ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 30
जन्म कर्म च में दिव्यम्। .. (अध्याय ४ - श्लोक ९)
ஜன்ம கர்ம ச மே திவ்யம் ... (அத்யாயம் 4 - ஶ்லோகம் 9)
Janma Karma cha Me Divyam ... (Chapter 4 - Shloka 9)
அர்தம் : என்னுடைய வாழ்வும் கர்மங்களும் திவ்யமானவை. தெய்வீகமானவை.
வாழ்க்கை திவ்யமானது. ஶரீரம், மனஸ், புத்தி, குணங்கள், போன்று நான் பெற்ற கருவிகள் திவ்யமானவை. இக்கருவிகள் மூலம் நான் செய்ய விழையும் கர்மங்கள் திவ்யமானவை. வாழ்க்கையின் நோக்கம் திவ்யமானது. நான் பிறந்த பூமீ, நான் பிறந்திருக்கும் குடும்பம் மற்றும் ஸமுதாயம் திவ்யமானவை. எனக்கு வாய்த்த முன்னோர்கள் திவ்யமானவர்கள். அவர்கள் எனக்கு அருளிச் சென்றிருக்கும் ஸம்ஸ்க்ருதி (பண்பாடு), மொழிகள், அவற்றில் ஸாஹித்யங்கள், ஸங்கீதம் போன்ற கலைகள், ஸமுதாயத்தின் பல்வேறு அமைப்புக்கள், அனைத்தும் திவ்யமனவை.
நான் இதை உணர்கிறேனா என்பதுதான் என் முன் உள்ள ஸவால். வாழ்க்கையில் ஏதோ ஒரு வயஸில், எனக்குக் கிடைத்திருக்கும் வாழ்நாள் முடிந்து விடுவதற்குள் உணர்கிறேனா என்பதுதான் என் முன் உள்ள மிகப்பெரிய ஸவால். உணர்ந்து விட்டால், பூர்ணமாக இல்லா விட்டாலும், ஸ்வல்பமாகவேனும் உணர்ந்து விட்டால்,... நான் இந்த வாய்ப்பைத் தவற விடுவேனோ ?? கையில் இருப்பது வைர - மாணிக்கக் கல், விலை மதிப்பிட முடியாத பொக்கிஷம், என்று தெரியாமல், அதைக் கொடுத்து, இரண்டு பஜ்ஜி அல்லது பளபளப்பாக மின்னும் ஏதோ ஒரு ப்ளாஸ்டிக் குப்பையை, ஏதோ ஒரு அல்ப விஷயத்தை வாங்கிடும் மூடனைப் போலாகி விடுவேனோ ?? நேரத்தை வீண் பொழுதுபோக்குகளிலும், வெற்று அரட்டையிலும் கழிப்பேனோ ?? ஶரீரத்தை அனாவஶ்யமான பழக்கங்களில் கெடுத்துக் கொள்வேனோ ?? வயிற்றுக்கு சோற்றை ஸம்பாதிப்பதே ப்ரதானம் என்று கருதி, என்னுடைய உழைப்பை யார் யாருக்கோ அடகு வைத்து மீட்க முடியாமல் வருந்துவேனோ ?? என் மனஸ் மற்றும் புத்தியை, குணங்கள் மற்றும் ஆற்றலை, குறுக்கு வழிகளுக்காகவும், ஏமாற்று வேலைகளுக்காகவும், பிறரின் ஸ்வயநலத் திட்டங்களுக்காகவும், அர்பணித்து விடுவேனோ ?? பெற்றோர், ஸஹோதர - ஸஹோதரி மற்றும் ஸுற்றத்துடன் பொறாமை கொண்டு, போட்டி இட்டு, கசப்பை வளர்த்துக் கொள்வேனோ ?? வாழும் மண்ணைக் குப்பைக் கூளமாக்கிட, மொழியைக் கொச்சைப் படுத்திட, ஸமுதாயத்தின் அமைப்புக்களை சேதப் படுத்திட, பண்பாட்டைச் சீரழித்திட, நடந்திடும் பல்வேறு முயற்சிகளுக்கு ஆதரவாக தெரிந்தோ, தெரியாமலோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ என் பங்கினைச் செலுத்திடுவேனோ ?? தேடிச் சோறு நிதம் தின்று, பல சின்னஞ்சிறு கதைகள் பேசி, மனம் வாடி, துன்பம் மிக உழன்று, பிறர் வாடப் பலச் செயல்கள் செய்து, நரை கூடி, கிழப் பர்வம் எய்தி, கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்... என்று பாரதியார் வர்ணித்த வேடிக்கை மனுஷ்யனாய் வாழ்ந்து இறந்து விடுவேனோ ??
நான் திவ்யமானவன், என் வாழ்க்கை திவ்யமானது என்பதை என் சுற்றமும், பந்துக்களும் மித்ரர்களும் புரிந்து கொள்கின்றனரா ?? இல்லை என்றுதான் வேண்டும். ஸ்ரீ க்ருஷ்ணன் வாழ்ந்த காலத்தில் அவரைச் சுற்றி வாழ்ந்தோரில் பெரும்பாலோர் அவரது திவ்ய ஸ்வரூபத்தை, தெய்வீகத் தன்மையைப் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. ஸ்ரீ கௌதம புத்தர் வீட்டை விட்டு வெளியேறி, பன்னிரண்டு வர்ஷங்கள் கழித்து, அவர் ஞானம் பெற்று விட்ட நிலையில், இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ஶிஷ்யர்கள் அவரைத் தம் குருவாக ஏற்றிருந்த நிலையில், அவரது தந்தையார் அவரிடம் சொன்னாராம், "நீ வீட்டிற்குத் திரும்பி விடு. நான் உன்னை மன்னிக்கத் தயாராக இருக்கிறேன்". என்று....
எனவே, அதைப் பற்றிக் கவலைக் கொள்ள வேண்டாம். சுற்றி உள்ளோரின் Certificateற்காக ஏங்க வேண்டாம். உணர்வதும் உணராததும் அவர்களது ஸ்தரத்தைப் பொருத்தது.
Comments
Post a Comment