ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 37
यज्ञायाचरतः कर्म ... (अध्याय ४ - श्लोक २३)
யக்ஞாயாசரதஹ கர்ம ... (அத்யாயம் 4 - ஶ்லோகம் 23)
Yagyaayaacharatah Karma ... (Chapter 4 - Shlokam 23)
அர்தம் : யக்ஞ பாவனையுடன் கர்மங்களைச் செய்பவன் ...
மனுஷ்யன் அடிப்படையில் ஒரு consumer. இது வேண்டும், அது வேண்டும் என்று அலைபவன். எடுத்துக் கொள்பவன். வேண்டும் என்ற தாஹமும் எடுத்துக் கொள்ளும் அவனது தன்மையும் தன் உயிரைப் போற்றிடும் அளவிற்கு இருந்தால் உத்தமம். எளிதாகவும் இலவஸமாகவும் கிடைத்திடும் விஷயம் என்றால் இந்தத் தன்மை அதிகம் ஆகிடும். இவை மிதமிஞ்ஜிடும் போது லோபமாகி விடுகிறது. லோபியிடம் 'வேண்டும்' என்ற இந்த தாஹம் வற்றாதது. எடுத்துக் கொள்ளும் அவனது தன்மையோ வரம்பற்றது. “எனக்குக் கிடைக்கவில்லையே ?" "எனக்கு மாத்ரம் கிடையாதா ?" “நீங்கள் எல்லோரும் கேட்டு வாங்கி இருக்கிறீர்களே. நான் மாத்ரம் கேட்கக் கூடாதா ?" இத்தகையக் கேள்விகள் பற்பல சண்டை சச்சரவுகளுக்கும் சொத்து வழக்குகளுக்கும் காரணமாகி உள்ளன. 'எனக்கு வேண்டும்' என்று நினைத்தால் தவறில்லை. எனக்கும் வேண்டும்' என்று நினைப்பது இழிவு. 'நான் எடுத்துக் கொள்கிறேன். மீதம் இருந்தால் உனக்கு', என்ற எண்ணம் அதமமானது. 'எனக்கு மாத்ரமே' என்ற நினைப்பு மிகக் கீழ்த்தரமானது. 'எனக்குக் கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை. உனக்குக் கிடைக்கக் கூடாது.' என்ற எண்ணம் ராக்ஷஸத் தனமானது.
- ஸுநாமியால் பாதிக்கப் பட்ட மீனவர்களுக்கு ஸேவை செய்திட ஒரு ட்ரஸ்ட் நடத்தி வந்தேன். அதன் மூலம் மாணவர்களுக்கு புஸ்தகங்கள், நோட்டுக்கள், புஸ்தகப்பை, பேனா, போன்ற பொருட்கள் கொடுக்கலாம் என்று முடிவு செய்து, அங்கிருந்த மாணவர்களைப் பற்றிய விவரங்கள் சேகரித்து, தகுந்த எண்ணிக்கையில் பொருட்களை வாங்கி வந்தேன். மீனவ குப்பத்தில் பொருட்களை விநியோகம் செய்திடச் சென்ற போது, ஒரு பெரும் கலவரமான சூழ்நிலை உருவானது. கூச்சலும் எதிர்க் கூச்சலும்.. "நீ மாணவன் இல்லை. உனக்குக் கிடையாது." "இல்லை. இல்லை. நானும் மாணவன்தான்." அருகில் இருந்த SC காலனியிலிருந்து சில மாணவர்கள் பொருட்களை வாங்க வந்தனர். "நீங்கள் எல்லோரும் எப்படி வரலாம் ? உங்களுக்கு ஸுநாமி வந்ததா ? நீங்கள்தான் பாதுகாப்பான உயரத்தில் வஸிக்கிறீர்களே ? போய் விடுங்கள்."
- ஹோடல்களிலும் மற்ற பொது உணவகங்களிலும் நம்மில் பலருக்கும் மற்றவரின் உணவுத் தட்டுக்களைப் பார்த்திடும் பழக்கம் இருப்பதை உணரலாம்.
- பஃபே எனப்படும் விருந்துகளில், "ஓஹோ ! ஐஸ்க்ரீமா ? இதை நான் பார்க்கவில்லையே ? இது எங்கே வைக்கப்பட்டுள்ளது ?" போன்ற வசனங்கள் பேசப்படுவதைக் கேட்கலாம்.
- தமிழக அரஸு இலவஸ டீவி பெட்டிகள் வழங்கப் பட்ட போது, டீவி பெட்டிகளை ஸுமந்து வந்த வண்டிகள் நுழைந்தவுடன், க்ராமத்தில் பெரும் கூச்சலும் கலவரமும் வெடித்திடும்.
- டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் எனப்படும் நவீன அங்காடிகளில் உள்ள கூட்டத்தில் மிகப்பெரும்பாலோர் அங்கு அறிவிக்கப்படும் இலவஸங்களுக்காகவும் தள்ளுபடிக்காகவும் அலைந்திடும் கூட்டம்தான்.
- 'தேஶபக்தியும் கட்டுப்பாடும்' மிகுந்த ஸங்கத்தின் அகில பாரத பொதுக்கூட்டத்தில் பல்வேறு துறைகளில் பணி புரியும் ஸஹ அமைப்புக்கள் தத்தம் அமைப்புகளைப் பற்றிய இலவஸ வெளியீடுகள் (ஹிந்தியில்) அங்கு வந்திருக்கும் அனைவருக்கும் கொடுப்பார்கள். தமிழகத்தில் இருந்து வந்திருக்கும் பெரும்பாலோருக்கு ஹிந்தியின் ஒரு அக்ஷரம் கூட தெரியாது. வர்ணப் படங்கள் தவிர வேறெதுவும் புரியாது. எனினும், எனினும், அங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு பிரஸுரத்தையும் கேட்டு வாங்கி கொள்வார்கள்.
வாங்கி கொள்ளும் இந்த தன்மை, ஏற்கும் இந்தத் தன்மை ஜாதி, ஸமுதாயம், பொருளாதார அந்தஸ்து, படிப்பு என்ற வட்டங்களைத் தாண்டி அனைவரிடமும் காணப்படும்.
இவ்வாறே கொடுத்திடும் தன்மையும் இயற்கையில் உள்ளதுதான். படைப்பில் உள்ள பல்வேறு உயிரினங்களும் கொடுக்கின்றன. ஸூர்யன் கொடுக்கிறான். உஷ்ணத்தை, வெளிச்சத்தைக் கொடுக்கிறான். ஸ்தாவரங்களால் உணவும், ப்ராண வாயுவும் கொடுக்கப் படுவதற்குத் துணை இருக்கிறான். ஸ்தாவரங்கள் கொடுக்கின்றன. பூவும் பழமும், நிழலும், உறைவிடமும் ப்ராண வாயுவும் உணவும் கொடுக்கின்றன. மேகம் மழையைக் கொடுப்பதற்குத் துணை புரிகின்றன. தாம் இறந்த பிறகு, மரக்கட்டையைக் கொடுக்கின்றன. ப்ராணிகள் பிற உயிரினங்களுக்கு உணவும் பூமிக்கு உயிர்ச்சத்தும் கொடுக்கின்றன. மேகம் நீரைக் கொடுக்கிறது. பூமி ஸத்துக்களை அளித்து, அனைத்து உயிர்களையும் போஷித்துக் காக்கிறது. ஆனால், இவை அனைத்தும் இயற்கையாகவே கொடுக்கும் தன்மை கொண்டவை. கொடுப்பதை அன்றி வேறொன்றும் இயலாதவை. மனுஷ்யன் ?? மனுஷ்யனிடம் தான் கொடுத்திடும் ஆற்றல் மிக அதிகம். ஆனால், அவனிடம் கொடுக்கும் தன்மை இயல்பாகக் காணப்படுவதில்லை. அது ஸம்ஸ்காரங்கள் மூலம் அவனுள் வளர்க்கப்படும் அவஶ்யம் உள்ளது. ஒரு சிலரிடம் இந்தத் தன்மை ரக்தத்திலே கலந்து இருந்திடும். பிறவியில் இருந்தே காணப்படும். பூர்வ ஜன்ம வாஸனை என்று விளக்கப் படுகிறது. ஸமுதாயம் இத்தகையோரை மஹான் என்று பூஜிக்கிறது.
ஒரு குருவும் அவரது ஶிஷ்யனும் ஒரு வீட்டு வாஸலில் நின்று, "பவதீ பிக்ஷாம் தேஹீ" என்று கூவினர். வாஸலில் விளையாடிக் கொண்டிருந்த அவ்வீட்டுக் குழந்தை, "போ. போ. வீட்டில் யாரும் இல்லை" என்றது. "ஏன் ? நீ இருக்கிறாயே ?" அந்தக் குழந்தை தன பிஞ்ஜுக் கைகளை வியப்புடன் பார்த்தபடி, "நானா ? என்னால் என்ன கொடுக்க முடியும் ?" என்றது. "ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து இந்தக் கமண்டலத்தில் போட முடியுமே உன்னால்." என்றார் குரு. குழந்தையும் அவ்வாறே செய்தது. ஶிஷ்யனுக்கு இது புதிராக இருந்தது. "குருவே ! இன்று பட்டினிதானா ? நாம் மண்ணையா தின்போம் ? மண்ணைக் கேட்டு வாங்கி இருக்கிறீர்களே ?" "நான் வாங்கவில்லை. கொடுத்திருக்கிறேன்." "கொடுத்திருக்கிறீரா ?" "ஆம். அந்தக் குழந்தைக்கு, கொடுத்திடும் பழக்கத்தைக் கொடுத்தேன். இன்று மண்ணைக் கொடுத்த குழந்தை நாளை பொன்னைக் கொடுத்திடும்." என்றார் குரு.
ஆம். கொடுத்திடும் பழக்கம் போற்றி வளர்க்கப் பட வேண்டும். உள்ளத்தில் இப்பழக்கம் மலரச் செய்ய வேண்டும். நம் ஷடங்குகள் அனைத்தும் கொடுத்தலை ப்ரதானமாகக் கொண்டவை. ஆலய கும்பாபிஷேகம், ஸந்த்யா வந்தனம், ஜன்மம், உபநயனம், விவாஹம், மரணத்திற்குப் பிறகு செய்யப்படும் கர்மங்கள் என்ற அனைத்தும் கொடுக்க வைத்திடும் ஷடங்குகள். ஸூர்யனுக்கு ஒரு சொட்டு நீர்க் கொடு. அக்னீக்கு ஒரு சொட்டு நெய்க் கொடு. தேவ விக்ரஹத்திற்கு ஒரு சொட்டுப் பால் அல்லது தேன் கொடு. பஶுவிற்கு ஒரு கைப்பிடி புல் கொடு. பிக்ஷை கேட்பவருக்கு ஒரு கைப்பிடி அன்னம் கொடு. பறவைகளுக்கு கொடு. நீர் இனங்களுக்கு கொடு. ப்ராணிகளுக்கு கொடு. மநுஷ்யர்களுக்குக் கொடு. உணவு உட்கொள்வதும் கொடுப்பதே. வயிற்றில் உள்ள ஜடராக்னிக்கு உணவை ஹோமம் ஆக்குவது தான் உண்பது. இறந்த ஶரீரத்தை அக்னிக்கு இரை ஆக்குவதும் ஒரு ஹோமமே.
யக்ஞம் என்றால் த்யாகம். யக்ஞம் என்றால் கொடுத்தல். யக்ஞ கர்மம் என்பது த்யாக உணர்வுடன் கர்மங்களைச் செய்தல். யக்ஞம் என்றால் நான் அல்ல, எனதல்ல, நீ. உனது என்ற உணர்வு. கொடு. கொடு. இதம் ந மம. இது என்னுடையதில்லை. இது உன்னுடையது. எடுத்துக் கொள்' என்ற உணர்வு. ஶரீரத்தின் உழைப்பைக் கொடு. மனஸின் உணர்வைக் கொடு. புத்தியின் சிந்தனையைக் கொடு. நேரம் கொடு. நற்சிந்தனையைக் கொடு. செல்வத்தைக் கொடு. ஒளியைக் கொடு. கொடு.கொடு.
ஈஶாவாஸ்ய உபநிஷதில் முதல் வாக்யம் ஈஶாவாஸ்யம் இதம் ஸர்வம் ... தேன த்யக்தேன பஞ்ஜீதா ... இவை அனைத்தும் அவனுடையவை .. எடுத்துக் கொள். த்யாக எண்ணத்துடன் எடுத்துக் கொள். உயிர் வாழ்ந்திடத் தேவையானதை எடுத்துக் கொள். கொடு. கொடு. வேதத்தின் எதிர்ப்பார்ப்பும் இதுதான்.
Comments
Post a Comment