ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் 006
कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन (अध्याय २ - श्लोक ४७)
கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன (அத்யாயம் 2 - ஶ்லோகம் 47)
Karmanyevaadhikaaraste maa phaleshu kadaachana (Chapter 2 - Shlokam 47)
அர்தம் : உனக்கு செயலின் மீது மட்டுமே உரிமை உண்டு. ஃபலன் மீது என்றும் உரிமை கிடையாது.
கீதையில் பக்தர்களாலும் எதிர்ப்பாளர்களாலும் மிக அதிகமாக பேசப்படும் சொற்றொடர் இதுதான். பலருக்கும் கீதையில் இந்த ஒரு சொற்றோடரைத் தவிர வேறு எதுவும் தெரியாது.
இது ஸ்ரீ க்ருஷ்ணன் அளித்த ஒரு ஸத்ய வாக்குமூலம் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நம்மால் இதன் அர்தத்தைப் புரிந்து கொள்ள முடிந்தால், அதன் ஆழத்தை உணர முடிந்தால் நமக்கு மேன்மை. ஒரு ஸத்ய வாக்குமூலம் நமது ஆதரவையோ ஒப்புதலையோ எதிர்ப்பார்ப்பதில்லை. ஸ்ரீ ந்யூடன் புவி ஈர்ப்புப் பற்றிய தனது வாக்குமூலத்தை வெளியிட்ட போது எவனுடைய ஒப்புதலையும் நாடவில்லை. தான் கண்ட ஒரு ஸத்யத்தை, தான் உணர்ந்த ஒரு ஸத்யத்தை வெளிப்படுத்தினார். நாம் ஒப்புக்கொள்வதும் ஒத்துக் கொள்ளாததும் நமது அஜ்ஞானத்தை ப்ரகடனப் படுத்துமே அன்றி ஸத்யத்தை பாதிக்காது.
இந்த சொற்றொடரில் ரெண்டு முக்ய வார்தைகள் 'ஏவ' மற்றும் 'கதாசன'. ஏவ என்றால் மட்டும். கதாசன என்றால் எப்பொழுதும், எந்த சூழ்நிலையிலும்,. நமக்கு கர்மம் அல்லது செயல் மீது மட்டுமே உரிமை உண்டு . ஃபலன் மீது எப்பொழுதும் இல்லை.
கீதையின் எதிர்ப்பாளர்கள் (தமிழ் நாட்டில் இவர்களுக்குப் பஞ்ஜம் உண்டோ?) செய்திடும் வாதம் - "நீ செயல் புரி ஆனால் ஃபலனை எடுத்துக் கொள்ளாதே. வேலை செய்திடு ஆனால் ஸம்பளத்தை எடுத்துக் கொள்ளாதே. பரீக்ஷை எழுது ஆனால் டிகிரி வாங்காதே. வயலில் உழைத்திடு ஆனால் அறுவடை செய்யாதே. தேர்தலில் போட்டியிடு ஆனால் பதவியை ஏற்காதே. இதைப் பாரடா. கீதையில் சொல்லப் பட்ட அபத்தமான கருத்தினை." என்பார்கள். அவர்கள் அறியாதவர்கள். அரைவேக்காடுகள். ஆழமாகப் படித்தால் மட்டுமே ஒரு கருத்தை ஆலோசனை செய்யவும் எதிர்க்கவும் கூட தகுதி கிடைத்திடும் என்பதைப் புரிந்து கொள்ளாதவர்கள்.
ஸ்ரீ க்ருஷ்ணன் சொல்ல வருவது என்ன? அதிகார என்ற பதத்தினை உரிமை என்று மொழி பெயர்த்தல் தவறு. உரிமை, மாட்சி, அதிகாரம், கட்டு என்று பல த்வனிகளில் இதன் அர்தம் உண்டு. செயல் நம் கையில் ஃபலன் நம் கையில் இல்லை என்று இதன் அர்தத்தைக் குறிப்பிடலாம்.
ஒவ்வொரு செயலுக்கும் ஒன்று அல்லது பல ஃபலன்கள் உண்டு. நாம் உணவு உண்கிறோம். அது செயல். பசி தீர்வதும், உணவு ஜீர்ணமாவதும் மலம் வெளியேறி அடுத்த பசிக்கும் அடுத்த உணவிற்கும் வழி வகுப்பதும் இச்செயலின் ஃபலன்கள். செயல்படுவது அதாவது உண்பது நம் கையில். ஜீர்ணம் ஆவது நம் கையிலா? இல்லை. உணவு வகை, அதில் உள்ள பொருட்கள், அப்பொருட்களின் ஒவ்வாமை, நம் உடல் நிலை, என்று பல விஷயங்களைப் பொருத்தது அது.
பணி புரிவது நம் கையில். பணியை செய்திடுவோம். ஆனால், ஸம்பளம்? சந்தை, நிர்வாஹத்தின் முடிவுகள், முதலாளியின் மற்ற ஈடுபாடுகள், போன்ற பல விஷயங்களைப் பொருத்தது. நாக்பூரில் டன்லப் தொழிற்சாலையும் சென்னையில் மதராஸ் பெட்ரோகெமிகல் கம்பனியும் திடீர் என்று மூடப்பட்டதால் எதிர்பாராத வறுமையில் வாடிய பல குடும்பங்களை நான் அறிவேன். பணி புரிய நான் தயார். அதற்கு உரிய திறமையும் அறிவும் என்னிடம் உண்டு. பணி புரிந்திட எனக்கு ஒரு வாய்ப்பும் கிடைத்தது. பணியில் சேர்ந்து பணி புரிந்து, வாழ்க்கையில் இனி ஒரு ப்ரஶ்னையும் இல்லை என்று நிம்மதி அடைந்தேன். ஆனால், என் கையில் இல்லாத பல நிகழ்வுகளால், எனக்குப் புலப்படாத பல ஶக்திகளின் தாக்கம் காரணமாக என் கம்பனி மூடப் படுகிறது. எந்த ப்ரஶ்னையும் இல்லை என்ற இந்த க்ஷணம் மாறி எல்லாம் ப்ரஶ்னைதான் என்ற நிலை உருவாகிறது.
பணத்தை முதலீடு செய்கிறாய். அது உன் கையில். ஃபலன்? பற்பல கணக்குகள் போடுகிறாய். சந்தையை அலசி ஆராய்கிறாய். நிபுணர்கள் பலரின் வழிகாட்டுதலை நாடுகிறாய். பிறகே முதலீடு செய்கிறாய். எல்லாம் கட்டுக்குள் என்று நம்புகிறாய். ஆனால், {இந்த ஆனால் என்பது எங்கும் எதிலும் உடன் வருகிறது.} உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் தோன்றிய சில அதிர்வலைகளின் காரணமாகவோ, எவனோ ஒரு அரசியல்வாதி அல்லது உயர் அதிகாரியின் ஊழல் காரணமாகவோ, இயற்கைச் சீற்றம் அல்லது போரின் காரணமாகவோ, அரசு எடுக்கும் ஒரு தவறான முடிவின் காரணமாகவோ, உன் வீட்டில் ஏற்படும் எதிர்பாரா நிகழ்வின் காரணமாகவோ, முதல் மூழ்குகிறது. ஃபலன் கிடைப்பதில்லை. ஏன் நடந்தது, எதிர்பார்த்த ஃபலன் ஏன் கிடைக்கவில்லை என்று அலசி ஆராய உனக்கு உரிமை உண்டு. ஆனால் உன் செயலின் ஃபலன் உனக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை .
நிலம் வாங்குகிறாய். மற்ற வ்யாவஸாயிகள் செய்திட்ட தவறுகளைச் செய்திடாமல் வ்யவஸாயம் செய்திடலாம் என்று முடிவு செய்து பணிகளில் இறங்குகிறாய். பயிரும் வளர்ந்து நிற்கிறது. அடுத்த நாள் அறுவடை செய்து ஃபலனை (பயிரை) வீட்டிற்கு எடுத்து வரலாம் என்று எண்ணி நிம்மதியாகத் தூங்குகிறாய். இரவு பெய்திடும் எதிர்பாராத மழை காரணமாகவோ, ஊரில் நடந்த கலவரம் காரணமாக தொழிலாளர்கள் வராமல் போவதாலோ, வீட்டில் நடந்திடும் ஒரு அஸம்பாவிதம் காரணமாகவோ அறுவடை செய்ய முடியாமல் போகிறது. பயிரில் பெரும்பகுதி அழிந்து விடுகிறது. உழைப்பின் ஃபலன் கிடைப்பதில்லை.
பரீக்ஷைக்குத் தயார் செய்கிறாய். சிறப்பாகத் தயார் செய்கிறாய். ஆனால், பரீக்ஷைக்கு முந்தைய நாள் உடல் நலம் குன்றி விடுகிறது அல்லது விரலில் தோன்றிய சிறு புண் வளர்ந்து எழுதும் வேகத்தைக் குறைத்து விடுகிறது. அல்லது பரீக்ஷை எழுதுகிறாய், சிறப்பாக எழுதுகிறாய். ஆனால், கேள்வித்தாள் லீக் ஆனது என்றோ உயர் அதிகாரி ஒருவன் மதிப்பெண்களை மாற்றிட லஞ்சம் வாங்கி விட்டான் என்றோ பரீக்ஷை ரத்தாகி விடுகிறது. அல்லது உலகின் மற்றொரு பாகத்தில் ஏற்படும் ஏதோ ஒரு நிகழ்வால் இந்த பரீக்ஷையின் மஹத்வம் குறைந்து விடுகிறது. நீ எதிர்பார்த்த ஃபலன், நீ விரும்பிய ஃபலன் உனக்குக் கிடைப்பதில்லை.
ஃபலனை பாதிக்கக் கூடிய பற்பல விஷயங்கள் உண்டு. இவை நம் ஆளுகைக்கு உட்படாதவை. இவற்றின் மீது நமக்கு எவ்வகை கட்டுப்பாடும் கிடையாது. நம் கைகளை மீறியவை. ஃபலனை பாதிக்கக் கூடிய இவ்விஷயங்களில் சில நமக்குப் புலப்படாதவையாகவும் இருக்கலாம். இவை உருவாவதை நம்மால் உணர முடியாமல் இருக்கலாம். ஆனால், பாதிக்கக் கூடிய பல ஶக்திகள் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை. நமக்கு செயல் மீது மட்டும் அதிகாரம் உண்டு. செயல் மட்டுமே நம் கையில். ஃபலன்? நிஶ்சயமாக நம் கட்டுப்பாட்டில் இல்லை. நம் கையில் இல்லை .
ஒரு செயலின் செயல்திறன் அச்செயல் செய்யப்படும் போது அமைந்திடும் மன ஒருங்கிணைப்பிற்கு நேர் விஹிதத்தில் மாறிடும். மன ஒருங்கிணைப்பு அதிகமாக அதிகமாக செயல் திறன் அதிகமாகிடும். சிதறிய மனஸுடன் செய்யப் படும் செயலின் செயல்திறன் நிச்சயம் பாதிக்கப் படும். ஃபலனைப் பற்றிய ஆர்வம், ஃபலனைப் பற்றிய எதிர்ப்பார்ப்பு, ஃபலன் கிடைக்குமா கிடைக்காதா என்ற தவிப்பு மனஸின் ஸமநிலையைக் குலைத்து செயல் திறனை பாதித்திடும். எனவே, ஃபலனைப் பற்றிய எவ்வித ஆர்வமும் இல்லாமல் செயலில் மட்டுமே ஈடுபாடு கொண்டு செயல் படுவதுதான் புத்திஶாலித்தனம்.
சிலர் என்னை மன நோயாளி என்று கூறலாம். ஸ்ரீ க்ருஷ்ணனையே எதிர்மறையான சிந்தனை கொண்டவன் என்றும் விமர்சிக்கலாம். "விபத்துகளைப் பற்றியும், ஆபத்துகளைப் பற்றியும், எதிர்மறையான நிகழ்வுகளைப் பற்றியும் ஏன் நினைக்க வேண்டும்?" என்று சாடலாம். ரயில் நிலையத்தில் வாஹனங்கள் நிறுத்தும் இடத்தின் வாயிலில், 'உங்கள் வாஹனத்திற்கு பாதிப்பு ஏற்பட்டாலோ திருடப்பட்டாலோ நிர்வாஹம் பொறுப்பல்ல' என்ற வாசகம் எழுதப்பட்ட ஃபலகையைக் காணலாம். "உங்கள் வாஹனம் நிஶ்சயமாக பாதிப்பிற்கு உள்ளாகும் அல்லது திருடப்படும்" என்றா புரிந்து கொள்ள வேண்டும்? "புகை பிடித்தால் கேன்ஸர் நோய் உண்டு" என்று சிகரெட் பெட்டியில் எழுதப்பட்டிருக்கும் எச்சரிக்கை வாசகம் சிகரெட் பிடிக்கும் அனைவரும் கேன்ஸர் நோய்க்கு உள்ளாவர் என்று பறைசாற்றுகிறதா? "இங்கு சிக்க வைத்து உயிரைப் பறிக்கும் சுழல் இருக்கிறது. எச்சரிக்கை. நீந்துவது உங்கள் ஸ்வய விருப்பம்" என்ற ஃபலகையைக் காண்கிறோம். அரஸாங்கம் செய்யக் கூடியது அவ்வளவே. ஸ்வய புத்தியைப் பயன் படுத்தி செயல் படுவது நம் கையில். ஸ்ரீ க்ருஷ்ணன் ஒரு ஸத்யத்தை வெளிப்படுத்தி இருக்கிறான். நான் அதனை விளக்கிடும் முயற்சியில், நாம் திறனுடன் செயல் பட வேண்டும், தோல்வி தரக் கூடிய மன உளைச்சலைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சில வாய்ப்புகளை விவரித்துள்ளேன். இத்தகைய வாய்ப்புகளைச் சுட்டிக்காட்டியது தவறல்ல, ஸ்ரீ க்ருஷ்ணன் வெளியிட்ட ஸத்யத்தை விளக்க முயற்சித்தது வேண்டுமானால் தவறாகலாம்.
திட்டமிடுதலும் செயல்தான். ஆனால் பகற்கனவு காணுதலும் ஸ்வய நினைவுடன் திட்டமிடுதலும் வெவ்வேறு.
சற்று ஆழமாகச் சிந்தித்தால், நம் செயல்கள் கூட நம்முடையவை அல்ல, நாம் மட்டும் தன்னந்தனியாக, எவருடைய துணையும் ஆதரவும் பங்களிப்பும் இல்லாமல் செய்பவை அல்ல என்று உணர்ந்திடுவோம். பலப்பல சக்திகள், மற்ற பல மநுஷ்யர்கள், நேரடியாகவோ மறைமுகமாகவோ நம் செயல்களில் நம்முடன் இணைகின்றனர். துணை நிற்கின்றனர். அற்பச் செயல்களைக் கூட 'நான் மட்டும் தன்னந்தனியாக' செய்தேன் என்று கூறிக் கொள்ள முடியாது. வ்யவஸாயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். விதைகளைத் தயார் செய்தவர், நிலத்தின் போஷாக்குகளையும் மருந்துகளையும் தயார் செய்தவர், வ்யவஸாயக் கருவிகளைத் தயார் செய்தவர், வ்யவஸாய அறிவை நமக்கு நல்கிய நம் முன்னோர்கள், தொழிலாளர்கள், போக்குவரத்து வஸதி செய்பவர், ஸூர்யன், காற்று, நிலத்தில் உள்ள புழுக்கள், இன்னும் எத்தனையோ ஶக்திகளின், நபர்களின் பேராதரவோடுதான் நாம் வ்யவஸாயப் பணிகளைச் செய்கிறோம். இத்தனை பேர் பங்கெடுத்த செயலின் ஃபலனை நான் மட்டும் எவ்வாறு உரிமை கொண்டாடலாம்? உண்மையில் என் செயல் என்று சொல்வதும் தவறு தான்.
பொதுவாக, புலப்படக்கூடிய ஸ்தூலமான செயல்களை மட்டும் செயலாகக் கருதுகிறோம். அதனால் தான், "நான் செயல் பட்டுக் கொண்டிருக்கிறேன்"; என்கிறோம். "நான் வ்யாபாரம் செய்கிறேன்" என்றும் "நான் மருத்துவனாகப் பணி புரிகிறேன்" என்றும் "நான் ஸமைக்கிறேன்" என்றும் பறை சாற்றுகிறோம். "நான் ஶ்வாஸிக்கிறேன்" என்றோ "நான் ஜீர்ணம் செய்கிறேன்" என்றோ உணர்வதில்லை. அதே போல், "நான் காற்றை வீசச் செய்கிறேன் என்றோ மழையைப் பொழியச் செய்கிறேன் என்றோ பூமியில் நடுக்கத்தை உண்டு பண்ணுகிறேன்" என்றோ நினைப்பதில்லை. இச்செயல்கள் என்னுடையவை அல்ல என்று விலகிக் கொள்கிறோம். உண்மையில் செயல்களில் எதுவும் நம்முடையவை அல்ல. நாம் தனியாகச் செய்திடுபவை அல்ல.
அவ்வாறெனில் நான் என்ன செய்ய வேண்டும்? உன் பணியை மாத்ரம் செய்து விட்டு ஒதுங்கி விடு. உன் செயலை முழு ஈடுபாட்டுடனும் பற்றில்லாமலும் செய்திடு. (ஈடுபாடு செயலில். பற்றின்மை ஃபலனில்.) செயல். செயல் மட்டும். ஸ்வய நினைவுடன் செயல். திறம்படச் செயல். உன்னுள் இருக்கும் மிகச் சிறந்தவற்றை அர்ப்பணித்துச் செயல்.
நான் ஃபலனை எடுத்துக் கொள்ளலாமா கூடாதா? நிஶ்சயமாக எடுத்துக் கொள்ளலாம். ஸ்ரீ க்ருஷ்ணனின் கூற்று எதிர்மாறாக இல்லை. ஃபலனில் நமக்கு உரிய பங்கை நாம் நிஶ்சயம் எடுத்துக் கொள்ளலாம், உரிமையாக அல்ல, இறைவனின் அருட்ப்ரஸாதமாக. சிறு வயஸில் நம் பெற்றோர்கள் ஒவ்வொரு மாஸமும் முதல் தேதியன்று வரும் ஸம்பளக் கட்டை இறைவனது திருவடியில் வைப்பதைப் பார்த்திருக்கிறோம். வ்யவஸாயி அறுவடையின் முதல் பகுதியை இறைவனுக்குக் காணிக்கை ஆக்குகிறார். நெஸவாளி நெய்த முதல் துணியை இறைவனுக்கு அர்ப்பணிக்கிறார். நம் வீடுகளிலும் ஸமைத்த உணவின் முதல் கைப்பிடியை ஆண்டவனுக்கு நைவேத்யம் செய்திடும் வழக்கம் உள்ளது. ஃபலன் இறை ப்ரஸாதம் என்பதை உணர்ந்திடவே இத்தகைய வழக்கங்கள். கர்மம் செய்ய வேண்டும். விளைந்திடும் ஃபலனை அவனது அருட் ப்ரஸாதமாக ஏற்றிட வேண்டும்.
இக்கருத்து ஏன் சிந்திக்கப் பட வேண்டும்? பேசப்பட வேண்டும்?
இக்கருத்தின் விளைவால் நமது செயலாற்றல் வளர்ந்திடும்.
இக்கருத்தினை உணர்ந்தால் நம்முள் பணிவு வளர்ந்திடும். இம்மாபெரும் படைப்பில் நாம் ஒரு சிறு துளி மட்டுமே என்பதை உணர்ந்திடலாம்.
நம்முள் முளைத்திடும் திமிரை, குறிப்பாக வெற்றி அளித்திடும் ஆணவத்தை, அஹங்காரத்தை அழித்திடும்.
இக்கருத்தை உள்வாங்கிய மனஸ் அமைதியாக, ஆனந்தமாக இருந்திடும்.
இனிமையான, இசைவான வாழ்க்கையை வாழக் கூடிய களமாக ஸமுதாயம் மாறி விடும்.
'இக்கருத்தின் விளைவாக ஸோம்பலும் செயலில் நாட்டமின்மையும் செயலின்மையும் வளர்ந்து விடாதா?' நம்மில் சிலருக்கு ஏற்படக்கூடிய ஸந்தேஹம் இது. அதே தர்கத்தை வேறொரு விதத்தில் பயன்படுத்தி, "செயலில் தோல்வி (நாடிய ஃபலனை அடைய முடியாத நிலை) சோம்பலுக்கும், செயலில் நாட்டமின்மைக்கும், செயலின்மைக்கும் வழி வகுக்காதா?" என்றும் கேட்கலாம் அல்லவா? இதை விவாதித்திடும் ஒரு சொற்றொடர் உண்டு. இதே ஶ்லோகத்தின் இரண்டாம் பகுதியில் வருகிறது. அதனை அடுத்த எபிஸோடில் காணலாம்.
Comments
Post a Comment