என்னையும் (தம்பி ஶ்ரீ வெங்கடேஷ் மற்றும் இரண்டு தங்கைகள் ஶ்ரீமதி ராதா ஜ்யோதிராமன் ஐயர் & ஶ்ரீமதி உமா கோதண்டராமன் இவர்களையும் ) இந்த உலத்திற்குள் ஸுமந்து வந்த ராஜலக்ஷ்மீயின் பூ லோக வாழ்க்கை இன்று மத்யாஹ்னம் முடிந்தது. விழுப்புரத்தில் ரயில்வே காலனியில் பிறந்து, வளர்ந்து, பள்ளிப் படிப்பு முடித்து,..... பிறந்த வீடு பாரம்பர்யக் குடும்பம்.. வேதம், ஸம்ப்ரதாய பஜனை, ஸங்கீதம்,, என்ற ஸூழ்நிலையில் . குழந்தைப் பர்வம், குமரிப் பர்வம்..... காஞ்சி காமகோடி மடத்துடன் இணைந்த குடும்பம். ஶ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் பூர்வாஶ்ரம குடும்பம் இவர்களது பக்கத்து வீட்டில் வஸித்தது...தந்தையும் ஸஹோதரர்கள் இருவரும் வேதம் பயின்றவர்கள்... ஸஹோதரிகள் மூவரும் இரு ஸஹோதரர்களும் மிகச் சிறந்த ஸங்கீத உபாஸகர்கள்... இவளுடைய ஸஹோதரி ஸீதா மெல்லிஸைப் போட்டியில் P லீலா கையால் பரிஸு வாங்கியவள்... இந்தச் சூழலில் வளர்ந்த ராஜலக்ஷ்மீ , தனது 18 வது வயஸில் , திருமணம் ஆகி, விழுப்புரத்தில் இருந்து 1,400 கி மீ தூரம் நாக்பூரில் மணியன் குடும்பத்தில் மூத்த மருமகளாக முற்றிலும் மாறுபட்ட சூழலுக்கு இடம் பெயர்ந்தாள்.. இங்கு பெரிய குடும்பத்தில் பெரிய பொறுப்பு... அதை ஏற்ற தோள்களோ பூஞ்ஜையான, மென்மையான தோள்கள்... கூட்டுக் குடும்பத்தில் ஒற்றுமையை உறுதிப் படுத்தும் பொறுப்பு மூத்த மருமகள் மீதே .. நாங்கள் 8, 9 பேரன், பேத்திகள் (ஶ்ரீ மணியனின் பேரன் பேத்திகள் மொத்தம். 14) ஸிறுவர்களாக இருந்த போது, மூன்று மருமகள்களும் சேர்ந்து "மலை மலையாக" செய்த ஸமையலைப் பற்றியும் "மலை மலையாகக்" குவிந்த பாத்ரங்களைத் தேய்த்த ருசிகரமான பல ஸம்பவங்கள் கேட்டிருக்கிறோம்.. இந்த Hectic காலகட்டத்திலும் ஸங்கீதம் அவளை விட்டு மறையவில்லை... ஸௌந்தர்ய லஹிரி, அபிராமி அந்தாதி, அன்னபூர்ணாஷ்டகம், கணேஷ பஞ்சரத்னம், மார்கபந்து ஸ்தோத்ரம், தஶாவதார ஸ்தோத்ரம்., பஜ கோவிந்தம், லக்ஷ்மி அஷ்டகம், வைத்யநாத அஷ்டகம், ஶிவ பஞ்சாக்ஷரம் ஸ்தோத்ரம், , , லிங்காஷ்டகம், ஹனுமான் சாலீஸா, என்று பலப்பல ஸ்தோத்ரங்களையும் ஶ்லோகங்களையும் மனப்பாடம் செய்து , அழகான பல ராகங்களில் மெட்டமைத்து, இனிமையான குரலில் பாடியபடி ஸமைப்பது என்ற அவளது பழக்கம் காரணமாக, ஸங்கீதம் அவளுள் உயிருடன் இருந்தது. நாங்களும் எவ்வித பெரும் ப்ரயாஸை இல்லாமல் பல ஶ்லோகங்களையும் ஸ்தோத்ரங்களையும் கற்றோம்.. உணவைப் பற்றி, ஸமையல் பற்றி, பகிர்ந்தளிப்பதைப் பற்றி, வீட்டிற்கு வருபவர்களை உபசரிப்பதைப் பற்றி, அவளது பழக்கங்கள், வழக்கங்கள், எங்களது வாழ்க்கைக் கண்ணோட்டத்தை மேம்படுத்தியது... நான் ஏழாம் வகுப்பில் இருந்த போது, விஜய தஶமி - தீபாவளி விடுமுறையில் வீட்டில் அலமாரியில் இருந்த ராமாயண புஸ்தகத்தை எடுத்துப் படித்தேன்.. நான் படித்ததென்னவோ ஒரு கதைப் புஸ்தகம் என்ற பாவனையுடன் தான். ஏழெட்டு நாட்களில் புஸ்தகத்தைப் படித்து முடித்த அன்று, வீட்டில் பாயஸம் செய்திருந்தாள். "இன்று பாயஸத்திற்கு என்ன காரணம்?" என்று நான் கேட்ட போது, " இன்று ராமர் பட்டபிஷேகம் நடந்தது." புரியாமல் முழித்தேன். "நீ இன்று ராமாயணம் படித்து முடித்தாய்". எந்த ஔபசாரிக் ஷடங்கும் இல்லாமல், எவ்வித ப்ரயாஸையும் இல்லாமல் மிகவும் ஸஹஜமாக என் மனஸில் ராமாயணம் ஒரு ஸாதாரண கதைப் புஸ்தகம் இல்லை... ஒரு தெய்வீக புஸ்தகம் அது என்பதைப் பதிய வைத்தாள். BE இறுதி வர்ஷத்தில் நான் ஸங்க ப்ரசாரக்காகச் செல்வது என்ற என் முடிவை அறிவித்த போது, RSS என்றால் என்ன என்று அறியாத போதும், "யோஜனைப் பண்ணி, உனக்கு ஸரி என்று பட்டால், செய்" என்று பதில் அளித்தாள். கோபம் இல்லை, அழுகை இல்லை, எதிர்ப்பு இல்லை, ஸந்தேஹம் இல்லை...
தம்பி - தங்கைகளுக்கும் அவர்களது வாழ்க்கைகளில் எற்பட்ட ஸில சலனங்கள் முதல் பெரும் புயல் வரை அனைத்தையும் ஸமாளிக்கும் ஆற்றலையும் அறிவையும் புகட்டி... வீட்டிற்கு வந்த மருமகளுக்கு குடும்ப பாரம்பர்யத்தை , பழக்க-வழக்கங்களைக் கற்று கொடுத்து, குடும்பப் பொறுப்பு சற்றுக் குறைந்த நிலையில் ( நாங்கள் நால்வரும் பள்ளீக் கல்வி முடித்து கல்லூரியில் நுழைந்த பிறகு, நாக்பூரில் தமிழ்ப் பெண்டிருக்கு லலிதா ஸஹஸ்ர நாமம், அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி, திருப்புகழ், பஜனைகள், என்று Batch Batchசாக நூற்றுக்கணக்கனோருக்குக் கற்றுக் கொடுத்து, பாரதியார் பாடல் போட்டி, திருப்பாவைப் போட்டி, த்யாகராஜ கீர்த்தனை போட்டி போன்ற தருணங்களுக்காக குழந்தைகளைத் தயார் செய்து,. ஶ்ரீ ஸ்கந்த ஶஷ்டி, ராதா கல்யாணம் போன்ற தருணங்களுக்கு பெண்களின் கோலாட்டக் குழுக்களைத் தயார் செய்து, தன் ஸ்வந்த பூஜைகளையும் விடாமல், மார்கழி மாஸம் முழுவதும் விடியற்காலை எழுந்து அஷ்டபதிகளையும் திருப்பாவையும் பாடும் பழக்கத்தை விடாமல், கோகுலாஷ்டமீ, ஶ்ரீ ராம நவமீ, பிள்ளையார் சதுர்தீ, தீபாவளி, கார்த்திகை, காரடையான் நோன்பு, சித்திரை ஒன்று, பொங்கல், வைகுண்ட ஏகாதஶி, திருவாதிரை, போன்ற பண்டிகைகளின் பூஜை மட்டும் அல்லாது அந்தந்த உத்ஸவத்தின் விஶேஷ ப்ரஸாத வகைகளை தன் கைப்பட செய்து, (அதிலும் நம் வீட்டில் பல தின் பண்டங்களை டப்பா டப்பாவாக செய்து வைக்கும் வழக்கம்..தம்பியின் நண்பர்கள், தற்போது பேரன் ஶ்ரீ விஶ்வமோஹன் வீட்டிற்குள் வந்தால் எட்டு பத்து நண்பர்களுடனே வருவான்...), அன்றாட ஸமையல் வேலையையும், , வீட்டிற்கு யார் வந்தாலும் எத்தனை பேர் வந்தாலும் அலுக்காமல், ஸலிக்காமல் உணவு தயார் செய்து, பரிமாறி, நாட்டின் நடுவில் இருக்கும் நாக்பூர் வழியாக உறவினர்கள், தெரிந்தவர்கள், ஸங்கத்தினர் என்று யார் சென்றாலும் உணவு, காபி எடுத்துச் சென்று ரயில் நிலையத்தில் சென்று ஸந்திக்கும் பழக்கத்தையும் விடாமல், ஓஹோ ஹோ... அஸாத்யமான ஒரு Hectic வாழ்க்கை.. இவற்றுக்கு மத்தியில் ப்ரஸவம் பார்க்க ஓரிரு மாஸங்கள் போய்த் தங்குவதும், புதிதாகத் திருமணம் ஆன குழந்தைகளுடன் ஓரிரு மாஸங்கள் தங்கி அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சுஶ்ருஷை செய்யப் போவதும்... கடும் நோயால் பாதிக்கப் பட்ட என் முதல் மனைவி அகிலாவிற்கு இரண்டு வர்ஷங்கள்...அவளது கடைஸீ மூச்சிற்கு பத்து நிமிஷங்கள் முன் வரை, அவளுக்குத் தேவையான பத்ய சாப்பாட்டைத் தயார் செய்து கொடுத்த புண்யவதீ... இவளுக்குக் குழந்தைகளாகப் பிறந்த நாங்கள் பாக்யஶாலிகள்.... பெரும் பாக்யஶாலிகள்... நான் அவளை Observe செய்வதில், பெரும் ஆனந்த க்ஷணங்களை அனுபவித்திருக்கிறேன். நான் ஸமையல், தையல், போன்ற கலைகள் கற்க முயற்சிப்பதும்... உறவுகள் செம்மையாக வைத்துக் கொள்வது, எதிராளி எப்படி இருந்தாலும் நான் என் ஸ்வபாவப் படி இருப்பேன் என்பதில் உறுதி என்றும் உத்ஸாஹம், பாரபக்ஷம் இல்லாமை... போன்ற பல தன்மைகளை என்னுள் வளர்த்துக் கொள்ள முயற்சிப்பதும் ஸந்தேஹம் இன்றி எங்கள் அம்மா ராஜலக்ஷ்மீ யைப் பார்த்ததால்.. மட்டுமே..... ,
அம்மா,
ReplyDeleteநிச்சயம் ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் நல்ல அம்சங்களை விதைப்பதில் முக்ய பங்கு வகிப்பவள். உங்களின் மூலமாக அவளைக் காணாதவர்கள் தர்சித்துக் கொள்ளலாம் என்றே உங்கள் கட்டுரையிம் மூலம் உணர்கின்றேன். நேரில் சந்திக்கும்போது பேசுவோம்
பிரமாதம் அம்மா அம்மாதான்.
ReplyDelete