ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 13
கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மனஸா ஸ்மரந் ... (அத்யாயம் 3 - ஶ்லோகம் 6)
KARMENDRIYAANI SAMYAMYA YA AASTE MANASAA SMARAN ... (CHAPTER 3 - SHLOKA 6)
அர்தம் : இந்த்ரியங்களை வெளிப்படையாகக் கட்டி விட்டு மனஸினால் விஷயங்களை நினைத்து அநுபவிப்பது.....
மனஸ் இந்த்ரியங்களைக் காட்டிலும் வலிமையானவை. மனஸின் கட்டளையை ஏற்று இந்த்ரியங்கள் வெளியே அலைகின்றன. விஷயங்களுடன் சேர்கின்றன. அந்த அநுபவங்களை ஏந்தி திரும்புகின்றன. அவ்வநுபவங்களை மனஸ் தான் ரஸிக்கிறது. ருசிக்கிறது. ஸுகமென்றும் து:கமென்றும் அவற்றை வகுக்கிறது. மனஸ் இல்லை என்றால், மனஸ் வேறு விஷயத்தில் லயித்திருந்தால், இந்த்ரியங்கள் கொண்டு வரும் அநுபவங்கள் பதிவு ஆவதில்லை. ஒரு க்ரிக்கெட் ஸ்டேடியத்தில் அமர்ந்திருக்கும் ஒருவனின் மனஸ் அவனது கண்களின் பின்னால் அமர்ந்து அங்குள்ள காக்ஷிகளில் மூழ்குகிறது. தஹிக்கும் ஸூர்யனின் உஷ்ணம் அவனது தோலினை வறுத்துக் கொண்டிருக்கும். தோல் அந்த அநுபவத்தின் செய்தியை அனுப்பியும் வைத்திடும். மற்ற நேரங்களில் இந்த அநுபவம் மனஸிற்குப் பிடிக்காத ஒன்றுதான். ஆனால், தோலின் அநுபவத்தை கவனித்திடவும் மனஸிற்கு நேரம் இல்லை. விளையாட்டு மந்தமானால், அதில் மனஸின் ஆர்வம் குன்றினால் மட்டுமே மனஸ் தோலை கவனித்திடும். அநுபவத்தையும் அதற்குக் காரணமான ஸூர்யனின் உஷ்ணத்தையும் வெறுத்திடும். மாணவனின் மனஸ் விளையாட்டு மைதானத்தைச் சுற்றிக் கொண்டிருந்தால், நடந்து முடிந்த போட்டிகளில் அங்கு கிடைத்த ஆனந்தத்தில் லயித்திருந்தால், நடக்கவிருக்கும் போட்டிகளில் அங்கு கிடைக்கப் போகும் கற்பனையான ஸுகத்தில் மூழ்கி இருந்தால், ஆசிரியரின் வார்தைகளும் அவ்வார்தைகள் ஏந்தி வரும் பாடமும் அவன் காதுகளில் நுழைய மறுக்கும். அவன் காதுகள் செவிடல்ல. ஆனாலும் ஆசிரியரின் வார்தைகளுக்கு அவை செவிடாகி விடும்.
விஷயத்தின் மீது உள்ள பற்றினால் இந்த்ரியம் ஒன்று நம் கார்யத்தில் நாம் ஈடுபட முடியாமல் நம்மைத் தடுக்கிறது என்று உணர்ந்தால் பொதுவாக நாம் அந்த இந்த்ரியங்களை அடக்குவோம். கட்டி, அதை செயலிழக்கச் செய்வோம். கண்கள் தடையாக இருந்தால் கண்களை மூடுவோம். காதுகள் தடையாக இருந்தால் காதுகளை அடைப்போம். ஆனால், இம்முயற்சி ஃபலன் தராது. ஒரு கார்யத்தில் லயித்திட, மனஸ் அக்கார்யத்தில் ருசி காண வேண்டும். ருசி வலுக்க வலுக்க, அக்கார்யத்தில் லயித்தலும், மூழ்குதலும் மேலும் மேலும் ஆழமாகிடும். ருசி இல்லை என்றால் வெளிப்படையாக வலிமையான கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டாலும் மனஸ் லயித்திடாது. தம் குழந்தைகளின் படிப்பைப் பற்றிக் கவலைப் படும் பெற்றோர் ரிமோட்டை ஒளித்தோ கேபிளைத் துண்டித்தோ, குழந்தைகள் டிவி பார்ப்பதைத் தடுத்திட நினைக்கிறார்கள். டயபடீஸ் என்ற உடற்குறை உள்ள கணவனின் ஆரோக்யத்தைப் பற்றிக் கவலை கொள்ளும் மனைவி குலாப் ஜாமூன் டப்பாவை ஒளித்து வைத்து கணவனது நாக்கின் மேல் கட்டுப்பாடு விதிக்க நினைக்கிறாள். இத்தகைய புறத் தடைகள் ஃபலன் தராது .
வெளியில் இருந்து விதிக்கப் படும் தடைகள் நிஶ்சயமாக ஒரு ஃபலனை அளித்திடும். அவை மநுஷ்யனை போலி மனஸ் கொண்டவனாக, ஆஷாட பூதியாக ஆக்கி விடும். போலித் தனத்திற்குப் பலப்பல உருவங்கள். சிலவற்றை நாம் இங்கு தருகிறோம். வெளிப்படையாக எளிமை ஆயின் மேலும் மேலும் அடைய விழைந்திடும் மனஸ்; வெளிப்படையாக பணிவு ஆயின் அஹங்காரம் நிறைந்த மனஸ்; அன்பான, இனிய வாணி வெளியில் ஆனால் வெறுப்பும் த்வேஷமும் நிறைந்த மனஸ்; வெளிப்படையாக உதவிக்கு நீண்டிடும் கைகள் ஆனால் சதித்திட்டம் இயற்றிடும் மனஸ்; வெளியில் புன்னகை தவழும் முகம் ஆயின் கோபம் நிறைந்த மனஸ்; வெளிப்படையாக தானம் ஆனால் மனஸில் வசைகள்; வெளிப்படையாக ஆன்மீக நாட்டம் ஆனால் ஸ்வய நலம் நிறைந்த மனஸ்; வெளிப்படையாக அமைதி ஆனால் மனஸில் புயல்; வெளிப்படையாக ப்ரஹ்மசர்யம் ஆயின் காமம் நிறைந்த மனஸ்; போன்று.
கதை ஒன்று... ஒரு இளைஞன் த்யானம் பழக விரும்பினான். நகரத்து கவர்ச்சிகளில் இருந்து விலகி அமைதியான சூழலில் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்தான். த்யானத்தில் அமர்ந்தான். ஒரு இளம் பெண் அவ்வழியே வந்தாள். இளைஞன் அவளைப் பார்த்தான். அவனுக்கு அழகானவளாகப் பட்டாள் அவள். இளைஞனது த்யானம் கலைந்தது. அடுத்த நாள் தன் கண்களை ஒரு துணியால் கட்டி மீண்டும் த்யானத்தில் அமர்ந்தான். இன்று கட்டப்பட்டிருந்த அவன் கண்கள் அவனுக்கு அவளது வருகையை உணர்த்தவில்லை. ஆனால், அவன் காதுகள் அவளது கொலுஸு ஶப்தத்தைக் கேட்டு அவள் வருகையைத் தெரிவித்தன. அவன் மனஸ் அவளை நினைத்தது. மீண்டும் த்யானம் குலைந்தது. அடுத்த நாள் தன் காதுகளில் பஞ்ஜு உருண்டைகளை வைத்து மீண்டும் த்யானம் செய்ய அமர்ந்தான் இளைஞன். இன்று கண்களும் காதுகளும் கட்டப் பட்டிருந்ததால் அவனது த்யானத்தைக் குலைக்க முடியவில்லை அவற்றால். ஆனால், மூக்கு உயிருடன் இருந்ததே!! அவள் தன் கூந்தலில் சூடியிருந்த மலர்களின் வாஸம் அவனுக்கு அவளது வருகையின் செய்தியைச் சொன்னது. மீண்டும் அவன் த்யானம் கலைந்தது. அடுத்த நாள் மூக்கு த்வாரங்களிலும் பஞ்ஜு உருண்டைகளை வைத்து மீண்டும் ஒரு முறை முயன்றான். கட்டப் பட்டிருந்த கண், காது, மற்றும் மூக்கு செயல் இழந்திருந்தன. ஆனால் மனஸ் உயிருடன் இருக்கிறதே?? அது வெளியே சென்றது. பெண்ணைப் பற்றிய கற்பனையில் மூழ்கியது. அவனது த்யானம் மீண்டும் ஒரு முறை கலைந்தது. வெளிப்படையான கட்டுப்பாடுகள் வ்யர்தமானவை. அவை தோற்று விடும்.
மற்றொரு கதை... ஒரு குருவும் அவரது ஶிஷ்யனும் நதிக்கரையோரமாக நடந்து கொண்டிருந்தனர். குரு 70 வயஸு நிறைந்தவர். வாழ்நாள் முழுவதும் ப்ரஹ்மசர்ய வ்ரதத்தைக் கடைப்பிடித்தவர். ஶிஷ்யன் ஒரு இளைஞன். ப்ரஹ்மச்சர்யத்தின் தனது அநுபவங்களை குரு பகிர்ந்து கொண்டிருந்தார். அந்நேரத்தில் "காப்பாற்றுங்கள்" என்ற அலறல் ஒன்று கேட்டது. பெண் ஒருத்தி நதியில் மூழ்குவதைக் கண்ட குரு தத்க்ஷணமே நதியில் குதித்தார். மூழ்கும் அப்பெண்ணை நோக்கி நீந்திச் சென்றார். அவளை இறுகப் பற்றினார். அவளை ஏந்தியபடி நீந்தி மீண்டும் கரையை வந்தடைந்தார். நினைவு இழந்திருந்த அவளுக்கு உரிய முதல் உதவிகளைச் செய்து அவள் ஸ்வய நினைவு பெற்றவுடன் கடமை முடித்த உணர்வோடு அவ்விடத்தை விட்டு அகன்று நடக்கத் தொடங்கினார். ஶிஷ்யன் இதை எல்லாம் கண்டு கொண்டிருந்தான். அவனுள் பல கேள்விகள் எழுந்தன. எனினும் மௌனமாக இருந்தான். நீண்ட நெடு நேரத்திற்குப் பிறகு ஶிஷ்யன் கேட்டான். "குருவே! தாங்கள் வாழ்நாள் முழுதும் ப்ரஹ்மசர்ய வ்ரதத்தைக் கடைப்பிடித்தவர். ஒரு பெண்ணைத் தொட்டு தூக்கி, மார்போடு அணைத்து, அவளது மார்பகங்களைத் தொட்டு, ஏன்? அவளது உதட்டின் மேல் முத்தம் கொடுத்திடும் வரை... ஒரு ப்ரஹ்மசாரியான உங்களுக்கு இச்செயல்கள் தகுமா?" "நான் நதியில் மூழ்கிடும் ஒரு ஜீவனைக் காப்பாற்றினேன். ஸ்வயநினைவு திரும்பிட உரிய முதல் உதவிகல் செய்தேன். அவ்வளவுதான். ஆமாம்! நான் அவளை வெகு நேரம் முன்பு, அங்கே நதிக்கரையில் விட்டு விட்டேனே? நீ இன்னமுமா அவளை சுமந்து கொண்டிருக்கிறாய்??" பதில் அளித்த குரு கேட்டார். குரு வெளிப்படையான செயல்களில் இருந்தாலும் அவரது மனஸ் விலகி இருந்தது. ஶிஷ்யனோ வெளிப்படையாக இந்த்ரியங்களைக் கட்டியவனாகத் தென்பட்டாலும், ஒன்றும் செய்யாதவனாகத் தென்பட்டாலும் அவன் மனஸ் பரபரப்பான செயல்களில் ஈடுபட்டிருந்தது .
இந்த சொற்றொடரை மற்றொரு கோணத்திலும் பார்க்கலாம், புரிந்து கொள்ளலாம். கட்டுப்பாடுகள் இரண்டு வகையானவை. ஒன்று இந்த்ரியங்கள் தம் கார்யத்தை செய்ய விடாமல் தடுத்திடும். மற்றொன்று இந்த்ரியங்களை வலுக்கட்டாயமாக ஒரு கார்யத்தில் ஈடுபடுத்துவது . ஸ்வயமாக ஏற்றுக் கொண்ட கட்டுப்பாடுகளாக இருந்தால் ஒரு எல்லை வரை இவை பயன்படலாம் . ஆயின் , வெளியில் இருந்து திணிக்கப் பட்ட கட்டுப்பாடுகள் நிஶ்சயம் தோல்வி அடையும். ஸ்ரீமதி இந்த்ரா காந்தியின் அவஸர கால ஸர்வாதிகார ஆட்சியும் கம்யூனிஸ கொள்கையால் உந்தப்பட்டு 60 வர்ஷங்கள் ரஷ்யாவிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் நடத்தப்பட்ட இரும்புக்கர ஆட்சியும் இந்த ஸத்யத்தைப் பறை சாற்றும் மிகச் சிறந்த உதாஹரணங்கள் ஆகும். பத்ரிகைகள் நசுக்கப் பட்டன. கூட்டங்கள், விஶேஷமாக உரைகள் நிகழ்ந்திடும் நிகழ்ச்சிகள் தடை செய்யப் பட்டன . கைது செய்யபடுவது ஒரு ஸாமான்ய நிகழ்வு ஆயிற்று. சிறைகளில் ஆயிரமாயிரம் . மர்மச் சாவுகளும் மாயமாய் மறைந்து போன நபர்களும் ஆயிரமாயிரம் . வெளிநாடுகளுக்குச் செல்வதிலும் தடைகள். எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப் பட்டு, விசாரணை ஏதும் இல்லாமல் சிறைகளில் அடைக்கப் பட்ட நிலையில் அரஸியல் அரங்கங்கள் வெறும் நாடக அரங்கங்கள் ஆயின . நீதிமன்றங்கள் கூட கட்டுப்படுத்தப் பட்டன . எல்லா திஶைகளிலும் கட்டுப்பாடுகள். ஆனால், இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் வெளிப்படையானவை மட்டுமே . மனஸின் மேல் இவற்றால் எந்த தாக்கமும் ஏற்படுத்த முடியவில்லை. மனஸ் ஸ்வதந்த்ரம் வேண்டும் என்ற தனது தாஹத்தை உயிருடன் வைத்தது. வேறு ஒரு தளத்தில் மனஸு வேலை செய்தது. மஹா பலஶாலிகளாக தென்பட்ட இந்த ஸர்வாதிகார ஆட்சி நொறுக்கப் பட்டது. தடைகள் அனைத்தும் தகர்க்கப் பட்டன.
அதனால் தான் மனஸ் 'தளராதே', என்கிறார்கள். வெளிப்படையான அனைத்து உபகரணங்களும் உதவிக்கான அனைத்து அமைப்புகளும் குலைந்து விடலாம். எனினும், மனஸ் மட்டும் தனியாக, உகந்த குணங்களால் அலங்கரிக்கப்பட்ட மனஸு, உரிய ஸம்ஸ்காரங்களால் போஷிக்கப்பட்ட மனஸு தனியாக ஸாதித்திடும். அஸாத்யம் என்று கருதப்பட்டதை, இயலாதது என்று கருதப்பட்டதை ஸாதித்து விடும் .
Comments
Post a Comment