ॐ
கீதையில் ஸில சொற்றொடர்கள் - 46
इन्द्रियाणीन्द्रियार्थेषु वर्तन्त .. (अध्याय ५ - श्लोक ९)
இந்த்ரியாணீந்த்ரியார்தேஷு வர்தந்த ... (அத்யாயம் 5 - ஶ்லோகம் 9)
Indhriyaaneendhriyaartheshu Vartanta ... (Chapter 5 - Shlokam 9)
அர்தம் : இந்த்ரியங்கள் இந்த்ரியங்களுக்காக .. செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன .....
நம் ஶரீரத்தில் பல்வேறு இந்த்ரியங்கள் தத்தம் கார்யத்தைச் செய்கின்றன . ஶரீரத்தின் ஒட்டு மொத்த இயக்கம் என்ற ஹேதுவில் இந்த்ரியங்கள் செயல்படுகின்றன. கண் பார்க்கிறது. காது கேட்கிறது . மூக்கு நுகர்கிறது. கை தூக்குகிறது. கால் நடக்கிறது. நாக்கு ஸுவைக்கிறது . ஹ்ருதயம் துடிக்கிறது. நுரை ஈரல் விரிந்து ஸுருங்குகிறது . குடல் ஜீர்ணிக்கிறது . பெருங்குடல் மலத்தை வெளியே தள்ளுகிறது . தொண்டை பேஸுகிறது . நகம் வளர்கிறது . மயிர் விழுகிறது . ஸிறுநீரகம் ரக்தத்தை ஶுத்தம் செய்கிறது . ரக்தம் ஓடுகிறது . மூளை சிந்திக்கிறது . புத்தி நிர்ணயம் செய்கிறது. மனஸ் அனுபவிக்கிறது . கண் இமை சிமிட்டுகிறது . ஶரீரத்தின் இத்தகைய பல உறுப்புக்கள் தத்தம் கார்யத்தைச் செய்கின்றன . செயல் படுவது இந்த்ரியங்களே .
ஆனால் மனுஷ்யன் அறியாமை வஶமாகியோ அல்லது அஹங்கார வஶமாகியோ அல்லது பழக்க தோஷத்தாலோ.. "நான் செய்கிறேன்", என்று கருதுகிறான் . "நான் பார்க்கிறேன்" என்கிறான் . "நான் கேட்கிறேன் " என்கிறான் . "நான் ஸுவைக்கிறேன்" என்கிறான் . "நான் சிந்திக்கிறேன்", "நான் தூக்குகிறேன்", "நான் நடக்கிறேன்", "நான் ஓடுகிறேன்", "நான் பேஸுகிறேன்", "நான் பாடுகிறேன்", என்றெல்லாம் கருதுகிறான் . கீதையில் வேறு ஒரு ஸந்தர்பத்தில் ஸ்ரீ க்ருஷ்ணன், "நானே செய்பவன் என்று கருதுபவன் அஹங்காரம் கொண்ட மூடன் " என்கிறான் . இவ்வாறு கருதுபவன் மூடனே . இவனுடைய மூடத்தனத்தில் இவனால் அதே ஶரீரத்தில் நடக்கும் ஸூக்ஷ்மமான வேறு பல கார்யங்களைப் பார்க்க முடிவதில்லை, புரிந்து கொள்ள முடிவதில்லை என்பதால் "நான் செய்கிறேன்" என்று சொல்வதில்லை . "அது நடக்கிறது" என்கிறான் . "உணவு ஜீர்ணம் ஆகிறது" என்கிறான் . "வியர்வை கொட்டுகிறது" என்கிறான் . "ஹ்ருதயம் துடிக்கிறது", "நகம் வளர்கிறது", "கிட்னீ வேலை செய்கிறது", "ரக்தம் ஓடுகிறது", "மயிர் விழுகிறது", "மலம் வெளியேறுகிறது", என்றெல்லாம் சொல்கிறான் . இக்கார்யங்களை "நான் செய்வதாகக்" கருதுவதில்லை . ஸ்தூலமான கார்யங்களை இவனால் உணர முடிவதால் அவற்றை "நான் செய்கிறேன்" என்கிறான் .
எனக்கு அறிமுகமான ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை, "தொப்பைக்குப் பஸிக்கிறது" என்று சொல்லும் . அக்குழந்தை வெளிப்படுத்துவது இயற்கையான ஞானம். அக்குழந்தையால் தொப்பையில் எழும் பஸியை உணர முடிகிறது. பஸித்திடும் தொப்பைக்குள் உணவு இட வேண்டும் என்பதை அறிந்திருக்கிறது . நாமும் வயிற்றைத் தட்டியபடி சொல்கிறோம் . ஆனால் "எனக்குப் பஸிக்கிறது" என்கிறோம் . தொப்பைக்குப் பஸிக்கிறது . கை, வாய், நாக்கு, பல், தொண்டைக்குழி, எல்லாம் தொப்பைக்காகத் தத்தம் கார்யத்தைச் செய்கின்றன . மனஸ் வருந்துகிறது . கண் கண்ணீர் விடுகிறது . மனஸிற்காக கண் தன் கார்யத்தைச் செய்கிறது என்பதுதான் உண்மை . இந்த்ரியங்கள் இந்த்ரியங்களுக்காக செயல் படுகின்றன .
இதே போல், "நான் பள்ளியில் பாடம் கற்றுத் தருகிறேன்", "நான் இந்த கம்பெனியில் வேலை செய்குறேன்" "இந்த தொழிற்கூடத்தை நான் நடத்துகிறேன்" என்கிறான் . இவ்வாறு கருதுவதும் அறியாமையே . தான் அறிந்த, தன்னால் புரிந்து கொள்ள முடிந்த கார்யங்களை மாத்ரம் "நான் செய்"வதாக நம்புகிறான் . இவனால் புரிந்து கொள்ள முடியாத, இவன் அறிந்திடாத, ஏதோ ஒரு தொலைதூர இடத்தில் நிகழ்ந்திடும் ஒரு நிகழ்வினால் இவன் செய்வதாகக் கருதும் கார்யம் நின்று விடும் போது , "அது முடிந்து விட்டது ", என்கிறான் . துபாயில் ஒரு தொழிற்சாலை. "நான் நடத்துகிறேன்" என்று சொல்கிறான் . அமெரிக்காவில் எழும் ஒரு அஸாதாரண சூழ்நிலை காரணமாக இவனுக்கு நஷ்டம் ஏற்பட்டு, தொழிற்சாலை மூடப்படுகிறது. "நஷ்டம் ஏற்பட்டு விட்டது, தொழிற்சாலை நின்று விட்டது" என்கிறான் . வோல்க்ஸ் வேகன் என்ற மிகப்பெரிய கார் கம்பெனியில் பாரதப் பொறுப்பாளன் ஒருவன் . "நான் Country Operation Head என்கிறான் . அமெரிக்காவில் வோல்க்ஸ் வேகன் கம்பெனியில் ஒரு மாபெரும் ஊழல் நடவடிக்கை கண்டுபிடிக்கப் பட்ட பின்னர், இவனுக்கு ரெண்டு மூன்று வருஷங்கள் ஸம்பளம் கிடைக்கவில்லை. பைத்தியம் பிடித்து, நோய் வாய்ப்பட்டு இறந்து போனான் . "நான் செய்வதாக" நம்பிடும் ஒரு கார்யம் தொலைதூரத்தில் நிகழ்ந்திடும் ஒரு நிகழ்வினால் நின்று போகிறது. நான் செய்வதை எவ்வாறு வேறு எவனோ ஒருவனால், வேறு ஏதோ கண்காணாத ஶக்தியால் நிறுத்த முடியும் ?
நான் செய்கிறேன் என்று நினைப்பது அறியாமை . அது நடக்கிறது. இந்த்ரியங்கள் தம் கார்யத்தைச் செய்கின்றன . இந்த்ரியங்கள் செய்வதை நான் செய்வதாகக் கருதுவது, மெஷின் செய்திடும் வேலையை நான் செய்வதாகக் கருதுவது போல அறியாமையே .
இந்த உண்மையை உணர்ந்து விட்டால் ஶரீர பாவனை மறைந்து விடும் . தேஹ உணர்வு நீங்கி விடும் .
Comments
Post a Comment