மூன்று நாட்கள் வலை தளத்திற்கு வெளியே இருந்தேன். சென்னைக்கும் ஈரோடிற்கும் ஒரு நாள் பயணம் (28 மற்றும் 3௦ ஆகஸ்ட் ). நடுவில் 29 அன்று ஷ்ராவண பௌர்ணமீ, தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கும் நாள்.
முதலில் 28 சென்னை பயணம்....
ABVP கார்யாலய திறப்பு வைபவத்திற்காக சென்னை சென்றிருந்தேன். பழைய கார்யகர்தர்களின் ஸங்கமம். பழைய நினைவுகள் கிளரப்படுவது எப்பொழுதும் உத்ஸாஹத்தைக் கிளப்பக்கூடிய ஒரு அனுபவம். அதனால்தானோ சிலர் பழைய நினைவுகளிலேயே வாழ விரும்புகின்றனர். அந்நாட்களில் நம்மிடம் இருந்த ஒரே சொத்து 'உத்ஸாஹம்' மட்டுமே. கார்யாலயம், பணம், வண்டி வசதிகள், மக்களிடையே ஆதரவு, மற்ற வசதிகள் குறைவே. மிகக்குறைவு. வேர்க் கடலை, தேநீர், நடை அல்லது சைகிள்... ஆயினும், உத்ஸாஹத்திற்கு மட்டும் பஞ்ஜம் இல்லை. பரஸ்பர அன்பும் ஆதரவும், மிகையான அளவில் பகிர்தலும் நிறைந்த ஒரு சூழ்நிலை, கனவுகளுக்குப் பஞ்ஜம் இல்லை. நட்புடன், இணைந்து சுறுசுறுப்பாக செயல்கள், நாக்பூரில் ஸங்கம் சாலில் (Sangam Chawl) சிறிய கார்யாலயம். உள்ளே இருப்பவர்களை விட வெளியே நிற்பவர்கள் எண்ணிக்கையே அதிகம். சென்னை எழும்பூரிலும் அதே நிலை. இப்பொழுது வஸதிகள் நிறைந்த கார்யாலயங்கள், வாஹனங்கள், தொடர்பு ஸாதனங்கள், தாராளமான பணம் மற்றும் பிற வசதிகள், அதிகாரம்,. இவை எல்லாவற்றையும் மீறி உத்ஸாஹமும், பரஸ்பர அன்பு, ஆதரவு, நட்புடன் கூடி இணைந்து பணி புரிதலும், உயிருடன் இருக்க வேண்டும் என்றால், தழைத்திருக்க வேண்டும் என்றால் அது மிகப்பெரிய ஸவாலே. ஒரு அமைப்பின் ஆயுஸும் பயனாற்றலும் இந்த ஒரே ஸவாலைச் சார்ந்துள்ளது.
குடும்பங்களுக்கும் இது பொருந்தும். குடும்பங்கள் அன்றாட அடிப்படை தேவைகளைப் பூர்தி செய்து கொள்வதற்கே பெரிய போராட்டத்தில் ஈடுபட வேண்டிய தேவை உள்ளது. ஆனால், அக்கால கட்டத்தில் அனைவரும் இணைந்து இருக்கின்றனர். பகிர்தலும், பரஸ்பர அன்பும் ஆதரவும் அங்கு நிறைந்து காணப்படுகிறது. பொருளாதார ரீதியான வளர்ச்சி காலப்போக்கில் இயற்கையாக நிகழ்ந்திடும். குடும்பத்தில் ஒவ்வொருவரும் அத்திசையில் தம் பங்கை, சிறப்பான பங்கை செலுத்துகின்றனர் என்பதும் உண்மை. காலப்போக்கில் ஸ்வந்த வீடு, வண்டி வசதிகள், ஸுகம் அளித்திடும் ஸாதனங்கள், ஒவ்வொருவரும் கொண்டு வரும் பண வரவு, என்று எல்லாம் வளர்ந்து விடுகிறது. குடும்பத்தினர் அனைவரும் கூடி அமர்ந்து பழைய நினைவுகளைப் பேசினால், பழைய போராட்ட காலத்தின், பரஸ்பர ஒத்துழைப்பும், அன்பும் இணக்கமும் பகிர்தலும் இருந்த காலத்தின்', தன்னுள் இருந்த மிகச் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்திய காலத்தின், 'பொற்காலத்தின்' பலப் பல நினைவுகள் கிளறி எழுகின்றன. வஸதிகளும் வளமும் நிறைந்த இக்காலத்திலும் அவை எல்லாம் உயிருடன் இருக்க வேண்டும் என்றால், தழைத்து இருக்க வேண்டும் என்றால், அது அக்குடும்பத்தின் முன் ஒரு பெரிய ஸவால்தான்.
அதற்கு, தொடர்ந்த முயற்சி, ப்ரக்ஞா வுடன் கூடிய முயற்சி, ஸ்வ-நினைவுடன் கூடிய முயற்சி தேவை. பொதுவாக, இது துர்லபம். அரிது. "நாங்கள் ஒரு சிறிய அறையில் இருந்தோம். ஏழு எட்டு நபர்கள். ஒவ்வொரு நாளும் ஊருக்குள் போய், நாள் முழுதும் உழைத்து, மாலையில் பணத்துடன் வீட்டிற்குத் திரும்புதல் என்பது பெரும் ப்ரயத்னமாக இருந்தது. ஸாதாரண உணவுதான். கூடுதல் பணம் தேவைப் படும் பண்டிகை, நோய்நொடி, ஆபத்து - விபத்துக்கள், போன்ற ஒவ்வொரு தருணமும் ஒரு பெரிய ஸவாலாக இருந்தன. ஆனால், நாங்கள் வெற்றிகரமாக அத்தருணங்களில் இருந்து வெளி வந்தோம். பரஸ்பர அன்பு, ஒத்துழைப்பு, பகிர்தல், விட்டுக் கொடுத்தல் இவை தான் அத்தருணன்களைக் கடக்கப் பயன்பட்ட ஓடங்கள். எங்கள் குடும்பத்தில் ஸந்தோஷம் இருந்தது. ஸங்கீதம் இருந்தது. இன்று? எங்கள் இருவருக்கு மிகப் பெரிய பங்களா உள்ளது. ஆனால்...." ஒரு நீண்ட பெருமூச்சுடன் முடியும் இவ்வார்த்தைகளைப் பலரும் பேசக் கேட்டிருக்கிறேன்.
விரிதல் என்பதன் மஹத்வத்தை இங்குதான் அறிகிறோம். சிறிய 'என் குடும்பம்' 'என் குழந்தைகள்' என்ற வட்டத்தை விரித்து, பெரிய அடுத்த வட்டங்களை, வீதி, க்ராமம், ஸமூஹம், வனவாஸி மக்கள், என்ற ஒரு வட்டத்தை அரவணைத்து 'என்னுடைய' தாக்கிக் கொள்ளுதல். இந்த விரிதலில் வெற்றி அடைந்தால், நம் வசதிகள், நாம் ஸம்பாதித்த வளம் எல்லாம் அந்த விரிந்த வட்டத்தினுடையதாகி விடும். பகிர்தல் மீண்டும் வந்து விட்டதால், உத்ஸாஹம் திரும்பி விடும். ஆனந்தம் திரும்பி விடும்..
ஆனால், ஒரு எச்சரிக்கை. விரிதலுக்கான இம்முயற்சியை வயஸான காலத்திற்காக ஒத்தி வைக்கலாகாது. இளமையிலேயே தொடங்க வேண்டும்.
Comments
Post a Comment