ॐ
பேச்சாளரும் கேட்போரும்
நேற்று புது வர்ஷத்தை முன்னிட்டு ஏற்பாடாகி இருந்த ஒரு பேச்சைக் கேட்கச் சென்றேன். இரண்டு மணி நேரம், தொடர்ச்சி இல்லை. ஒரு மையக் கருத்தில்லை. என்னால் அரங்கில் உட்கார முடியவில்லை. அந்த அனுபவத்தின் விளைவே இந்த கட்டுரை.
ஒரு பேச்சு எப்படி இருக்க வேண்டும்? கீதை இவ்விஷயத்தில் ஏதாவது சொல்கிறதா? நேரடியாக இல்லை, ஆனால் 14 மற்றும் 17 வது அத்யாயத்தில் இருந்து நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஒரு பேச்சைக் கேட்ட பின் நீங்கள் எந்நிலையில் அரங்கை விட்டு வெளியேறுகிறீர்கள் என்பதை கவனியுங்கள்.
1. எந்த எண்ணமும் இல்லாமல் வெளியேறுகிறீர்கள். அதாவது பேச்சு முழுவதும் ஒரு காது வழியாக நுழைந்து மற்ற காது வழியாக வெளியேறி விடுகிறது. அந்தப் பேச்சும் பேச்சாளரும் மறந்து விடத் தக்கவர்.
2. பேச்சாளரைப் பாராட்டியபடி நீங்கள் அரங்கை விட்டு வெளியேறுகிறீர்கள். அவரது உரை நடை, அவர் உடனுக்குடன் தன் நினைவில் இருந்து எடுத்தக் காட்டிய மேற்கோள்கள், அவரது குரல், போன்ற ஒன்றைப் புகழ்ந்த படி வெளியேறுகிறீர்கள். அவர் ஸ்வந்த புகழுக்காக பேசினார் என்று அர்த்தம். தன் மேதா விலாஸத்தைப் படம் போட்டுக் காட்ட முயன்றார் என்று அர்த்தம். அவருள் பேச வந்த கருத்தை விட “நான்” மிகப் பெரிதாக ஊதி உள்ளது என்று அர்த்தம். நீங்கள் அவரது விசிறி ஆகி விடும் வாய்ப்பு அதிகம். அவர் படம் உங்கள் பர்ஸிலும் அறையின் சுவர்களிலும் இடம் பிடிக்கிறது. அவர் புஸ்தகங்கள் உங்கள் அலமாரியில் புகுந்து விடுகின்றன. உங்களைச் சுற்றி உள்ளோர் உங்களை ஒரு பக்தனாகவோ, அறிவாளியாகவோ கருதலாம். ஆனால், நீங்கள் பேசிடும் போது கருத்தை அல்லாது அவரைப் பற்றி பேசிடும் வாய்ப்பே அதிகம். “அவர் UNO வில் பேசினார்”; “உனக்குத் தெரியுமா? அவருக்கு உலகம் முழுதில் இருந்தும் சிஷ்யர்கள் உள்ளனர்” “அவர் தற்ஸமயம் ஐரோப்ப விஜயம் செய்து கொண்டிருக்கிறார். அங்குள்ள எல்லா நகரங்களிலும் அவரது பேச்சு ஏற்பாடாகி உள்ளது”;... என்றெல்லாம் பேசுவீர்கள். “அவர் என்ன பேசினார்?” என்று கேட்கப் பட்டால், “ஓஹோ ஹோ! அவர் என்னமா பேசுவார் என்கிறாய்!! மிக மிக அழகாகப் பேசுவார். நீ ஒரு முறை அவர்ப் பேச்சை நேரடியாகக் கேட்க வேண்டும்” என்றெல்லாம் பதில் வருமே அன்றி என்ன பேசுவார் என்றல்ல. நீங்கள் ஒரு வகையில் அவரது விளம்பர ஏஜென்டாகி விடுகிறீர்கள். இத்தகைய பேச்சாளர்களாலும் பேச்சுக்களாலும் நீங்கள் எவ்வகையிலும் பயன் பெறப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.
3. ஒரு எண்ணம், ஒரு கருத்து உங்களை ஆக்ரமித்த நிலையில் நீங்கள் அரங்கினை விட்டு வெளியேறுகிறீர்கள். அந்த எண்ணம் உங்களுள் தொடர்ந்து இருக்கிறது. உங்களை சிந்தனையில் ஈடுபடுத்துகிறது. படிக்க, கேட்கத் தூண்டுகிறது. சர்ச்சை செய்யத் தூண்டுகிறது. நீங்கள் ஒரு நிர்ணயம் செய்திடும் வரை, ஒரு ஸங்கல்பம் செய்திடும் வரை இது தொடர்கிறது. இந்த கருத்து உங்கள் வாழ்விற்கு ஒரு புதிய திசை அளித்திடும் வாய்ப்பு அதிகம். அந்த பேச்சாளர் உங்கள் நினைவில் இருந்திடுவார் என்பது நிச்சயம் இல்லை. அவருடன் உங்கள் தொடர்பும் உறவும் தொடரலாம், தொடராமலும் இருக்கலாம். தொடர்ந்தால் கருத்து பகிர்தலுக்காக மட்டுமே. வழிபடுதலோ, பாராட்டுதலோ, புகழ்தலோ அங்கிருந்திடாது. எதிர்க் காலத்தில் அதைப் பற்றி பேசும் போது நீங்கள் ஒரு கருத்தாக மட்டுமே பேசுவீர்கள், மேற்கோளாக அல்ல.
4. நீங்கள் அரங்கை விட்டு எண்ணங்கள் இல்லாது வெளியேறுகிறீர்கள் ஆனால், இந்த நிலை மேலே 1’ம் நிலையில் குறிப்பிட்டதை விட வித்யாஸமானது. நீங்கள் மௌனமாகி விடுகிறீர்கள். நீங்கள் ப்ரமிப்பில் ஆழ்ந்து விடுகிறீர்கள். நீங்கள் பரவச நிலையினை எய்து விடுகிறீர்கள். பேச்சாளரோ, பேச்சின் கருத்தோ, பேச்சு என்ற அந்த நிகழ்ச்சியோ, அரங்கோ, உங்கள் மனஸில் இருப்பதில்லை. இந்த நிலை உண்மையாக இருந்தால் நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு அசைவதில்லை (ஒரு சில க்ஷணங்களுக்காகவேனும்...). ஒரு பேச்சல்ல, மௌனம் கூட இத்தகைய நிலையை ஏற்படுத்த வல்லது. ஒரு மஹானின் மௌன த்ருஷ்டியோ க்ஷண நேர ஸ்பர்ஷமோ கூட இந்நிலையைக் கொடுக்க முடியும். இது ஒரு ஸ்வாநுபூதி. இதைப் பிறருடன் பங்கிட முடியாது. இந்த அனுபவம் உங்களையே மாற்றி விடுகிறது. ஸரியாகச் சொல்ல வேண்டும் என்றால் இது வரை நீங்கள் கருதி வந்த மேம்போக்கான உங்களை அழித்து, உண்மையான உங்களை வெளிப்படுத்துகிறது.
இந்த நிலை, கீதையில் இரண்டாம் அத்யாயத்தில் 29வது ஸ்லோகத்தில் அழகாக வர்ணிக்கப் பட்டுள்ளது.
आश्चर्यवत्पश्यति कश्चिदेनमाश्चर्यवद्वदति तथैव चान्यः |
आश्चर्यवच्चैनमन्यः शृणोति श्रुत्वाप्येनं वेद न चैव कश्चित् ||
ஆஸ்சர்யவத் பஷ்யதி கஸ்சிதேனமாஸ்சர்யவத் வததி ததைவ சான்யஹ |
ஆஸ்சர்யவத் சைனமன்யஹ ஷ்ருணோதி ஷ்ருத்வாப்யேனம் வேத ன சைவ கஸ்சித்.
ஒரு எச்சரிக்கை : பேச்சாளர்களை கணிப்பதற்கும் அவர்களுக்கு மார்க் போடுவதற்கும் தயவு செய்து இந்த விஷயத்தைப் பயன் படுத்தாதீர்கள். அது அஹங்காரத்திற்குத் தீனி போடும். நம் priorities களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமானால் பயன் படுத்துங்கள்.
Comments
Post a Comment