ॐ
கீதையின் சில சொற்றொடர்கள் - 49
पण्डिताः सम दर्शिनः (अध्याय ५ - श्लोक १८)
பண்டிதாஹ ஸம தர்ஶினஹ (அத்யாயம் 5 - ஶ்லோகம் 18)
Panditaah Sama Darshinah (Chapter 5 - Shlokam 18)
அர்தம் : ஸமத்வம் நிறைந்த த்ருஷ்டி கொண்டவனே பண்டிதன் .
இந்தச் சொற்றொடரில் மூன்று வார்தைகள் உள்ளன . ஸம , தர்ஶினஹ மற்றும் பண்டிதாஹ ..
தர்ஶினஹ ... பார்ப்பவன் .. பார்ப்பது என்பது கண்ணின் செயல் அல்ல . விஞானம் கூறுவதும் அதே .. கண் ஸ்தூலமான காக்ஷீயை மாத்ரமே காண்கிறது . ஒரே காக்ஷீ ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது .. இந்த வேறுபாட்டிற்கு அவரவரின் பார்வைதான் காரணம் . அவரவரின் குணங்கள் , ஸ்வபாவம் , வாழ்க்கைப் பின்னணி ஆகிய பல விஷயங்களை ஸார்ந்து அவரது பார்வை அமைகிறது .
ஸம ... என்பது ஸமத்வம் .. உலகத்துப் புறச் சூழ்நிலை , வெளிப்படையான வேறுபாடுகள் , நம்மை பாதித்து விடாமல் , இருப்பது ஸம நிலை அல்லது ஸமத்வம் .. குறிப்பாக , வெளிப்படையாகத் தெரிந்திடும் வேறுபாடுகள் நம் பார்வையை , கண்ணோட்டத்தை பாதித்து விடாமல் இருப்பது ஸமத்வமான பார்வை .. ஸமப் பார்வை கொண்டவன் அல்லது ஸமதர்ஶினஹ . இத்தகைய ஸமப்பார்வை கொண்டவனே பண்டிதன் என்கிறது இந்த சொற்றொடர் ..
பண்டிதன் .. பண்டிதன் என்ற வார்தை படித்தவனைக் குறிப்பதாகவே நாம் கருதுகிறோம் . ஒரு வித்யையில் நிபுணத்வம் பெற்றவனைப் பண்டிதன் என்கிறோம் . தமிழ்ப் பண்டிதன் , ஹிந்தி பண்டிதன் , ஸம்ஸ்க்ருத பண்டிதன் , வேத பண்டிதன் .. இவரெல்லாம் அந்தந்த விஷயத்தைக் கரைத்துக் குடித்தவர்கள் . ஆனால் , கீதையின் பார்வை அதாவது ஸ்ரீ க்ருஷ்ணனின் பார்வை அலாதியானது . தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வுகளில் கதி கலங்கிடாமல் இவை எல்லாம் வந்து போகக்கூடியவை , மாறக்கூடியவை , நிரந்தரமானவை அல்ல என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் ஸாம்யத்தில் த்ருடமாக இருப்பவனே பண்டிதன் என்கிறான் ஸ்ரீ க்ருஷ்ணன் . அதே போல , உலகத்தில் வெளிப்படையாகக் காணப்படும் வேறுபாடுகளில் மயங்கிடாமல் , வேறுபாடுகளின் பின்னணியில் இழைந்தோடும் "ஒன்றை" .. "ஒரே தத்வத்தினை" காண்பவன் பண்டிதன் என்கிறான் ஸ்ரீ க்ருஷ்ணன் .
வேறுபாடுகளைக் காண்பவன் பிளவு படுகிறான் . அடிப்படையான ஒன்றைக் காண்பவன் ஒருங்கிணைகிறான் . பிளந்த பார்வை கொண்டவன் பரபரப்பாகுகிறான் . ஸமப்பார்வை உள்ளவன் அமைதி அடைகிறான் . புறத்தைப் பார்ப்பவன் பலவற்றைக் காண்கிறான் . அகத்தினைப் பார்ப்பவன் ஒன்றைக் காண்கிறான் . தமிழில் பார்ப்பனன் என்றொரு வார்தை ப்ராஹ்மணனைக் குறித்திடும் . பார்ப்பவன் , ஸரியாகப் பார்ப்பவன் , ஸமநிலையுடன் பார்ப்பவன் என்றே அர்தம் .
Comments
Post a Comment