ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 12
या निशा सर्व भूतानां तस्यां जागर्ति संयमी ... (अध्याय २ - श्लोक ६९)
யா நிஷா ஸர்வ பூதானாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ ... (அத்யாயம் 2 - ஶ்லோகம் 69)
Yaa Nishaa Sarva Bhootaanaam Tasyaam Jaagarti Samyamee ... (Chapter 2 - Shlokam 69)
அர்தம் : மற்ற அனைவருக்கும் ராத்ரீயாக இருப்பது இவனுக்குப் பகல் .
அனைவரும் ராத்ரீ என்று கருதி தூங்கி இருக்கும் போது இவன் கண் விழித்திருப்பான். வடக்கில் முகலாயர்களும் தெற்கில் பிஜாபூர் ஸுல்தானும் நடத்திய அதர்மமான இஸ்லாமிய ஆட்சியால் பாதிக்கப்படாமல் ஆனந்த நித்ரையில் அனைவரும் மூழ்கி இருந்த போது அந்தச் சிறுவன் மட்டும் சிந்தனையில், தபஸ்ஸில் மூழ்கி இருந்தான். "என்ன செய்கிறாய்??" என்று கேட்கப்பட்டால், "சிந்தா கரிதோ விஷ்வாசீ" (உலகத்தைப் பற்றிக் கவலைப் படுகிறேன்...) என்றான். இந்தச் சிறுவன்தான் எதிர்க்காலத்தில் ஸமர்த ஸ்ரீ ராமதாஸராக வளர்ந்து, சத்ரபதி ஸ்ரீ ஶிவாஜியின் குருவாகி, ஹிந்து ஸாம்ராஜ்யத்தை, தர்ம ராஜ்யத்தை நிறுவிட ஹேதுவானார். இன்றும் பாரதத்தின் மையப் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் உள்ள ஆஞ்ஜநேயர் கோவில்களும் அகாரா எனப்படும் மல்ல யுத்த கேந்த்ரங்களும் ஸமர்த ஸ்ரீ ராமதாஸரின் உழைப்பும் உத்ஸாஹமும் ப்ரேரணையும் மிகுந்த வாழ்க்கையை எடுத்துக்காட்டுகின்றன.
தன் வயஸுப் பிள்ளைகள் அல்ப விஷயங்களில் மூழ்கி இருந்த போது மாரடோனா என்ற அந்த சிறுவன் தன் கால் பந்துடன் பயிற்சியில் மூழ்கி இருந்தான். உயிரற்ற அந்த கால் பந்து மாரடோனாவின் கால்களின் ஓட்டத்திற்கு ஏற்ப, இல்லை, இல்லை, அவன் கண் அஸைவிற்கு ஏற்றபடி அவன் மன விருப்பத்திற்கு ஏற்ப நர்தனம் ஆடக் கூடிய உயிருள்ள நர்தகியாக மாறி விட்டதோ என்ற ப்ரமையை ஏற்படுத்தியது .
ஸமீபத்தில் பொதிகை தூர் தர்ஷனில் ஒரு நேர்க்காணல் நிகழ்ச்சியைக் கண்டேன். ஒரு ஸங்கீதக் கலைஞரான சிறு வயஸுப் பெண் "நேர்க்காணப் பட்டாள்". பேட்டி கண்டவரின் கேள்வி :... "உனக்கு அன்றாட ஸங்கீத வகுப்புக்கள். அன்றாடம் நீ தனியாக மேற்கொள்ளும் ஸாதகம் வேறு. பட்டம் வாங்கிட, கல்லூரிக்குப் போகாமல் அஞ்ஜல் வழியாகப் படிக்கிறாய். கல்லூரி வாழ்க்கையின் 'ஜாலி',யை இழந்து விட்டதாகத் தோன்றவில்லையா?" அவளது அமைதியான பதில் அழகாக இருந்தது. வயசை மீறிய ஒரு முதிர்ச்சி இருந்தது அதில். "அந்த ஜாலி வேண்டும் என்றால் இந்த ஆனந்தம் கிடைத்திடாது. உங்கள் கூற்றுப் படி நான் அந்த ஜாலியை இழந்து விட்டேன் என்றே வைத்துக் கொண்டாலும், ஒவ்வொரு நாளும் என் வயலின் நரம்புகள் மீது விரல்களைப் பதித்துப் பயிற்சியில் மூழ்கிடும் போது நான் அநுபவத்திடும் ஆனந்தம்... உலகின் எந்த ஜாலியும் அதற்கு ஈடாகாது." இத்தகைய ஸாதகர்களின் ஒரு அடையாளம் இது. அவர்கள் அமைதியாக தன்னுள் நிறைந்து இருப்பார்கள். போட்டி இல்லை. பரபரப்பு இல்லை. தான் செய்வதைப் பற்றி மிக ஆழமானத் தெளிவு அவர்களுள் இருந்திடும். ஈடு இல்லாத உறுதி இருந்திடும்.
மற்றவர்க்கு ராத்ரீ என்பது இவனுக்குப் பகலாக இருந்திடும். உலகின் அனைத்துத் துறைகளிலும் காணப்பட்ட வல்லுனர்கள், வெற்றியாளர்களின் கதை இதுதான் . ஸங்கீதம் , கலை, விளையாட்டு, விஞானம், ஸாஹித்யம், அரசியல், ஆராய்ச்சி, போன்று. தத்தம் துறையில் மூழ்கி இருக்கும் ஸாதகனின் பார்வையில், கருத்தில், உலகம் இருப்பதில்லை. உலகின் பார்வையிலும் ஸாதகன் இருப்பதில்லை. இருந்தாலும் அவனை உலகம் கண்டு கொள்வதில்லை. என் ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தி வந்தது. பிஹாரில் ஸ்ரீ தஶரத மாஞ்ஜி என்பவரின் மனைவி நோய்வாய்ப்பட்டாள். க்ராமத்தில் இருந்து மலைக்கு அப்புறம் இருந்த ஆஸ்பத்ரியைச் சென்றடைய முடியாதலால் இறந்து போனாள். ஸ்ரீ தஶரத மாஞ்ஜி மலையைக் குடைந்து பாதை உருவாக்கத் தொடங்கினார். மலையைச் சுற்றி சென்றப் பாதை 75 கி மீ நீளம். இவர் உருவாக்கிய பாதையோ வெறும் 1 கி மீ தான். 22 வர்ஷங்கள் இக்கார்யத்தில் மூழ்கி இருந்தார் ஸ்ரீ மாஞ்ஜி. https://pbs.twimg.com/media/CBw4hv7UIAEIXjB.jpg கார்யம் தன் கண் முன்னால் முடிவடையும் வாய்ப்பைப் பற்றியும் அவர் சிந்தித்திருப்பாரா என்பது ஸந்தேஹம் தான். அவர் கூறுவதைக் கேளுங்கள்..."நான் என் சுத்தியலால் மலையைத் தட்டத் தொடங்கிய போது எல்லோரும் என்னைப் பைத்யம் என்றனர். கேட்கக் கேட்க என் ஸங்கல்பம் மேலும் மேலும் த்ருடமானது." இது இத்தகைய ஸாதகர்களின் மற்றொரு அடையாளம். "பைத்யம்" என்று வாழ்த்தப் படுவது. உலகம் கண்டு கொள்ளாது. கண்டு கொண்டால் பைத்யம் என்ற பட்டம் சூட்டும் .
மஹாபாரதத்தில் ஸூசகமான ஒரு கதை உண்டு. த்ரோணருக்கு தூக்கம் வராததால் மாளிகையை விட்டு வெளியேறி தோட்டத்தில் உலாவத் தொடங்கினார். அவருக்கு ஆஶ்சர்யம் அர்ஜுனன் அந்த இருளில் வில் பயிற்சி செய்து கொண்டிருந்தான். கண் தெரியாத அந்த காரிருளில் அவன் ஶப்தத்தையே சார்ந்திருந்து குறியை நோக்கி அம்பெய்திட முயன்று கொண்டிருந்தான். "மற்ற அனைவரும் தூங்கி இருக்கும் இந்நேரத்தில்??? நான் உனக்கு இவ்விஷயமாக எதுவும் சொல்லவில்லையே? இவ்வாறு பயிற்சி செய்ய வண்டும் என்று எப்படி தோன்றியதோ??" த்ரோணர் வினவினார். "என் அண்ணன் பீமன் மூலம் இவ்விஷயத்தை நான் உணர்ந்தேன். ஒரு நாள் நாங்கள் இருவரும் உணவருந்திக் கொண்டிருந்தோம். விளக்குகள் அணைந்து இருள் சூழ்ந்தது. நான் உண்ணுவதை நிறுத்தி விட்டேன். பீமனோ தொடர்ந்து உண்டான். நான் கேட்டதற்கு, "கைகளுக்குப் பயிற்சி உண்டு. உணவை வாயில் மட்டுமே இடும், காதிலோ, மூக்கிலோ அல்ல." என்று பதில் அளித்தான். ஓ ! கைகளைப் பழக்கி விட்டால் இருளிலும் அம்பு செலுத்தலாம் அல்லவா?" நானும் பயிலத் தொடங்கினேன்." அர்ஜுனன் பணிவுடன் பதில் அளித்தான். புளகாங்கிதம் அடைந்த த்ரோணர் அவனை ஆலிங்கனம் செய்தார். ஒலியைத் தொடர்ந்து அம்பு செலுத்தக் கூடிய, ஶப்த பேதி என்று விசேஷமாக அழைக்கப்படும் இந்த ஆற்றலின் மூன்று வல்லுனர்கள் தஶரதன், அர்ஜுனன் மற்றும் ப்ருத்வீ ராஜ சவ்ஹான்...
ஒருக் கால், "ஊருக்கு ஒரு வழி என்றால் இவனுக்கு ஒரு வழி" என்ற பழமொழி இத்தகைய ஸாதகனைக் குறிக்கிறது போலும்...
கீதையின் இந்தச் சொற்றொடர் ஒரு ஸூக்ஷ்மமான அர்தம் கொண்டது. இது ஸாதகனைக் குறிக்கிறது, அவன் லௌகீக ஸாதனையில் ஈடுபட்டிருக்கலாம் அல்லது உலகத்திற்கு அப்பாற்பட்ட ஆன்மீக ஸாதனையில் இருக்கலாம். உலகம் எவ்விஷயங்களால் கவரப் படுகிறதோ, அவ்விஷயங்களைப் பொருத்தவரை ஸாதகன் குருடனாக இருக்கிறான். அவ்விஷயங்களை அவன் கண்டு கொள்வதில்லை. ஸாதகன் கண்ணும் கருத்துமாக மூழ்கி இருக்கும் விஷயங்களை உலகம் கண்டு கொள்வதில்லை.
வெற்றியின் ஆஶையோ புகழின் கவர்ச்சியோ அல்ல இவனைத் தன் கார்யத்தில் ஈடுபடத் தூண்டுவது. வெற்றியும் புகழும் கிட்டாமலே போகலாம். அது இவனுக்கு ஒரு பொருட்டல்ல. இவன் கார்யத்தில் மூழ்குகிறான். அவ்வளவுதான். தன் விஷயத்தில் ஈடுபடுவதால், ஆழமாய் இன்னம் ஆழமாய் மூழ்குவதால் கிடைத்திடும் ஆனந்தமே இவனுக்குத் தூண்டுதல். "ப்ரவாஹத்துடன் நீந்துவது ஸுலபம். ப்ரவாஹத்திற்கு எதிராக நீந்துவது கடினம். என்று நாம் கூறுவோம். ஸுலபம், கடினம் எல்லாம் நம்மைப் போன்ற ஸாதாரண ஜனத்திற்கு தான். ஸாதகனுக்கு இல்லை. In fact, அனுபவத்தைத் தன் மனஸில் பதித்துக் கொள்வதிலும் அவனுக்குக் கருத்தில்லை. மனஸில் பதிந்தால் அல்லவா அது ஸுலபம் அல்லது கடினம் என்று முத்ரை குத்தலாம். அவன் தன் விஷயத்தில் மூழ்கி இருக்கிறான் .
Comments
Post a Comment