ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 47
கீதையில் சில சொற்றொடர்கள் - 47
पद्म पत्रमिवान्भसा ... (अध्याय ५ - श्लोक १० )
பத்ம பத்ரமிவாம்பஸா ... (அத்யாயம் 5 - ஶ்லோகம் 10)
Padma Patramivaambhasaa ... (Chapter 5 - Shlokam 10)
அர்தம் : நீரில் தாமரை இலையைப் போல ...
ஹிந்து தர்மத்தை விளக்கும் புஸ்தகங்களில் மிக அழகான உவமைகள் பலவற்றில் இது ஒன்று .. பத்ம பத்ரம் என்பது தாமரை இலை . தாமரை இலை தண்ணீரில் இருக்கும் . தண்ணீரால் சூழப் பட்டிருக்கும் . ஆனால் , தண்ணீரில் இருந்து விலகி நிற்கும் . தண்ணீர் தன்னை நனைக்க விடாது . தண்ணீர் தன்னை ஓட்ட விடாது . நாம் உலகத்தில் வாழ்கிறோம் . உலகம் , ஜனங்கள் , விஷயங்கள் , ஆஶைகள் , வெறுப்புக்கள் , ஸுக து:கங்கள் , ஸாதனைகள் , பாராட்டுக்கள் மற்றும் பிற வரவுகள் , அமைப்புக்கள் மற்றும் அவற்றில் பதவிகள் , என்று பலப்பல விஷயங்களால் சூழப் பட்டிருக்கிறோம் . இவற்றால் சூழப்படுவதை நம்மால் தவிர்க்க முடியுமா ?? தனிமை , ஏகாந்தம் இயலாதது . இங்கிருந்து ஆரண்யத்திற்கு ஓடி விடலாம் என்ற எண்ணம் வரலாம் . ஆனால், வனங்களில் அல்லது மலை ஶிகரங்களில் , நதிக்கரைகளில் வாழ்தல் அனைவருக்கும் ஸாத்யம் இல்லை . இன்றைய காலத்தில் மலை அடிவாரங்களில் (வெள்ளியங்கிரி, ஆனைக்கட்டி போன்ற இடங்கள் ), நகரத்தை விட்டு தூர வனங்களில் (எட்டிமடை போன்ற இடங்களில்) , மலை உச்சிகளில் (ஹ்ருஷீகேஷ் போன்ற இடங்களில்) அமைதியான, ஏகாந்தமான வாழ்க்கை வாழ்ந்திடலாம் வாருங்கள் என்று அறைகூவலுடன் ஆன்மீகக் கம்பெனிகள் ஆஷ்ரமங்கள் கட்டி வைத்திருக்கின்றன . பரபரப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும் புள்ளிகளுக்காகவே இத்தகைய இடங்கள் உருவாக்கப் பட்டுள்ளன . ஆனால் , இவ்விடங்களில் ஒரு நாள் தங்கலும் பல்லாயிரங்களில் , லக்ஷங்களில் விலை போகிறது . வர்ஷத்தில் ஒரு ஸில நாட்கள் அங்கு தங்கி, நிம்மதியை, அமைதியை .. தாற்காலிகமானது, வாங்க வேண்டும் என்றால் உலகத்தில் இருந்து , ஓடி ஓடி பணம் ஸம்பாதிப்பது அவஶ்யமாகிறது . எனவே , உலகத்தில் இருந்து ஓடுவது இயலாத ஒன்று .
மாற்று என்ன ? பத்ம பத்ரமிவாம்பஸா அதாவது நீரில் பத்ம பத்ரம் போல .. நீரில் தாமரை இலையைப் போல வாழ்தலே .. நீரால் சூழப்பட்டும் நீருடன் ஒட்டாமல் , வாழ்தல் . உதாஹரணமாக ... பதவிகள் ... அரஸியல், தொழில் துறை, ஸமுதாய , ஸமயப் பதவிகளை எடுத்துக் கொள்வோம் .. பதவிகள் நிரந்தரம் அல்லாதவை . அவற்றில் அமர்த்தப்படும் மநுஷ்யனும் நிரந்தரம் இல்லாதவன் . எனில் , பதவியில் அமர்ந்திருப்பவன் தாமரை இலையைப் போல இருப்பதே சிறப்பு . எவ்வாறு ?? பரத முனி வழிகாட்டுகிறார் . பரதன் அயோத்யா ராஜ்யத்தை பதினான்கு வருஷங்கள் ஆண்டான் . அவனே அயோத்யாவின் மஹாராஜா . ஆனால், அவன் மஹாராஜா இல்லை . அவன் ஸிஹ்மாஸனத்தில் அமர்ந்திருந்தான் . ஆனால் அமரவில்லை . அவன் அயோத்யாவை ஆண்டது ஸ்ரீ ராமனின் ஸார்பாக .. ஸிஹ்மாஸனம் ஸ்ரீ ராமனுடையது என்பது பரதனின் தெளிவான சிந்தனை .. "நான் ராஜா என்ற பொறுப்பை ஏற்றிருந்தாலும் நான் ராஜா இல்லை " என்பது அவனது த்ருடமான கருத்து . இதனால் அவனது ஆட்சித் திறன் குறையவில்லை .. மாறாக மிகச் சிறப்பாக இருந்தது . தான் செய்திடும் அல்பமான தவறும் ஸ்ரீ ராமனது பெயருக்கு பங்கம் விளைவித்திடும் என்று நினைத்ததால் .. ஸ்ரீ சத்ரபதி ஶிவாஜி மஹாராஜாவின் வாழ்க்கையில் அத்புதமான ஸம்பவம் ஒன்று உண்டு . அவரது குரு ஸமர்த ஸ்ரீ ராமதாஸ் ஒரு முறை அவரிடம் லவலேஶ ஆணவத்தைக் கண்டார் . "நானே ஆள்கிறேன் . நானே ஜனங்கள் அனைவருக்கும் உணவிற்குக் காரணம் ." என்ற சிந்தனையின் ஆதாரத்தில் இந்த ஆணவம் தலை தூக்கியது . ஸ்ரீ சத்ரபதி ஶிவாஜி மஹாராஜா குரு தக்ஷிணை அளிக்க விரும்பி , விரும்புவதைக் கேளுங்கள் என்றார் . ஸமர்த ஸ்ரீ ராமாதாஸ் ராஜ்யத்தைக் கேட்டார் . ஸ்ரீ சத்ரபதி ஶிவாஜி உடனே அர்க்யம் அளித்து ராஜ்யத்தை ஸ்ரீ குருவிற்கு வழங்கி விட்டு, நடக்காத தொடங்கினார் . "எங்கே செல்கிறாய் ?" என்று கேட்டார் ஸ்ரீ ராமதாஸ். "வனம் போகிறேன் . மீத வாழ்க்கையை வனத்தில் கழித்துக் கொள்கிறேன் ", என்றார் சத்ரபதி ஶிவாஜி . "இல்லை . என்னுடைய இந்த ராஜ்யத்தை ஆண்டிடு . இது என்னுடைய ராஜ்யம். உன்னுடையது இல்லை . என் ஸார்பாக நீ ஆள வேண்டும் ." என்றார் ஸமர்த ஸ்ரீ ராமதாஸ் .
அதில் இருந்திடு . ஆனால் அதை உன்னுள் புகை விடாதே . அதால் சூழப்பட்டு இரு . ஆனால் , அது உன்னை மூழ்கடிக்க அநுமதித்திடாதே . இது மிகக் கஷ்டமானது . பயிற்சி , கடுமையான பயிற்சி ... மற்றும் நித்ய ஸ்வ ப்ரக்ஞை . இவை இரண்டும் பத்ம பத்ர அதாவது தாமரை இலையைப் போன்ற வாழ்க்கையை ஸாத்யமாக்கிடும் .
Comments
Post a Comment