ॐ
கீதையில் இருந்து சில சொற்றொடர்கள் - 24
काम एष ... क्रोध एष .... (अध्याय ३ - श्लोक ३७)
காம ஏஷ ... க்ரோத ஏஷ .... (அத்யாயம் 3 - ஶ்லோகம் 37)
Kaama Esha ... Krodha Esha ... (Chapter 3 - Shloka 37)
அர்தம் : காமமும் க்ரோதமும் தான் அந்த ரெண்டு காரணங்கள்...
ஸ்ரீ க்ருஷ்ணன் அர்ஜுனனின் கேள்விக்கு அளித்த பதில் இது. "மநுஷ்யன் பாபத்திற்கு ஏன் தள்ளப்படுகிறான்?" மநுஷ்யனை பாபத்திற்குத் தூண்டுபவை எவை?" என்ற அர்ஜுனனின் கேள்விக்கு ஸ்ரீ க்ருஷ்ணன் அளித்த பதில். "காம - க்ரோத ... மநுஷ்ய மனஸைப் பற்றி ஸ்ரீ க்ருஷ்ணன் ஆற்றிய அழகானதொரு உரையின் முதல் இரண்டு வார்த்தைகள் இவை.
காமம் என்பது ஶரீர ரீதியான இச்சை மாத்ரம் இல்லை. எந்த ஒரு அடாத விருப்பமும், முறையற்ற எந்த விருப்பமும் காமமே. பசி எடுத்தால் உணவு வேண்டும் என்ற விருப்பம் காமம் இல்லை. பசிக்காக மட்டும் உணவை நாடினால் காமம் இல்லை. அலையும் நாக்கின் ருசிக்காக உணவை நாடினால் அது காமமே. கீதையில் மற்றொரு ஸந்தர்பத்தில், "தர்ம அவிருத்தோ காமோsஸ்மி" அதாவது தர்மத்திற்கு முரண்படாத காமம் நானே என்கிறான் ஸ்ரீ க்ருஷ்ணன். அதன் படி, தர்மத்திற்கு உட்பட்ட ஶரீர இச்சையும் தெய்வீகமே"
க்ரோதம் என்பது உள்ளே பதுக்கி வைக்கப்பட்டு, ஸரியான ஸந்தர்பம் வரும் போது வெடித்துக் கிளம்பத் தயாராக உள்ள கோபம் அல்லது ஆவேஶம். பழி தீர்த்துக் கொள்ளும் உந்துதல் க்ரோதத்தின் வெளிப்பாடு. கோபத்திற்கும் க்ரோதத்திற்கும் ஒரு வித்யாஸம் உண்டு. கோபம் என்பது தத்க்ஷணம் வெளிப்படும் ஒரு எதிர்ப்பு உணர்வு. கோபம் நீண்ட காலம் போற்றிப் பாதுகாக்கப் பட்டால் அது க்ரோதமாக மாறி விடும். கோபத்திற்குக் காரணமான நபர் அல்லது விஷயம் மீது பழி வாங்கும் உணர்வும் தொற்றிக் கொண்டால், கோபம் க்ரோதமாக மாறி விடும். கோபம் இயல்பாக உள்ள ஒரு உள்ளுணர்வு. ஆனால், க்ரோதம் வெளியில் இருந்து ஏற்கப்பட்டு, மனஸில் போற்றி வளர்க்கப் பட்ட ஒரு உணர்வு. ஸம்ஸ்க்ருதத்தில் ஒரு ஸுபாஷிதம் உண்டு. " क्षण कोप उत्तमम् | जाम कोप मध्यमंम् | प्रहर कोप अधमम् | அதாவது கோபம் க்ஷண நேரம் இருந்தால் அது உத்தமம். ஒரு ஜாமத்தைத் தாண்டி கோபம் நிலைத்தால் அது மத்யமம் அல்லது ஸாதாரணம். கோபம் ஒரு ராத்ரீயைத் தாண்டி அடுத்த நாள் வரை நீடித்தால் அது கீழ்த்தரம். கோபம் என்பது அடி, வலி, வேதனை இவற்றிற்கு ஒரு எதிர்ப்பு உணர்வு. ஆனால், க்ரோதம் அந்த வேதனையை ஏற்படுத்திய நபர் மீது தோன்றிடும் எதிர்ப்பு உணர்வு. ஏற்பட்ட வலி மங்கினால் கோபமும் மங்கி விடும் வாய்ப்பு உண்டு. ஆனால், க்ரோதம் என்பது பழி தீர்த்த பின்னரும் தொடர்ந்திட வாய்ப்பு உண்டு. குருக்ஷேத்ர யுத்தத்திற்குப் பின்னர் குருடன் த்ருதராஷ்ட்ரனும் அவன் மனைவி காந்தாரியும் பாண்டவர்களின் நிழலில் வாழ வேண்டிய துர்பாக்யம் எற்பட்டது. ராஜா யுதிஷ்டிரன் அவர்களை அன்புடன் பார்த்துக் கொண்டார். ஆனால், பீமன் அவர்களைக் காணும் போதெல்லாம் தன் புஜத்தினைத் தட்டிய படி, "இந்தக் கைகள்தான் து:ஷாஸனின் மார்பைப் பிளந்தெடுத்தன. இந்தக் கைகள் தான் துர்யோதனனின் கைகளை அவன் உடலில் இருந்து பிய்த்து எடுத்தன." என்று கூறுவான். க்ரோதத்திற்குத் தீனி போடும் அவன் வழிமுறை இது.
ஸ்ரீ க்ருஷ்ணனின் கூற்றுப்படி காமமும் க்ரோதமும் மநுஷ்யனை பாபத்திற்குத் தூண்டும் இரண்டு காரணங்கள் பாபம் என்பது என்ன? மஹாபாரதம் பாபத்தை எளிமையான வார்தைகளில் விளக்குகிறது. "பாபாய பர பீடனம்"... அதாவது பிறர்க்கு பீடை அளிப்பது, வலி அல்லது வேதனை அளிப்பதே பாபம் என்கிறது மஹாபாரதம். ஒரு விஷயத்தை அடைந்திடும் விருப்பமும், ஒரு அநுபவத்தை ஸுகிக்கும் விருப்பமும் ஒரு அந்தஸ்தை அடைந்திடும் விருப்பமும் காமம். இவ்விருப்பங்களுக்குத் தடையாகத தெரிந்திடும் விஷயங்கள் மற்றும் நபர்களை தடுப்பதும், அழிப்பதும் க்ரோதம். இந்த ரெண்டும் இருந்தால் பிறருக்குத் தீங்கு விளைவிப்பது, வலி அல்லது வேதனைக் கொடுப்பது, அதாவது பாபம் செய்தல் தவிர்க்க முடியாததல்லவா. பாபம் தேஹ ரீதியான செயல்கள் மாதரம் இல்லை. காமம், க்ரோதம் என்ற இவ்விரண்டு ஆயுதங்கள் உடன் இருந்தால், வார்த்தைகளும் மனஸில் உதிக்கும் எண்ணங்கள் கூட பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் ஆற்றல் கொண்டவையாக மாறி விடும்..
அப்படியென்றால் அன்றைய மன்னர்களும் இன்றைய மந்திரிகளும் இதன் வசப்பட்டு தானே இருக்க வேண்டும்.
ReplyDeleteஅப்படியென்றால் அன்றைய மன்னர்களும் இன்றைய மந்திரிகளும் இதன் வசப்பட்டு தானே இருக்க வேண்டும்.
ReplyDeleteதங்கள் கேள்வி புரியவில்லை...
Delete