ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 14
स्तेन एव सः | (अध्याय ३ - श्लोक १२)
ஸ்தேன ஏவ ஸ: (அத்யாயம் 3 - ஶ்லோகம் 12)
Stena Eva Saha (Chapter 3 - Shloka 12)
அர்தம் : அவன் திருடன் தான்.
அவன் திருடன் தான். ஸ்ரீ க்ருஷ்ணனுடைய வார்தைகள் ஸில இடங்களில் கடுமையாகத் தோற்றமளிக்கும். ஆனால், அ வன் Plain ஆகப் பேசுகிறான். ஸத்யத்தைப் பேசுகிறான். ஸத்யம் நம் விருப்பப்படி இருந்திடாது. ஸத்யம் நம் மனஸிற்கு ப்ரியமாகவே இருந்திடும் என்பது நிச்சயம் இல்லை. நம் விருப்பப்படி ஸத்யத்தை மாற்றிட முயன்றிடாமல், ஸத்யத்தை புரிந்து கொண்டு, நாம்தான் ஸத்யத்திற்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.
மற்றவர்களின் பொருளை எடுப்பவன் திருடன். பிக்பாகெட் (Pickpocket), கழுத்து நகையை அறுத்து ஓடுபவன் (Chain snatcher), வீடு புகுந்து திருடுபவன், வழிப்பறிக் கொள்ளை அடிப்பவன், மிரட்டிப் (Blackmail) பணம் பறிப்பவன், அடுத்தவன் தோட்டத்துப் பயிரை, பழங்களை, மலர்களை, பறிப்பவன், இன்றைய நவீன காலத்தில் ஹேக்கிங் (hacking) போன்ற முறைகளைப் பயன்படுத்தி அடுத்தவன் பணத்தைத் திருடுபவன்,..என்ற அனைவரும் திருடர்கள் என்பது நம் அனைவருக்கும் தெளிவாகத் தெரியும். வ்யாபாரத்தில் நேர்மை இல்லாமல் கலப்படப் பொருளை விற்பவன், பித்தளையைத் தங்கமாக விற்பவன், அளவைக் குறைத்து ஏமாற்றுபவன், Chit funds, chain marketing, லாட்டரி என்று பல வழிகளில் மக்களின் பேராஶையைத் தூண்டி விட்டு பணம் பறிப்பவன், ஆகியோரையும் திருடன் என்ற பட்டியலில் சேர்க்கலாம்.
அடுத்தவன் நிலத்தை ஆக்ரமிப்பவன், வரப்பைத் தள்ளிக் கட்டி அடுத்தவன் நிலத்தை அநுபவிப்பவன், ரயில்வே அல்லது அரஸுக்கு ஸ்வந்தமான நிலத்தை வ்யாவஸாயம் அல்லது வேறு ஸ்வந்த லாபத்திற்குப் பயன்படுத்துபவன், நடைப் பாதையில் கடை விரிப்பவன், தன் கடைப் பொருட்களை நடைப் பாதையில் போட்டு, தன் கடையை விஸ்தரிப்பவன், தன் மனையின் விளிம்பு வரை வீட்டினைக் கட்டி விட்டு பொது இடத்தில் வீட்டு வாசற்படி, சாளரம் போன்றவற்றை கட்டிக் கொண்டு தன்னைப் பெரும் புத்திஶாலியாகக் கருதிப் பெருமைப் படுபவன், வீட்டு மனை முழுவதையும் வீடு, தோட்டம், அலங்காரம் இவற்றிற்குப் பயன்படுத்தி விட்டு, தன் வண்டியை சாலையில் நிறுத்துபவன் / parking செய்பவன், (ஏன், ரயிலில் மற்றவன் இருக்கையில் தன் கால்களை நீட்டிக் கொள்பவன் கூட) என்ற இவர்கள் அனைவரும் திருடர்களே. (space திருடர்கள்.)
அடுத்தவனுடைய உழைப்பினை ஸுரண்டுபவனும் திருடனே. கொடுக்கும் கூலிக்கு அதிகமாக வேலை வாங்குபவன், உழைப்பவனுடைய இயலாமையைப் பயன்படுத்தி உழைப்பிற்கு ஏற்ற கூலியைக் கொடுத்திடாமல் குறைத்துக் கொடுப்பவன், பேசிய ஸம்பளத்தை விட குறைவாகக் கொடுப்பவன், குறைவான ஸம்பளத்தைக் கொடுத்து அதிகப் பணம் கொடுத்ததாகக் கையெழுத்து வாங்குபவன், கூலிப் பணத்தை மிச்சப் படுத்திட, குழந்தைகளை தொழிலாளர்கள் ஆக்குபவன், உயர்ந்த கருத்தைப் பேசி, உழைப்பினை இலவஸமாகப் பெற முயல்பவன், போன்ற இவர்கள் உழைப்பைத் திருடுபவர்கள்.
நம் ஶாஸ்த்ரங்கள் இதை விட ஒரு படி மேலே செல்கின்றன. அடுத்தவன் பொருளுக்கு ஆஶைப் படுதலும் திருடுதலே என்கின்றன. நாம் ஆஶைப் பட்டது வெளியில் தெரியாது. வெளியில் உள்ள போலீஸால் இந்தத் திருட்டைக் கண்டுபிடிக்க முடியாது. நமக்கு மட்டுமே தெரியும். நாம் மட்டுமே இவ்வகைத் திருட்டைத் தடுக்கவல்ல போலீஸ்.
திருட்டில் ஸ்தரங்கள் (grades) கிடையாது. "கொஞ்ஜம் தான் திருடினேன்", "அவன் செய்தது பெரிய திருட்டு". "இது சின்ன திருட்டுதான்", என்றெல்லாம் திருட்டைத் தரம் பிரிக்க முடியாது. சட்டம் வேண்டுமானால் இவ்வாறு ஸ்தரம் பிரிக்கலாம். ஆனால், தர்மத்தின் பார்வையில் எல்லா திருட்டும் ஒன்றுதான். (எகாதஶி வ்ரதம் இருப்பவன் ஒரே ஒரு கைப்பிடிச் சோற்றைத் தின்றால் என்ன, முழு விருந்து சாப்பிட்டால் என்ன, இரண்டும் வ்ரத பங்கம் தான்.)
அஸ்தேயம் அல்லது திருடாமல் இருப்பதை நம் முன்னோர்கள் தர்மத்தின் ஒரு லக்ஷணமாக விவரித்துள்ளனர். பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோக ஸூத்ரத்தில் முதல் அங்கமான ஐந்து 'யம'ங்களில் ஒன்றாக அஸ்தேயம் குறிப்பிடப் பட்டுள்ளது. நம் நாட்டில் கதவுகளுக்குப் பூட்டுத் தேவைப் படாத நிலையும் வயல்களுக்கு வேலி தேவைப் படாத நிலையும் அதிக எண்ணிக்கையில் போலீஸும் பெரிய பெரிய சிறைச்சாலைகளும் தேவைப் படாத நிலையும் இருந்தது என்றால் அதற்கு ஒரே காரணம் அஸ்தேயம் என்ற இந்த தர்மம் ஸாதாரண மக்களால் கடும் கடாக்ஷத்துடன் கடைப் பிடிக்கப் பட்டது என்பதுதான். இன்றும் கூட க்ராமங்களில் பெரும்பாலோர், வனவாஸிகள் மற்றும் மலை வாஸிகள் இவர்கள் மத்தியில் இது பரவலாகக் காணப் படுகிறது. ஆங்க்லக் கல்வி முறையில் படித்த நாம்தான், 'இது தவறில்லை', 'இது தவறில்லை' என்று கொஞ்ஜம் கொஞ்ஜமாக தர்மத்தில் இருந்து சறுக்கி விட்டோம். அஸ்தேயம் என்ற தர்மத்தைப் பற்றிய நம் உணர்வுகள் மழுங்கி விட்டன. {மற்ற தர்மங்களைப் பற்றிய உணர்வுகளும்தான் மங்கி விட்டன என்கிறீர்களா? உண்மைதான். என் செய்வது?} கம்யூனிஸ யூனியன்களும் இந்த தர்மத்தை அழித்திடப் பெரும்பாடு படுகின்றன. இந்த தர்மம் ஸமுதாயத்தில் ஆழமாக வேரூன்றிடத் தேவையான தவம் நம் ஆலயங்களிலும் தர்ம பீடங்களிலும் தர்ம ப்ரஸங்க மேடைகளிலும் காணப் படவில்லை என்பதும் மறுக்கப் பட முடியாத ஒரு உண்மை.
இந்தச் சொற்றொடரில் ஸ்ரீ க்ருஷ்ணன் "மற்ற ஶக்திகளின் உதவிகள் பெற்று, மற்ற பலரின் உழைப்பின் ஆதாரத்தில் நாம் பெற்ற படிப்பு, பணம், பதவி, அதிகாரம், வீடு, செல்வாக்கு, போன்ற அனைத்தையும் பிறருடன் பகிர்ந்து அனுபவிக்க வேண்டும்" என்கிறான். "அவ்வாறு பகிராதவன், பகிராமல் தான் மட்டும் அநுபவிப்பவன் திருடன் தான்", என்கிறான். மிக அழகான ஶ்லோகம் இது. ஆழமான சிந்தனை வெளிப்படும் ஒரு ஶ்லோகம் இது. இந்த ஶ்லோகத்தின் விளக்கத்தை நான் எழுதிய "அம்ருத கலஶம் கீதை" என்ற புஸ்தகத்தில் விரிவாகக் காணலாம் .
Comments
Post a Comment