Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் -53


கீதையில் சில சொற்றொடர்கள் -53


सुहृदं सर्व भूतानाम्   |  (अध्याय ५  - श्लोका २९)
ஸுஹ்ருதம் ஸர்வ பூதானாம்  ...  (அத்யாயம் 5 - ஶ்லோகம் 29)
Suhrudam Sarva Bhootaanaam  ...  (Chapter 5 - Shloka 29)

அர்தம்  :  நல்ல ஹ்ருதயம்  ...  ஹ்ருதயத்தில் நல்ல பாவனை கொண்டவன் ..  அனைத்து ஜீவன்களைப் பற்றியும்  ...

ஹ்ருத் ....  ஹ்ருதயம்  .. ஸுஹ்ருத்  .... நல்ல ஹ்ருதயம் ... ஹ்ருதயம் லப் டப் என்று அடித்துக் கொண்டு , விரிந்து ரக்தத்தை வெளியே தள்ளி ஶரீரத்திற்குள் பாய்ச்சி , ஸுருங்கி ரக்தத்தை ஶரீரத்தில் இருந்து உள்ளிழுத்து , மநுஷ்யனின் கடைஸீ ஶ்வாஸம் வரை தொடர்ந்து கார்யத்தில் லயித்திருக்கும் ஒரு கருவிதான் .  தஸைகளாலும் ரக்தக்குழாய்களாலும் செய்யப்பட்ட ஒரு கருவிதான் .  நம் கை விரல் , கண் , குடல் ... போன்று ஶரீரத்தின் மற்ற பல உறுப்புக்களைப் போன்றதொரு உறுப்புதான் .  ஸந்தேஹம் இல்லை .  அதே ஸமயம் , உணர்ச்சிகளின் இருப்பிடம் என்றும் ரஹஸ்யங்களின் குஹை என்றும் கருதப் பட்டு வருகிறது .  ஸர்வ ஸாமாந்யனுக்குப் புரியும் வகையில் ஒரு விளக்கம்  இதற்கு  உண்டு .  நம் மனஸில் பயம் , குற்ற உணர்வு , கோபம் , லஜ்ஜை , காமம் போன்ற உணர்வுகள்  எழும் போது ஹ்ருதயத் துடிப்பது வேகமாவதை கவனித்திருப்போம் .  எனவே ஹ்ருதயம் உணர்ச்சிகளின் உறைவிடமாகக் கருதப் படுகிறது .  ஸுஹ்ருத அதாவது நல்ல ஹ்ருதயம் என்பது இந்த ஸந்தர்பத்தில் சொல்லப் பட்டுள்ளது .  நல்ல ஹ்ருதயம் கொண்டவன் .  ஹ்ருதயத்தை  ஸ்நேஹம் , கருணை , பொறுமை , க்ஷமா அதாவது மன்னிப்பு ,  போன்ற நல்ல உணர்வுகளால் நிரப்பியவன் .

இந்த சொற்றொடரில் ஸ்ரீ க்ருஷ்ணன் பரமாத்மனை வர்ணிக்கும் போது இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்துகிறான் .  பகவான் அனைத்து ஜீவராஶிகளைப் பற்றியும் நல்ல பாவனைக் கொண்டவர் என்ற அர்தத்தில் இந்தச் சொற்றொடர் வருகிறது ...  கீதையில் வேறொரு இடத்தில் பரமாத்மனை ஹ்ருத்ஸ்த என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .  ஜீவன்களின் ஹ்ருதயத்தில் நிலைத்திருப்பவர் .  ஹ்ருதயமே ஸ்ரீ பரமாத்மனின் வாஸஸ்தலம் .  பகவானின் நிலையான வாஸ ஸ்தலம் என்றாலும் பல ஜன்மங்களில் ஶேகரித்த  வாஸனைகளால் பிணைக்கப் பட்டிருக்கும் ஜீவனின் ஹ்ருதயம் ஸுஹ்ருதமாக இருப்பதில்லை .  ஸுஹ்ருதமாக இருந்தாலும் ஸர்வ பூதானாம் ..  அனைத்து ஜீவன்களைப் பற்றியும் ஸுஹ்ருதமாக இருப்பதில்லை ...  ஸம்ஸாரக் கவர்ச்சியில் மயங்கி , காமம் , க்ரோதம் , எனது - உனது என்ற உணர்ச்சிகளில் தோய்ந்திருக்கும் நம் ஹ்ருதயம் நூறு ஶத விஹித ஸுஹ்ருதமாக இருப்பதில்லை .

லோகத்தில் நமக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கை பரமாத்மனை நோக்கிய ப்ரயாணமாகவே  கருதப் படுகிறது ..  மெதுவாக ... மெதுவாக நம் ஹ்ருதயத்தை ஸுஹ்ருதமாக பரிணமிக்க வைப்பதே ,  மலர வைப்பதே  நம் பூலோக  வாழ்க்கையின் லக்ஷ்யம் .  பாவனைகளை நல்ல பாவனைகளாக மாற்றுவதே ... கீழான பாவனைகளை  அழித்து நல்ல பாவனைகளால் நம் ஹ்ருதயத்தை நிரப்புவதே  ... நம் இஹ லோக வாழ்க்கையின் லக்ஷ்யம் .  இன்று ஓரிரு நபர்களைப் பற்றியோ , ஒரு குடும்பத்தைப் பற்றியோ . ஒரு ஸமூஹத்தைப் பற்றியோ , ஒரு ஊர் அல்லது  ப்ரதேஶம் அல்லது ஒரு தேஶம் பற்றியோ ஒரு மொழி  அல்லது மதம் பற்றியோ ஸுஹ்ருதமாக இருக்கும் நம் ஹ்ருதயத்தை மெது மெதுவாக  விஸ்தரித்து   ஸர்வ பூத --  ஸுஹ்ருதமாக மாற்றுவதே  நம் லக்ஷ்யம் ..  இதுவே  நாம் பகவானுக்கு எவ்வளவு ஸமீபம்  வந்தடைந்திருக்கிறோம் என்பதற்கான அளவுகோல் ..... 

Comments