ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 25
तस्माद् त्वम् इन्द्रियाण्यादौ नियम्य ... (अध्याय ३ - श्लोक ४१).
தஸ்மாத் த்வம் இந்ரியாண்யாதௌ நியம்ய.... (அத்யாயம் 3 - ஶ்லோகம் 41).
Tasmaat Tvam Indriyaanyaadau Niyamya .... (Chapter 3 - Shloka 41).
அர்தம் : அதனால் முதலில் இந்த்ரியங்களை ஒழுங்கு படுத்து .
இந்த்ரியங்கள் மொத்தம் பத்து. ஐந்து க்ஞானேந்த்ரியங்கள் மற்றும் ஐந்து கர்மேந்த்ரியங்கள். என்பதை நாம் அறிவோம். இவற்றில் க்ஞானேந்த்ரியங்கள் ஐந்தும் ஸுக போகத்திற்கான கருவிகளும் ஆகும். இவ்வைந்து இந்த்ரியங்கள்தான் மனஸை இன்பத்தில் ஆழ்த்தக் கூடியவை. அதே போல, இவையே மனஸை துன்பத்தில் ஆழ்த்தும் ஆற்றலும் கொண்டவை. இந்தப் புலன்கள் மூலம் கிடைக்கப் பெற்ற அனுபவங்களின் ஆதாரத்தில் இஷ்டம் - அநிஷ்டம் ; விருப்பு - வெறுப்பு ; பிடித்தவை - பிடிக்காதவை ; ஆகிய பட்டியல்களைத் மனஸ் தயார் செய்கிறது. இப்பட்டியல்களின் அடிப்படையில் அனுபவங்களைப் பாகுபடுத்தி இன்பத்தில் துள்ளுகிறது அல்லது துயரத்தில் மூழ்குகிறது.
ஸமத்வம் யோக உச்யதே அதாவது ஸமநிலையே யோகம் என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணன். மேற்கூறிய அனுபவங்கள் கிடைத்திடும் போது ஸமநிலை இழந்திடாத மனஸே யோக ப்ராப்திக்கு அர்ஹதை கொண்டது..
இந்த்ரியங்கள் தம் கார்யத்தை எங்ஙனம் செய்கின்றன? இந்த்ரியங்கள் நம் ஶரீரத்தின் த்வாரங்கள். ஒரே திஶையில், வெளி நோக்கி அதாவது புற உலகத்தை நோக்கித் திறந்திடும் த்வாரங்கள். வெளி உலகத்தில் நிறைந்து கிடக்கும் விஷயங்களுடன் இணைவதும், அவ்விணைதலின் அனுபவங்களை உள்ளே அனுப்புவதும் இந்த்ரியங்களின் ப்ரதான கார்யங்கள் ஆகும். வெளியில் திரிந்து உலக விஷயங்களுடன் இணைந்திடும் கார்யத்தில் கட்டுப்பாடுகள் விதித்தலோ இணைதலின் மூலம் கிடைத்த அனுபவங்களின் செய்திகளை உள்ளே அனுப்புவதைத் தடுத்து நிறுத்துவதோ இந்த்ரியங்களால் இயலாதவை. ஒன்று இந்த்ரியங்கள் வலுவிழந்து செயலற்றவை ஆக வேண்டும் அல்லது அந்த த்வாரங்கள் பலவந்தமாக அடைக்கப் பட்டு புலன்கள் அடக்கப் பட வேண்டும்.. இவ்விரண்டு வழிகளில் மட்டுமே இந்த்ரியங்களின் கார்யம் தடுக்கப்பட முடியும். மனஸின் ஸமநிலையைக் கெடுப்பதில் புலன்களின் பங்கு மஹத்தானது. ஆனால், ஸமநிலை / ஸமத்வம் ஏற்படுத்துவதில் புலன்களின் பங்கு அல்பமானது. இந்த பின்னணியில்தான் ஸ்ரீ க்ருஷ்ணனின் மேற்கூறிய யோஜனை வருகிறது. இந்த்ரியங்களை ஒழுங்கு படுத்திடு. கட்டுப் படுத்திடு என்று சொல்லவில்லை. ஒழுங்கு படுத்துதல் என்றால் இந்த்ரியங்களை Block செய்தலோ Censorship செய்தலோ இல்லை. தம் இஷ்டத்திற்கு வெளி உலகில் திரிய விடாமல், அவை ஒழுங்கான முறையில், புத்தியின் ஸ்வய நினைவுடன் வெளியே விஷயங்களைத் தேடி இணைய வேண்டும். அதுவே இந்த்ரியங்களை ஒழுங்கு படுத்துதல் என்பதன் தாத்பர்யம். ஸ்ரீ க்ருஷ்ணனின் கூற்றுப்படி அப்யாஸம் (இடையறாத பயிற்சி ) மற்றும் வைராக்யம் (பற்றின்மை) மூலம் இதை ஸாதிக்கலாம்.
Comments
Post a Comment