Schweitzer) என்ற ஜெர்மானியர், [1875 - 1965] ஏக புத்தியை பளிச்சென்று விளக்கிடும் ஒரு அழகான உதாஹரணம். அவர் கிறிஸ்தவப் பாதிரியாக ஆஃப்ரிக்கா சென்றார். ஆஃப்ரிக ஜனங்கள் மத்தியில் பல வர்ஷங்கள் பணி புரிந்தார். ஆஃப்க்காவில் பைபிள் ப்ரசாரத்தை விட மருத்துவ ஸேவையே அதிக முக்யம் என்று தனது 32வது வயஸில் அவருக்குத் தோன்றியது. பாதிரிக்கான உடையைக் களைந்து விட்டு மருத்துவக் கல்லூரியில் நுழைந்தார். 39வது வயஸில் மருத்துவரானார். ஆஃப்ரிக்கா திரும்பினார். மீதமுள்ள தம் வாழ்க்கையை ஆஃப்ரிக மக்களின் மருத்துவ சேவையில் கழித்தார். சர்ச்சில் அவருக்கு எழுந்த எதிர்ப்புக்கள், மருத்துவப் படிப்பை முடித்த பின்னர் அவர் முன் வைக்கப் பட்ட கவர்ச்சிகரமான வாய்ப்புகள், முதுமையைத் தொட்டிடும் வயஸில் சற்று வஸதிகளுடன் வீட்டிலேயே தங்கி விடலாம் என்ற இயற்கையான ஆசை, ஆகிய எதனாலும் பாதை மாறாமல் "ஆஃப்ரிக மக்களுக்காக மருத்துவம் பயில முடிவு செய்தேன். அப்படிப்பு தந்த அறிவினை ஆஃப்ரிக ஜனங்களின் ஸேவையில் அர்ப்பணிப்பேன்" என்ற ஒரே யோஜனையுடன் ஆஃப்ரிகா திரும்பினார் அந்த ஜெர்மானியர். எந்த குழப்பமும் இல்லை. கிளைகள் இல்லாத ஒரே புத்தி. அது அளித்ததும் ஒரே யோஜனை. நமக்கு இம்முடிவு மாபெரும் முடிவாகத் தோன்றலாம். ஆனால் அவருக்கு இது ஸஹஜமானதொரு முடிவு, மூச்சு இழுத்து விடுவதைப் போன்ற வெகு ஸஹஜமான முடிவு.
தன் குடும்பத்தின் ஸமூஹ, பொருளாதார அந்தஸ்தை உயர்த்தி நல்ல நாட்களை குடும்பத்தினர் காணச் செய்ய வேண்டும் என்ற வெறியில் ஆறு முறை மருத்துவக் கல்விக்கான நுழைவுப் பரீக்ஷையை எழுதி, தோல்வியுற்று, ஏழாம் முறை வெற்றி அடைந்த மாணவனை நான் அறிவேன்.
நான் ஒரு ஸந்யாஸியை அறிவேன். பத்தாம் வகுப்பு மாணவனாக இருந்த போது ஸந்யாஸியாகிட தந்தையின் அனுமதியைக் கோரினார். (பெற்றோரின் அனுமதி இல்லாமல் ஸந்யாஸி ஆக முடியாது.) தந்தை மறுத்து விட்டார். +12 முடித்த பின் பார்க்கலாம் என்றார். பன்னிரெண்டாம் வகுப்பை முடித்த பின் மீண்டும் கேட்டார் மகன். கல்லூரிப் படிப்பை முடித்த பின் பார்க்கலாம் என்று மறுத்து விட்டார் தந்தை. கவர்ச்சிகள் நிறைந்த உலக வாழ்க்கையில் இவன் திசை மாறி விடுவான் என்று நம்பினார் போலும். மகனோ 'ஏக புத்தி' கொண்டவனாக இருந்தான். கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு மீண்டும் அனுமதி கோரினான். தந்தை மிகப் பெரிய தொகையைக் குறிப்பிட்டு, அத்தொகையை மாஸ ஸம்பளமாக இரண்டு மாஸங்கள் மட்டும் ஸம்பாதித்துக் கொடுத்து விட்டால் நீ ஸந்யாஸி ஆகலாம் என்று நிபந்தனை போட்டார் தந்தை. (புத்திஶாலித்தனமாக மகனைச் சிக்க வைத்து விட்டோம் என்று நினைத்திருப்பார்.) மகனும் ஐந்தே வர்ஷங்களில் அவர் குறிப்பிட்ட தொகையை ஸம்பாதித்து அவர் கையில் கொடுத்து விட்டு ஸந்யாஸி ஆகி விட்டார். (தந்தை மூர்ச்சை அடைந்து விட்டார் என்று கேள்வி.)
ஏக புத்தி என்பது பிறப்பிலேயே உடன் வருவது. எனினும், ஸ்வய பரிஶோதனையுடன் கூடிய அல்லது ஒரு குருவின் கண்காணிப்பில் செய்திடும் ஆன்மீக முயற்சிகள் மூலம் கிளைகள் இல்லாத 'ஒரே புத்தி'யை அடைந்திட முடியும். இதே ஜன்மத்தில் இல்லை என்றாலும் அடுத்த ஜன்மத்தில் நிச்சயம் அடைந்திட முடியும் .
Comments
Post a Comment