ॐ
கீதையில் ஸில சொற்றொடர்கள் - 43
யோகமாதிஷ்டோத்திஷ்ட பாரத ... (அத்யாயம் 4 - ஶ்லோகம் 42)
Yogamaaatthishtotthishta Bharata ... (Chapter 4 - Shlokam 42)
அர்தம் : யோகத்தில் ஸ்திரமாக நிலைத்து, எழுந்திடு ... பாரத ...
யோகமாதிஷ்டோத்திஷ்ட பாரத ... யோகத்தில் ஸ்திரமாக நிலைத்திருந்து எழுந்திடு .. பாரத !! பரத வம்ஶத்தில் உதித்த அர்ஜுனன் இங்கு பாரத என்று விளக்கப் படுகிறான் . இந்த வார்த்தைகள் ஸ்ரீ க்ருஷ்ணன் அர்ஜுனனுக்காக விடுக்கும் அழைப்பு . அதே ஸமயம் பாரத என்று உபயோகப் படுத்தப்படும் பெயர் இது பாரத தேஶத்திற்கே ஸ்ரீ க்ருஷ்ணன் விடுக்கும் அழைப்பு என்றும் நம்மை எண்ணத் தூண்டுகிறது . விஶேஷமான தேஶம், மிகத் தொன்மையான தேஶம், உன்னதமான தேஶம் என்று அறியப்படும் பாரதம் பல நூற்றாண்டுகளாக தன்னை மறந்த நிலையில், ஆழ்ந்த நித்ரையில் மூழ்கி இருக்கிறாள் என்பதை உணரும் போது ஸ்ரீ கிருஷ்ணன் பாரத தேஶத்திற்கு விடுத்த அறைகூவல் இது என்று கருதுவதில் என்ன தவறு ? வேதமும் இத்தகைய வார்த்தைகளை ப்ரயோகிக்கிறது. உத்திஷ்டத ! ஜாக்ருத !! ப்ராப்யவரான் நிபோதித !!! என்கிறது வேதம் . எழுந்திடு ! விழித்திடு !! லக்ஷ்யத்தை எய்திடும் வரை தளர்ந்திடாதே !!! வேதத்தின் இந்த அறைகூவல் மொத்த மனுஷ்ய ஸமுதாயத்திற்கே என்றால் மிகையாகாது . நூற்று முப்பது வர்ஷங்கள் முன்னர் ஸ்வாமி விவேகானந்த இதே வேத கோஷத்தை ஹிந்து ஸமுதாயத்தைத் தட்டி எழுப்பிட உபயோகப் படுத்தினார் . ஐயாயிரம் வர்ஷங்கள் முன்னரே பாரதத்தின் எதிர்க்கால அவல நிலையை தர்ஶித்த ஸ்ரீ க்ருஷ்ணன் கீதையின் இந்த ஶப்தாவலி மூலம் பாரதத்திற்கு இந்த அறைகூவலை விடுத்திருக்கிறார் .
ஒரு தேஶம் வலிமை கொண்டதாக வளர்ந்தால் உலகத்திற்கு நன்மைதான் விளையும் என்பது நிஶ்சயம் இல்லை . பண்டைய க்ரேக்க நாடு வலிமையுள்ளதாக மாறியது . உலக நாடுகளின் மீது க்ரேக்க ஸேனையின் தாக்குதல்களும் யுத்தங்களும் விளைந்தன . வலிமையான அமெரிகா உலக நாடுகளின் மீது ஆதிக்யமும் அங்குள்ள வளத்தின் ஸுரண்டலும் விளைவித்தது . ஜெர்மனி வலிமையான தேஶம் ஆனது . உலகத்தையே உலுக்கிய யுத்தம் விளைந்தது . அரேபியா பொருளாதார வலிமையைப் பெற்றது . பயங்கரவாதத்தை, உலகெங்கும் வன்முறையின் கோர தாண்டவத்தை விளைவித்தது . அதனால்தான் ஸ்ரீ கிருஷ்ணன் பாரதத்தை யோகமாதிஷ்ட - உத்திஷ்ட என்கிறார் . "பாரதமே ! எழுந்திடு ! வலிமை பெற்றிடு ! யோகத்தை உறுதியாகப் பற்றியவாறு வலிமை வளர்த்திடு !" என்கிறார் . யோகம் அற்ற வலிமை ராக்ஷஸனாக வளர்ந்திடும் . இத்தகைய தேஶம் உலகத்தில் நாஶமும் மனுஷ்யக் கூட்டத்திற்கு வலியும் வேதனையும் விளைவித்திடும் . இந்த ஸந்தர்பத்தில் தொன்று தொட்டு நம் ஹிந்து தேஶத்தில் ராஜாவாக பட்டாபிஷேகம் செய்யப் படும் போது பின்பற்றப்படும் ஒரு வழக்கம் நினைவிற்கு வருகிறது . ராஜாவாகப் போகிறவன் "ந தண்டோஸ்மி" என்பான் . (நான் தண்டனைக்கு அப்பாற்பட்டவன் என்று அர்தம் .) அருகில் நிற்கும் ராஜகுரு ஒரு தர்பைப்புல்லால் அவனது தோளில் அடித்து, "தர்மம் தண்டோஸி" என்பார் . (நீ தர்மத்தின் தண்டத்திற்கு கட்டுப்பட்டவனே .)
யோகம் என்பது ஸமத்வம் . ஶரீரமும் வலிமை அடையணும் . உள்ளமும் பண்படணும் . வெளிப்படையான வளர்ச்சியும் வேண்டும் . நுட்பமான ஸ்தரமும் வேண்டும் . அரஸியல் அதிகாரம், ஆயுத ஶக்தி, பொருளாதார வலிமை ஆகியவை தர்மத்தின் கரங்களை உறுதியாகப் பற்றிய வண்ணம் வளர வேண்டும் . இவ்வாறு இருந்ததால்தான் நாம் அறிந்த பத்தாயிர வர்ஷ வரலாற்றில் வலிமையான பாரதம் ஒரு முறை கூட அன்ய தேஶங்களின் மீது ஸேனைத் தாக்குதல்கள் நடத்தியதில்லை . அன்ய தேஶங்களின் இயற்கை வளத்தினை ஸுரண்ட முயற்சித்ததில்லை . வலிமையான பாரதம் உலக தேஶங்களுக்கு வழிகாட்டும் களங்கரை விளக்கமாகவே இருந்தது . விஶ்வ குருவாகவே விளங்கியது .
Comments
Post a Comment