ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 11
यदा संहरते चायं कूर्मोSङ्गानीव सर्वशः (अध्याय २ - श्लोक ५८)
யதா ஸம்ஹரதே சாயம் கூர்மோSங்கானீவ ஸர்வஷஹ (அத்யாயம் 2 - ஶ்லோகம் 58)
Yadaa Samharate chaayam koormongaaneeva Sarvashah (Chapter 2 - Shloka 58)
அர்தம் : ஒரு ஆமை தனது ஐந்து கரணங்களை, அதாவது நான்கு கால்கள் மற்றும் ஒரு தலை, தன் ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வதைப் போல....
இது ஒரு அழகான உவமை. ஹிந்து தர்ம தத்வத்தைப் புரிய வைத்திட, மீண்டும் மீண்டும் பயன்படுத்தப் படும் ஒரு உவமை. ஆமை மெதுவாக, மிக மெதுவாக நகரக் கூடிய ப்ராணி. இந்த உலகமோ வேகமும் கடுமையும் கொண்ட வேட்டையாளர்களின் களம். மெதுவாக நகரக் கூடிய ஜந்து இங்கு வேட்டையாடப் படுவதற்கும் கபளீகரம் செய்யப் படுவதற்கும் வாய்ப்பு அதிகம். ஆனால், படைப்பாளியான கடவுள் ஆற்றல் நிறைந்தவன் மட்டும் அல்ல, கருணை நிறைந்தவனும். கருணாமூர்த்தி அவன். (அவனுடைய ஆற்றலுக்கும் குணத்திற்கும் சான்றிதழ் வழங்கிட எனக்குத் தகுதி கிடையாது. ஒரு குழந்தை தனது தந்தையின் ஸாமர்த்யத்தைக் கண்டு வியந்து வாயைப் பிளப்பது போல நானும் வியக்கிறேன். அவ்வளவுதான்.) அவன் தன் படைப்பின் ஒவ்வொரு பிராணிக்கும் உயிர்ப் பிழைத்திட ஒரு விசேஷ வலிமையையும் அளித்திருக்கிறான். அதன் ஓடுதான் ஒரு ஆமைக்கு இறைவன் அளித்த விசேஷம். ஒரு ஆபத்து வருவதாக அது உணர்ந்தால், வெளியில் நீட்டி இருக்கும் தனது ஐந்து கரணங்களையும் ஓட்டினுள் இழுத்து, பூமியுடன் ஒட்டிக் கொண்டு விடும். வேட்டையாட வந்த ப்ராணிக்கு ஓடு உணவில்லை ஆதலால், ஆமைக்கு உயிர்ப் பிழைத்திடும் வாய்ப்பு அதிகமாகிறது. இயற்கையில் காணப்படும் ஒரு நியதி இது.
நம் முன்னோர்கள் மனித வாழ்வின் நோக்கத்தை அறிந்திடும் தம் வேட்கையில் மிகக் கூர்மையாகவும் சூக்ஷ்மமாகவும் இயற்கையை ஆராய்ந்தனர். தாம் கண்ட தத்வ உண்மைகளைப் புரிய வைக்க இயற்கையில் தாம் கண்ட காட்சிகளை கலைநயத்துடன் இத்தகைய உவமைகளாகப் பயன்படுத்தி உள்ளனர்.
மநுஷ்யனுக்கு ஐந்து ஞானேந்த்ரியங்கள் உண்டு, உலகத்தின் ஞானத்தைப் பெற்றிட உதவிடும் கருவிகள். இந்த ஞானேத்ரியங்களுக்கான ஐந்து ஸ்தூல கரணங்கள் 1. கண்; 2, காது; 3. நாஸி; 4. நாக்கு; 5. தோல். இக்கரணங்களுக்கான ஆற்றல்கள் முறையே 1. பார்த்தல் (दृष्टि); 2. கேட்டல் (श्रवण); 3. நுகருதல் (जिघ्नन); 4. ருசி அறிதல் / உண்ணுதல் (अश्नन); மற்றும் 5. தொடு உணர்ச்சி அறிதல்;. இந்த ஐந்து ஞானேந்த்ரியங்களின் விஷயங்கள் அல்லது தீனி முறையே 1. காட்சி (दर्शन); 2. சப்தம் (शब्द); 3. கந்தம் (गन्ध); 4. ருசி (रुचि); மற்றும் 5. தொடு உணர்ச்சி. நாம் இவ்வுலகத்தை அறிவது இவ்வைந்து உபகரணங்கள் மூலம்தான். உதாஹரணத்திற்கு : நாம் கண்கள் மூலம் நிறங்களை, உருவங்களை, வடிவங்களை அறிகிறோம். ஒரு பிறவிக் குருடன் துணி என்றால் என்ன என்பதைத் தன் பிற புலன்களை வைத்து அறிந்து கொண்டு விடுவான். ஆனால், 'பச்சைத் துணி, சிவப்புத் துணி என்றால் என்ன என்பதை அவன் தலைகீழாக நின்றாலும் அறிந்து கொள்ள முடியாது. கண் இல்லை என்றால் உலகத்தைப் பற்றி நாம் பெறும் ஞானம் அபூர்ணமே. காது மூலம் நாம் பல்வேறு சப்தங்களை அறிகிறோம். இதே போல மற்ற கரணங்களும்... நாம் பெற்ற இக்கரணங்களின் அறியும் ஆற்றல், நுட்பமான வித்யாசங்களையும் அறிந்து அந்த அடிப்படையில் விஷயங்களைப் பாகுபடுத்தும் ஆற்றல் மிக நுட்பமானது. இவற்றால் ஆயிரக் கணக்கில் விஷயங்களை பாகுபடுத்தி அறிய முடியும். (ஒரு மூடன் கூட ஸ்தூலமான வேறுபாடுகளைக் கண்டறிந்திடுவான். ஆனால், சூக்ஷ்மமான வித்யாசங்களை அறிந்திட அதிக ஆற்றல் தேவை.) இக்கரணங்களால் மிக சூக்ஷ்மமான வித்யாசங்களையும் கண்டுணர்ந்து விஷயங்களை அறிந்திட முடியும். நமது நாஸிக்கு 8,000 வாஸங்களை அறிந்திடும் ஆற்றல் உண்டாம்.
எனவே, உலகத்தை அறிந்திட இந்த ஐந்து இந்த்ரியங்கள் இன்றியமையாதவை என்பதை மறுக்க முடியாது. உலகத்தை நாம் ஏன் அறிய வேண்டும்? ஸும்மா இருக்கக் கூடாதா? இவ்வுலகத்தில் வாழ வேண்டி இருப்பதால் அதை அறிய வேண்டும். நாம் வாழ்நாள் முழுவதும் இவ்வுலகத்துடன் தொடர்பு கொண்டவாறு இருக்க வேண்டியதால் இவ்வுலகத்தை அறிய வேண்டும். ஒகே. ஆனால், இவை மிகவும் மேம்போக்கான காரணங்கள். இவ்வுலகத்தை அறிய வேண்டியதற்கு மிக முக்யமான காரணம் உண்டு. நம்மை நாமே அறிவதற்கு இவ்வுலத்தை அறிய வேண்டும். இவ்வுலகத்தில் நாம் காணும் வேறுபாடுகளின் பின்னணியில் இழைந்தோடிடும் ஒருமையைக் கண்டிட இவ்வுலகத்தை அறிய வேண்டும். இறைவனை அறிந்திட, அவனுடன் ஒன்றிட, அவனுடைய படைப்பான இவ்வுலகத்தை அறிய வேண்டும். ஞானத்தைப் பெற்றிட உதவுவதால், அறிந்திட உதவுவதால், இக்கரணங்களுக்கு ஞானேந்த்ரியம் என்று பெயர்.
இக்கரணங்கள் எவ்வாறு தம் வேலையைச் செய்கின்றன? தம் வேலையைச் செய்வதற்கு இவை புற உலகத்தினுள் போயாக வேண்டும். விவரங்களைச் சேகரிக்க வேண்டும். அவ்விவரங்களை புத்திக்கு அனுப்பி வைக்க வேண்டும். புத்தி அவற்றை அலசி ஆராய்ந்து பெற வேண்டிய ஞானத்தைப் பெற்றிடும். இவ்வாறு பெற்ற ஞானத்தை புத்தி சேகரித்து வைத்துக் கொள்ளும், எதிர்க்காலத்தில் முடிவுகள் எடுத்திடும் போது reference செய்திட. ஆக, இந்த்ரியங்கள் வெளியே சென்றாக வேண்டும். கண்கள் புற உலகத்தில் உள்ள காட்சிகளைக் காண முற்பட வேண்டும். கண்ட காட்சிகளை censor செய்யாமல் புத்திக்கு அனுப்பி வைக்க வேண்டும். காதுகள் வெளிப்புறம் திறந்து புற உலகத்து சப்தங்களைக் கேட்க முற்பட வேண்டும். கேட்ட சப்தங்களை புத்திக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவற்றின் பணிக்களம் புற உலகமே. ஸ்வயத்திற்கும் புற உலகத்திற்கும் இடையே உள்ள வாசல்கள் இவை, வெளிப்புறம் மட்டும் திறந்திடும் வாசல்கள்.
பின் இக்கரணங்களை ஏன் உள்ளிழுத்துக் கொள்ள வேண்டும்? அவற்றின் பணிக்களமான புற உலகத்தில் திரியட்டுமே? இந்த அமைப்பில் சிக்க வைத்திடும் ஒரு வலை உள்ளது. புலன் கருவிகள் எவ்வித பூர்வ பக்ஷம் இல்லாமல், நாட்டம் இல்லாமல் தம் பணியைச் செய்தால் ப்ரச்னை ஏதும் இல்லை. ஆனால், உள்ளே மனஸ் என்ற பெயரில் ஒரு தாதா, இப்புலன்களைத் தூண்டி விட்டு, ஓட ஓட விரட்டும் தாதா ஒருவன் உட்கார்ந்திருக்கிறான். அவன் தனது விருப்பப் பட்டியலைக் கொடுத்து, அப்பட்டியலில் உள்ள விஷயங்களை நாடி இக்கரணங்களை ஓட வைக்கிறான். அதுதான் சிக்கல்.
மனஸ் உலகத்தை உள்ளது உள்ள படி ஏற்றுக் கொள்வதில்லை. அதன் மீது விருப்பு, வெறுப்பு, பிடித்தவை, பிடிக்காதவை, அனுகூலமானவை, ப்ரதிகூலமானவை போன்ற ஸ்வந்த ஸாயங்கள் பலவற்றை ஏற்றுகிறது. அதன் அடிப்படையில் பிடித்தவற்றை மட்டும், அனுகூலமானதை மட்டும், விருப்பத்தை மட்டுமே தேடி ஓடும்படி இக்கரணங்களுக்குக் கட்டளை இடுகிறது. இது அஸம்பவம். இயலாத ஒன்று. புலன்களால் இக்கட்டளையைப் பூர்த்தி செய்ய முடியாது. ஏனென்றால், எல்லாம் கலவையாக உள்ள ஒரு கிடங்குதான் உலகம். இங்கு கசப்பானது முதல் இனிப்பானது வரை, கோரமானது முதல் அகோரமானது (அழகானது) வரை, ம்ருதுவானது முதல் கடினமானது வரை, அன்பானது முதல் கொடுமையானது வரை, எல்லாம் உள்ளன. உலகத்தில் திரிந்திடும் கரணங்களுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமை கிடையாது. விளைவாக மனஸ் நிலை குலைந்து போகிறது. அமைதி இழக்கிறது. அனுகூலமான அனுபவம் கிடைத்தால் கூத்தாடுகிறது. மேலும் மேலும் அதை நாடுகிறது. எதிர்மறையான அனுபவம் கிடைத்தால் பதட்டம் அடைகிறது. மீண்டும் ஒரு முறை அது கிடைக்கக் கூடாது என்று விரும்புகிறது. எனவே தன் விருப்ப பூர்த்திக்காக அதிக ஆவேசத்துடன் இக்கரணங்களை விரட்டுகிறது. (நாக்கு தன் மேல் வைக்கப் படும் லட்டுவின் ருசியைப் பற்றிய சிக்னல்களை புத்திக்கு அனுப்பி வைக்கிறது. அத்துடன் அதன் வேலை முடிகிறது. எத்தனை லட்டு சாப்பிட வேண்டும் என்பதை முடிவு செய்திடும் வேலை நாக்கினுடையது இல்லை. மனஸ் லட்டுவை விரும்புகிறது. விருப்பத்தை பூர்த்தி செய்ய நாக்கை விரட்டுகிறது. மனஸின் இந்த அராஜகத்தில் 'ஸ்வயம்' மாட்டி, சிக்கி விடுகிறது.
மரணம் நமக்கு ஆபத்தல்ல. நமக்கு புனர்-ஜன்மம் உள்ளதால், நாம் மீண்டும் வருவோம், விட்ட இடத்தில் இருந்து தொடர்வோம். ஆனால், தேக்க நிலையோ வீழ்ச்சியோ நமக்கு பேராபத்து. இத்தகைய வலையில் சிக்கி விஷய உலகத்தில் வீழ்வதும், புலன் இன்ப நாட்டம் என்ற நிலையில் தேங்கி விடுவதும் மிகவும் ஆபத்தானவை. இந்த்ரியம் - உலக விஷயம் இவற்றின் ஸம்பந்தத்தால் கிடைத்த அனுபவங்களில் இருந்து நாம் கற்க வேண்டும், கற்றுக் கொண்டு தன்னை அறிதல் என்ற தன் வாழ்க்கைப் பயணத்தில் தொடர வேண்டும். "ஆமையைப் போல ஐந்து கரணங்களையும் புற உலகத்தில் இருந்து உள்ளே இழுத்துக் கொள்" என்ற இந்த யோசனை இவ்வகையில் மஹத்வமானது. விழிப்புடன் இரு. பகுத்தறியும் புத்தியைப் பயன் படுத்திடு. புலன் இன்பக் கரணங்கள் தம் இஷ்டப்படி புற உலகத்தில் அலைந்திட அனுமதிக்காதே. அதே போல, அவை தமக்கு விதிக்கப் பட்ட கார்யத்தை மட்டும் செய்யட்டும். ஆமையைப் போல அவற்றை உள்ளே இழுத்துக் கொள். (அதாவது அவற்றுக்கான தீனியை அளித்திடாமல் அவற்றைப் பட்டினி போடு.) உன்னை சிக்க வைத்திட அநுமதிக்காதே.!!!
Comments
Post a Comment