ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 54
अनाश्रितः कर्म फलम । (अध्याय ६ - श्लोक १)
அனாஶ்ரிதஹ கர்ம ஃபலம் ... (அத்யாயம் 6 - ஶ்லோகம் 1)
Anaashritah Karma Phalam ... (Chapter 6 - Shlokam 1)
அர்தம் : கர்ம ஃபலனை ஸார்ந்திராமல் ...
அனாஶ்ரிதஹ கர்ம ஃபலம் ... கர்ம ஃபலனை ஸார்ந்திராமல் ... இந்த ஶப்தாவலீயைப் பார்த்த உடன் இதற்கு பிற்பகுதி உண்டு என்பது புலனாகிறது . ஆம் . உண்டு . கார்யம் கர்ம கரோதி யஹ ... ஸ ஸந்ந்யாஸீ ... எவர் கர்மங்களைச் செய்கிறாரோ .. அவர் ஸந்ந்யாஸீ .
கீதையில் ஸ்ரீ க்ருஷ்ணனால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டக் கருத்து இது . பகவத் கீதையின் ஸாரம் இதுவே என்று சொன்னாலும் மிகையாகாது .
இது கடினமானது என்பதில் ஸந்தேஹம் இல்லை . ஆனால் , இது தான் ஸத்யம் . இது நடைமுறைக்கு இயலாதது என்பதால் கடினம் இல்லை . நாம் பலஹீனமானவர்கள் என்பதால் கடினம் .. நம்மை இதற்கேற்ற வகையில் தயார் செய்து கொள்ள மூன்று நிலைகள் உண்டு . (1) ... கர்மஃபலனைப் பற்றிய சிந்தனை கார்யத்தை பாதிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் . இது புத்தி ரீதியான முயற்சி . (2) ... திட்டமிட்டு , முறையானப் பயிற்சிகள் செய்ய வேண்டும் . (3) ... இது ஶ்ரத்தையாகப் பரிணமித்து நம்முள் ஆழமாகப் பதிந்திட வேண்டும் . இந்த ஸத்யம் நம் அந்தராத்மாவால் உணரப்பட வேண்டும் . முதல் ரெண்டு நிலைகளால் மூன்றாவது நிலை தன்னால் விளைந்திடும் .
கர்ம ஃபலனைப் பற்றிய சிந்தனை கர்மத்தின் மீது எத்தகை பாதிப்பு ஏற்படுத்திடும் ? கார்யம் மெதுவாகி விடும் . கார்யத்திறன் குறைந்து விடும் . கார்யம் கெட்டு விடும் அல்லது நின்று விடும் . ஸில உதாஹரணங்கள் மூலம் புரிந்து கொள்ள முயல்வோம் .
குழந்தையை சீராட்டிப் பாராட்டி வளர்த்தல் பெற்றோரின் கடமை ஆகும் . குழந்தை நல்லபடி வளர்தல் , நன்கு படித்து உயர்ந்த பதவியில் அமர்ந்து கை நிறைய ஸம்பாதித்தல் , தாய் தந்தையரைக் காப்பாற்றுதல் ... இவை அனைத்தும் இக்கடமையின் கர்ம ஃபலன்கள் . கடமையைச் செய்து கொண்டிருக்கும் போது , ஃபலனைப் பற்றிய சிந்தனை வந்தால் என்ன ஆகும் .? தாய் தொட்டிலை ஆட்டியபடி தாலாட்டு பாடிக் கொண்டிருக்கும் போது , ஃபலனின் சிந்தனை அவளுள் முளைத்தால் , தொட்டிலை ஆட்டும் கரங்கள் நின்று விடும் . தாலாட்டுப் பாடிடும் வாய் மூடி மௌனமாகி விடும் . குழந்தை பால் அருந்திக் கொண்டிருக்கும் போது இத்தகைச் சிந்தனை வந்தால் , குழந்தையின் வாய் முலையை விட்டு அகன்றதையும் அறியாமல் இருப்பாள் . பால் கிடைக்காத குழந்தை , கத்தி அழுது அவளது நினைவை மீட்க வேண்டி வரும் .
மாணவன் கற்கிறான் . படித்தும் எழுதியும் பயிற்சிகள் செய்கிறான் . மன:பாடம் செய்கிறான் . புரிந்து கொள்ள முயல்கிறான் . இவை அனைத்தும் வித்யா என்ற அவனது கடமையில் கர்மங்கள் . பரீக்ஷையை நன்கு எழுதுதல் , அதிக மதிப்பெண்கள் எடுத்தல் , நல்ல கல்லூரியில் சேர்ந்து உயர்ப் படிப்பைப் பெறுதல் , கை நிறைய ஸம்பளத்துடன் நல்ல வேலையில் சேருதல் ... இவை அனைத்தும் மாணவனின் கர்ம - ஃபலன்கள் . அவன் கர்ம ஃபலனை ஸார்ந்திருந்து கர்மங்களை செய்தால் என்ன ஆகும் ? கர்மங்களைச் செய்திடும் அந்த க்ஷணத்தில் கர்ம ஃபலனைப் பற்றி சிந்தித்தால் , கவலை கொண்டால் என்ன ஆகும் ? (இதைச் சிந்தித்தல் என்று கூறுவது ஸரியா ? சிந்தித்தலில் ஸ்வய நினைவு உயிருடன் இருந்திடும் . இதைக் கனவில் மூழ்குதல் எனலாம் . ஸ்வய நினைவு அற்ற நிலை அது .) கர்ம ஃபலனைப் பற்றிய சிந்தனை அல்லது கனவு அவனது கண்களைப் புஸ்தகத்தில் இருந்து அகற்றி விடும் . அப்யாஸம் என்ற அவனது கர்மம் நிறுத்தப்படும் .
ப்ரியமானவர் கடும் நோயால் பாதிக்கப் பட்டுள்ளார் . அவரது ஸேவை ஸுஶ்ருஷையில் ஈடுபட்டிருக்கிறார் இவர் . இது இவருக்குக் கர்மம் . நோய் குணமாகி நோயுற்றவர் ஸஹஜ வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் . அல்லது மரிக்க வேண்டும் . இவையே ஸுஶ்ருஷை செய்பவருக்குக் கர்ம ஃபலன்கள் . எது கிடைத்தாலும் அவருக்கு நிம்மதியே . அவரால் தன் ஸஹஜ வாழ்க்கைக்குத் திரும்பி ஸ்வந்தக் கனவுகளைத் துரத்தி ஓட முடியும் . ஆனால் , அவர் இத்தகைய கர்ம ஃபலன்களை ஸார்ந்திருந்தால் உள்ளத்தில் சிடுசிடுப்புத் தோன்றி பதட்ட நிலையை அடைவார் . நோயாளிக்கு ஸேவை ஸுஶ்ருஷை என்ற அவரது கார்யம் பாதிக்கும் .
இந்த திஶையில் நாம் செய்யக்கூடிய பயிற்சி என்ன ? கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எந்த ஃபலனும் தென்படாத ஏதேனும் ஒரு கார்யம் நம் தினஸரி வாழ்க்கையின் அங்கம் ஆக வேண்டும் . துலஸீ செடிக்குத் தண்ணீர் ஊற்றுதல் ; அறிமுகம் இல்லாத அந்யனுக்கு தத்க்ஷணம் தேவைப்படும் உதவியைச் செய்து விட்டு மறந்து விடுதல் , பொது இடத்தில் பலருடன் இணைந்து மரம் வளர்ப்பு , கோவில் ஶுத்தம் செய்தல் ; குளம் தூர் வருதல் போன்ற கார்யத்தில் ஈடுபடுதல் ; தன்னுடைய அடையாளத்தை அழித்து ஒரு பெரும் அமைப்பில் இணைந்து விடுதல் ; பஜனை , ஸத்ஸங்கம் போன்றவற்றில் சேர்ந்து பங்கெடுத்தல் ; ப்ராஹ்மணனுக்கு விதிக்கப்பட்ட த்ரிகால ஸந்த்யா வந்தனம் இத்திஶையில் மிகச்சிறந்த ப்ரயோகம் . கோஸேவை , ஸூர்யனுக்கு அர்க்யம் விடுதல் போன்றவையும் நல்ல முயற்சி . முயற்சி எதுவானாலும் , அது திட்டமிட்ட , சீரான முயற்சியாக இருக்க வேண்டும் .. இடையறாது செய்யப் பட வேண்டும் . நெடுந்தூரம் வரை எவ்வகை ஃபலனும் கிடைப்பதற்கான வாய்ப்பு தெரியக் கூடாது .
இவ்வாறு செய்யப்படும் இடையறாத முயற்சியின் விளைவாக தன்னுள் ஆழத்தில் , உறுதியாக ஶ்ரத்தைப் பதிந்திடும் . அதன் பின் ? ஆனந்தமே . நாளையைப் பற்றிக் கவலைப் படாமல் , ஃபலன்களை ஸார்ந்திராமல் , தத் க்ஷணத்தில் வாழ்ந்திடும் ஆனந்தம் . கர்மம் செய்வதில் மாத்ரம் லயித்திடும் ஆனந்தம் .. அதாவது .. அனாஶ்ரிதஹ கர்ம ஃபலம் .... கார்யங்களைச் செய்வதன் ஆனந்தம் ..கிடைத்திடும் இந்த ஆனந்தம் கர்ம ஃபலன் இல்லை . இது நம் ஸத்ய ஸ்வரூபம் .
Comments
Post a Comment