ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் 008
ஸமத்வம் யோக உச்யதே (அத்யாயம் 2 - ஶ்லோகம் 48)
Samatvam Yoga Uchyate (Chapter 2 - Shloka 48)
அர்தம் : சான்றோரின் கூற்றுப் படி 'யோகம் என்பது ஸமத்வமே.'
இந்தச் சொற்றொடர் அர்தம் புரிந்து கொள்ள ஸுலபமானது. இந்தச் சொற்றொடரில் ஸமத்வம் மற்றும் உச்யதே என்ற இரு வார்தைகள் சிறப்பானவை.
உச்யதே என்றால் 'சொல்கிறார்கள்'. 'ஆன்றோர்கள் சொல்கின்றனர்'; 'அறிந்தவர்களின் கூற்று இது'; என்பதே தாத்பர்யம். ஸ்ரீ க்ருஷ்ணன், "நான் சொல்கிறேன்" என்று ஆணித்தரமாக ஒரு கருத்தைச் சொல்வதற்குத் தகுதி பெற்றவர்தான். {நம்மில் பலர் அற்ப நபராக இருந்தும் 'நான் கூறுகிறேன்' என்று உரக்கக் கூவுவதைக் காண்கிறோம்.} ஸ்ரீ க்ருஷ்ணன் அவ்வாறு கூறினால் அதை நாமும் ஏற்றுக் கொள்வோம். அத்தகைய உயர்ந்த நபர் அவர். ஆயினும், ஸ்ரீ க்ருஷ்ணன் 'ஆன்றோரின் கூற்று இது'; 'என் கருத்து இது' போன்ற வார்தைகளைப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். இதற்கு பணிவும் அஹங்காரமின்மையும் தேவை .
உலக வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் ஸமத்வம் அவஶ்யமானது. அதிகமாக நாடப் படுவதும் அதே. ஸமத்வம் இல்லாத நிலையைத் தவிர்த்திடும் பெரும் ப்ரயத்னம் செய்யப்படுவது நாம் அறிந்ததே.
பட்ஜெட் அறிக்கை ஸமநிலையுடன் இருந்தது என்று சொல்லும் போது ஸமுதாயத்தின் எல்லா வர்கத்தினருக்கும் நன்மை அளிக்கும் வகையில் இருந்தது, எந்த ஒரு தனிப்பட்ட வர்கத்தை மட்டும் ஆதரிக்கும் வகையில் இல்லை என்று பொருள்.
நாம் அனைவரும் ஸமத்வமான, எல்லா அங்கங்களும் ஸமமாக வளர்ச்சி அடைந்துள்ள உடலை நாடுகிறோம். மார்பு விரிந்து, தோள்கள் திரண்டிருக்க வேண்டும். இடை சிறியதாகவும் கொழுப்பு அற்றதாகவும் இருக்க வேண்டும். தசைகளுடன் கூடிய, ஆனால் அதி வளர்ச்சி இல்லாத தொடைகள் வேண்டும். மிக அதிக உயரமும் வேண்டாம். மிகக் குறைவான உயரமும் வேண்டாம். நாம் விரும்புவது இத்தகைய ஸமமான உடலை.
நம் இரு கண்களின் கூட்டுப் பார்வை கூட ஸமமாக இருக்க வேண்டும். ஸமநிலை மாறினால் கண்ணாடி அணிந்து மீண்டும் ஸமநிலைக்கு மாற்றுகிறோம்.
நம் உணவு ஸமநிலை கொண்டதாக அமைய வேண்டும். மாவுச்சத்து, புரதச்சத்து, வைடமின்கள், கொழுப்பு, தாதுப்பொருட்கள், ஆகிய அனைத்தும் உரிய விஹிதத்தில் இருக்க வேண்டும். ஆறு ருசிகளும் கூடியதாக இருக்க வேண்டும். அந்தந்த காலத்து பழங்களும், காய்களும், கீரைகளும் பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும். உணவை நாம் உண்பதும் ஸமத்வமாக இருக்க வேண்டும். பரிமாறப்பட்ட அனைத்து பண்டங்களையும் ரஸித்து, ருசித்து உண்ண வேண்டும். எதையும் ஒதுக்கக் கூடாது.
உலகம் இரு த்ருவங்களுக்கு இடையே சிக்கி இருந்த காலத்தில் நம் பாரதம் அணி ஸாரா தேஶமாக' இருந்தது, இரு த்ருவங்களில் எந்த பக்கமும் சாய்ந்திடாமல், இருவரிடமும் நட்பாக ஆனால் நடு நிலையுடன் இருக்க முயற்சித்தது.
ஸமத்வமாக அமைந்தால் மாத்ரமே ஒரு விளையாட்டு அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கிறது. உதாஹரணத்திற்கு ஒரு கால் பந்து அணியில் தாக்கி விளையாடும் திறன் (attack), தன் கோல்போஸ்டைக் காத்திடும் திறன் (defense), பந்தை ஒருவர் மற்றவர்க்கு பகிர்ந்தளிக்கும் திறன் (pass), வேகமும், திறனும் மிக்க கோல்கீப்பர், ஆகிய அனைத்தும் இருக்க வேண்டும். இவை குறைந்திருந்தால் மிகச் சிறந்த ஓரிரு வீரர்கள் இருந்தும் அந்த அணி வெற்றி அடைந்திடும் வாய்ப்பு குறைவே.
நம் வாழ்க்கையும் ஸமத்வம் கொண்டதாக அமைய வேண்டும். பெரும் நிறுவனங்களில் பணி புரியும் பலர் தம் வேலையில் ஒரேயடியாக மூழ்கி வாழ்வின் பிற விஷயங்களுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் திணறுவதை நாம் காண்கிறோம். தன்னைத் தானே உயர்த்திக் கொள்வதற்கும் சீரான உறவுகளை அநுபவிப்பதற்கும் இத்தகைய பிற விஷயங்களில் ஈடுபாடு அவசியம். வேலை வாழ்க்கைக்குத் தேவை. ஆனால், வேலையே வாழ்க்கை இல்லை.
மனோ விஞானத்துறையிலும் ஸமத்வம் பேசப் படுகிறது. நமக்கு இடது மூளை, வலது மூளை என்று அமைந்துள்ளது. இவை இரண்டும் ஸமமாக வளர்ச்சி கண்டிருக்க வேண்டும். வலது மூளை உணர்ச்சிகளின் கேந்த்ரம். இடது மூளை தர்க்கம் மற்றும் பகுத்தறிவிற்கு கேந்த்ரமாகும். தர்க்கம் இல்லாத உணர்ச்சிகளோ உணர்ச்சியற்ற தர்கமோ ஆபத்தானது. ஒரு மநுஷ்யனுக்கு உணர்ச்சிகள் வேண்டும், தர்கத்திற்கு முரண்பட்டிருப்பினும். வாழ்க்கையை அனுபவிக்க, ரஸித்திட உணர்ச்சிகள் வேண்டும். தர்க்கமும் வேண்டும். மிகைப்படாமல். மிகைப்பட்டால் தர்கம் வாழ்க்கையை வறண்டு போகச் செய்திடும். ரஸம் அற்றதாக்கி விடும்.
செயல்களில் வெற்றி அடைந்திட, செயல்களைச் சிறப்பாகச் செய்திட, மனஸின் ரெண்டு அம்ஶங்கள் பேசப் படுகின்றன. மனஸின் குவிப்பு அல்லது கவனம், மற்றும் மனஸின் ஸமத்வம். கவனக்குவிப்புதான் செயல்களின் வெற்றிக்கு அவசியமானது என்பதே பொதுவாக நிலவிடும் கருத்து. ஆம். செயல்களைச் சிறப்பாகச் செய்வதில் மனஸின் குவிப்பு இன்றியமையாதது. ஆனால், ஒட்டு மொத்த வாழ்க்கையில் வெற்றி பெறவும் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளவும் இது போதாது. கவனக்குவிப்பினால் தீய செயல்களும் கூட சிறப்பாக செய்திடலாம். மாறாக, உயர்ந்த தன்மைகளை வளர்த்துக் கொள்ளவும், வாழ்க்கையையும் உலகத்தையும் அதிக ஆழமாகப் புரிந்து கொள்ளவும் ஆன்மீகப் பாதையில் துரித வளர்ச்சிக்கும் ஸமத்வம்தான் தேவையானது.
உலக வாழ்க்கை எதிர்மறையான ரெட்டைகள் நிறைந்தது. விருப்பு-வெறுப்பு, புகழ்-அவப்புகழ், பாராட்டு-கண்டனம், மலர் மாலை-செருப்படி, உஷ்ணம்-குளிர்ச்சி; சேருதல்-பிரிதல், ஜனனம்-மரணம், வெற்றி-தோல்வி, ராத்ரீ-பகல், ஸுகம்-து:கம் , அநுகூலமானவை-ப்ரதிகூலமானவை, போன்ற பலப்பல ரெட்டை எதிர்மறைகள். ஸமத்வம் என்பது இவை ரெண்டைப் பற்றியும் ஸம நிலை. ஸமத்வமே யோகம். ஸமத்வமே வெற்றி .
Comments
Post a Comment