ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 44
யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி .. (அத்யாயம் 5 - ஶ்லோகம் 3)
Yo Na Dweshti Na Kaankshati ... (Chapter 5 - Shloka 3)
அர்தம் : எவன் ஒருவன் வெறுப்பதும் இல்லை ... விரும்புவதும் இல்லையோ ...
இது ஸந்யாஸீக்கு ஸ்ரீ க்ருஷ்ணன் அளித்திடும் விளக்கம் . எதிர்ப்பார்ப்பு மனுஷ்யனிடம் இருப்பது ஸஹஜம். எனவே எதிர்ப்பார்ப்பு எதுவும் இல்லாதவன், விருப்பங்கள் அற்று இருப்பவன் ஸந்யாஸீ . இதுதான் ஸந்யாஸீயைப் பற்றிய நம் கருத்து . நம் வீடுகளில் விருப்பங்களை வெளிப்படுத்தாதவன் இருந்தால் வீட்டில் உள்ளோர், "அவனுக்கு ஒன்றும் வேண்டாம் அப்பா . அவன் ஒரு ஸந்யாஸீ", என்று பேசுவதை நாம் கேட்பதுண்டு . விருப்பங்கள் இல்லாதவனை, மிகக்குறைவான தேவைகளுடன் வாழ்பவனை நம்மால் காண முடியும் . ஸ்ரீ க்ருஷ்ணனின் கருத்தில் விருப்பங்கள் அற்று இருந்தால் போதாது . வெறுப்பும் இருந்திடக் கூடாது . உருவம் இருக்க வேண்டும் ஆனால், நிழல் இருந்திடக் கூடாது என்று கூறுவதைப் போன்றது இந்த விளக்கம் .
விருப்பம், வெறுப்பு இவை ரெண்டும் கை கோர்த்து, இணைந்து இருப்பவை . விருப்பம் இருந்திட்டால் வெறுப்பு நிஶ்சயம் இருந்திடும் . இது வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு, வேறு ஏதோ ஒன்று வேண்டாம் என்ற வெறுப்பின் அடையாளமே . ப்ரதிகூலமானது நிகழக் கூடாது என்ற எதிர்ப்பார்ப்புடன் அநுகூலமானது நிகழ வேண்டும் என்ற விருப்பமும் இருந்திடும் . ஒன்று வெளிப்படையாக இருந்திடும் . மற்றொன்று மறைந்து . ஒன்று நமக்குப் புலப்படும் . மற்றொன்று புலப்படாமல் இருந்திடும் . ஆனால், ரெண்டும் இணைந்தே இருந்திடும் என்பது நிஶ்சயம் . Force - Counter force போல . இவ்விரண்டும் பிரிக்கப் பட முடியாதவை . ரெண்டும் இல்லாமல் போவதே ஸாத்யம் . கடினமானது . ஆனால், இயலக்கூடியது .
Comments
Post a Comment