ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் 009
योगः कर्मसु कौशलम् (अध्याय 2 - श्लोक 50)
யோகஹ கர்மஸு கௌஶலம் (அத்யாயம் 2 - ஶ்லோகம் 50)
Yogah Karmasu Kaushalam (Chapter 2 - Shlokam 50)
அர்தம் : ஆற்றலுடன் கூடிய செயலே யோகம்.
ஸ்ரீ க்ருஷ்ணன் கீதையின் மூலம் யோகத்தைப் பற்றி நமக்கு வழங்கிடும் ரெண்டாவது விளக்கம் இது. யோகம் என்பது இணைதல். ஆத்மா பரமாத்மாவுடன் இணைதல். இவ்வுலக வாழ்க்கைக்கு ஸம்பந்தம் இல்லாத, அடுத்த உலகத்திற்கான எந்த ஒரு முயற்சியும் மநுஷ்யனை லௌகீக நடவடிக்கைகளில் இருந்து, செயல்களில் இருந்து விலக்கி விடக் கூடியது. அர்ஜுனனும் உலகாயதக் கடமையான போர் புரிவதில் இருந்து விலகி விட விரும்பினான். காட்டிற்கு சென்று பிக்ஷை எடுத்து வாழ்ந்து கொள்கிறேன் என்றான். அர்ஜுனன் இவ்வுலகத்தில் இருந்திட வேண்டும், உலக வாழ்க்கையில் தனக்கு வாய்ந்த கடமைகளைச் செய்திட வேண்டும், ஆயின் ஒரு யோகியின் மனஸுடன் தன் கடமைகளில் ஈடுபட வேண்டும் என்பதை அர்ஜுனனுக்குப் புரிய வைத்திடும் பெருமுயற்சியில் ஸ்ரீ க்ருஷ்ணன் இறங்குகிறான். ஸ்ரீ க்ருஷ்ணனின் இம்முயற்சியே கீதைப் பேருரை.
ஆற்றல், செயல்திறன் எனும் விஷயம் அனைவராலும் பேசப்படுகிறது. கோரப்படுகிறது. யஜமானனுக்கு ஆற்றல் மிக்க வேலைக்காரர்கள் வேண்டும். நிர்வாஹம் தனது பணியாளர்களின் செயல் திறனை வளர்த்திட பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறது. தேஶத்தின் குடிமக்கள் தனது அரசு நிர்வாஹத்தில் அதிகாதிக ஆற்றலை எதிர்ப் பார்க்கின்றனர். நுகர்வோர் தாம் பயன்படுத்திடும் அனைத்து பொருட்களும் செயல்திறன் மிக்கதாக இருந்திட வேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றனர்.
செயல் திறன் மிகுந்த செயல்கள், ஆற்றலுடன் செய்யப்படும் செயல்கள் யோகம் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன். எந்த செயலுமா? தகுந்த, தகாத, நல்ல, தீய, செயல்கள் அனைத்துமா?
ஸ்வப்ரஜ்ஞாவுடன் செய்யப்படும் முயற்சிகள், பயிற்சிகள் மூலம் ஆற்றல் மற்றும் செயல்திறனை வளர்த்திட முடியும். ஆயின், 'செயல் புரிபவர்' ப்ரஜ்ஞாவுடன், ஸ்வய நினைவுடன் செயல் புரிந்திடும் வரை யோகம் என்பது ஸாத்யமாகாது. அதாவது, "நான் செய்கிறேன்" என்ற உணர்வு உயிருடன் உள்ள வரை யோகம் இயலாது. யோகம் என்பது இணைதல். ஐக்யமாதல். செயல் புரிபவரும் செயலும் ஐக்யமாகி விட வேண்டும். செயல் புரிபவர் மறைந்து செயலாகவே வெளிப்பட வேண்டும். அத்தகைய நிலையில்தான் மிக அதிக ஆற்றலும் அதிக பக்ஷ செயல் திறனும் ஸம்பவமாகும். அதாவது செயல் நடக்க வேண்டும், செயல் புரிபவர் மறைந்து விட வேண்டும். ஸங்கீதத்திலும் ஓவியத்திலும், இலக்கியத்திலும் தெய்வீகப் படைப்புகள் இந்த பரவஶ நிலையில்தான் உருவாயின. ஸாதாரண செயல்களுக்கும் இது பொருந்தும். சைக்கிள் விடுபவன் உயிருடன் இருந்திடும் வரை, அதாவது சைக்கிள் ஓட்டுதல் என்ற செயலின் உணர்வு அவனுள் உயிருடன் இருந்திடும் வரை, சைக்கிள் விடுதல் என்ற செயல் ஆற்றல் மிகுந்ததாகி விடுவதில்லை. ஸைகிள் ஓட்டுபவரும், ஸைகிள் ஓட்டுதல் என்ற செயலும் ஐக்யமாகி விடும் போதுதான் ஸைகிள் ஓட்டுதல் அதிக பக்ஷ ஆற்றலுடன் கூடிய செயலாகி விடுகிறது. அன்னை 'நான் ஸமைக்கிறேன்' என்ற ஸ்வ உணர்வில் இருந்து விடுபட்டு ஆனந்த மன நிலையில் ஸமைத்திடும் போதுதான் தெய்வீக ஸுவையுடன் கூடிய உணவு ஸமைக்கப் படுகிறது. அத்தகைய நிலையில் தீய செயல், தகாத செயல் ஸம்பவம் இல்லை .
மிகச் சிறந்த உரைகள், அதிக தாக்கத்தினை ஏற்படுத்திய உரைகள் அனைத்தும் பேச்சாளர் இந்நிலையில் இருக்கையில் வெளிப்பட்டவையே. குருக்ஷேத்ரப் போர் முடிந்த பிறகு அர்ஜுனனும் ஸஹோதரர்களும் மன அமைதியுடன் இருந்த வேளையில் ஸ்ரீ க்ருஷ்ணனிடம் மீண்டும் ஒரு முறை கீதைப் பேசுமாறு வேண்டினர். ஆனால், ஸ்ரீ க்ருஷ்ணன், "நான் ஒரு அலாதியான நிலையில் இருந்தபோது கீதை என்னிடம் இருந்து வெளிப்பட்டது. நானே விரும்பினாலும் என்னால் மீண்டும் ஒரு முறை கீதையைப் பேச முடியாது" என்றார்.
இதே காரணத்தினால் தான் அனைத்துத் தொழில்களில் இருந்தவரும் ஸாதுவாகி உள்ளனர். தத்தம் தொழிலுக்கான செயல்களைச் செய்த வண்ணம் தெய்வீக நிலையை அடைந்துள்ளனர். கபீர்தாஸர் ஒரு நெஸவாளர். கோரா கும்பார் ஒரு குயவன். ரவி தாஸ் ஒரு சக்கிலியர். நாமதேவர் ஒரு தையற்கலைஞர். இவர்கள் அனைவரும் பரம நிலையை எய்தி உள்ளனர். தெய்வீகம் அல்லாத எந்தச் செயலும் உலகில் கிடையாது. அனைத்து செயல்களுமே, ஆற்றல் மிகுந்து செய்யப் படும் அனைத்துச் செயல்களுமே தேய்வீகம்தான், யோகம்தான்.
nalla karutthu. ippani thotarattum
ReplyDelete