ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 22
स्वधर्मे निधनं श्रेयः (अध्याय ३ - श्लोक ३५).
ஸ்வதர்மே நிதனம் ஸ்ரேயஹ (அத்யாயம் 3 - ஶ்லோகம் 35).
Swadharme Nidhanam Shreyah (Chapter 3 - Shlokam 35).
அர்தம் : ஸ்வதர்மத்தில் மரணமும் மேன்மையானதே. எளிமையாகச் சொன்னால் "காபி அடிக்காதே" என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன். உன்னுடைய ஸ்வயத் தன்மைக்குள் இருந்திடு என்கிறார் .
ஒரு CBSE பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்க் கூட்டம் நடத்தும் போது, வந்தவர்கள் அனைவரிடமும் நான்கு கேள்விகள் எழுதப்பட்ட ஒரு தாள் கொடுத்தேன்.
அந்த நான்கு கேள்விகள் பின்வருமாறு...
1. நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
2. நீங்கள் செய்திடும் வேலையைப் பற்றி, உங்களுக்கு முழுமையான ஸந்தோஷம் (பூர்ண த்ருப்தி) உள்ளதா?
3. இல்லை என்றால் வேறு என்ன செய்ய விரும்புகிறீர்கள்?
4. ஏன் ??
முதல் கேள்விக்கான பதிலில் அரஸாங்க வேலை, போலீஸ், இஞ்ஜினீயர், வக்கீல், ட்யூஷன், கடை நடத்துதல், ஏஜன்ஸீ, கட்டிட கான்ட்ராக்டர், வ்யவஸாயம், போன்ற பல வேலைகள் குறிப்பிடப் பட்டிருந்தன.
இரண்டாவது கேள்விக்கு நான்கைந்து நபர்கள் தவிர மற்ற அனைவரும் இல்லை என்று எழுதி இருந்தனர்.
ஆஶ்சர்யம் என்னவென்றால் மூன்றாவது கேள்விக்கான பதில்களும் முதல் கேள்விக்கான பதில்களும் ஒன்றாகவே இருந்தன. ஆனால், வெவ்வேறு தாள்களில்.. முதல் கேள்விக்கான இவருடைய பதில் மற்றவருடைய தாளில் மூன்றாம் கேள்விக்கான பதிலாக இருந்தது. அதாவது, ஒருவர் "ஸந்தோஷம்" இல்லை என்று கருதிய வேலையை மற்றொருவர் செய்ய விரும்புகிறார்.
ஏன் என்ற நான்காம் கேள்விக்கு தத்தம் வேலையில் உள்ள கஷ்டங்களை அடுக்கி இருந்தனர் . செய்ய விரும்பும் வேலையில் இந்த கஷ்டங்கள் இல்லை என்றும் எழுதி இருந்தனர்...
கடை நடத்துபவன் தான் கட்ட வேண்டிய வாடகை, மின்ஸார கட்டணம், அரஸாங்க வரிகள், இவற்றை நினைத்து, சாலை ஓரத்தில் நடை வண்டியில் ஸமோஸா விற்பவனைப் பார்த்து பொருமுகிறான். அவனோ, "விடியற்காலை 03.30 மணிக்கு எழுந்து தயாரிப்புகள் செய்ய வேண்டிய தன் வேலையை நினைத்து , இவன் ஹாய்யாக காலை ஒன்பது மணிக்குக் கடையைத் திறந்து விட்டு, நாள் முழுவதும் A C யில் அமர்ந்து விட்டு இரவு வீட்டிற்குச் சென்றிடும் இவனைப் பார்த்து பொருமுகிறான்.
ஒவ்வொரு வேலையிலும் வஸதிகளும் உண்டு கஷ்டங்களும் உண்டு. மற்றவர் செய்திடும் வேலையில் உள்ள சௌகர்யங்கள் நம் கண்களில் படும். ஆனால், அவ்வேலையில் உள்ள கஷ்டங்கள் அவருக்கு மட்டுமே தெரியும். தன் ஸ்வபாவத்திற்கேற்ற ஒரு வேலையை ஆனந்தமாகச் செய்தலே சிறப்பு. அதில் உள்ள வருமானம், செலவுகள், வஸதிகள், கஷ்டங்கள், இவற்றைப் பொறுத்துக் கொள்வதே சிறப்பு .
Comments
Post a Comment