ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 55
उद्धरेदात्मनात्मानं नात्मानं अवसादयेत् । (अध्याय ६ - श्लोक ५)
உத்தரேதாத்மனாத்மானம் நாத்மானம் அவஸாதயேத் ... (அத்யாயம் 6 - ஶ்லோகம் 5)
Udhdharedaatmanaatmaanam Naatmaanam Avasaadayet ... (Chapter 6 - Shloka 5)
அர்தம் : உன்னை நீயே உயர்த்திக் கொள் . உன்னை நீ வீழ்த்திக் கொள்ளாதே .
உயர்த்திக் கொள்ளுதல் , ஒரு படி முன்னேறுதல் , இதுவே நாம் நம் வாழ்க்கையில் தொடர்ந்து செய்ய வேண்டியது . பொதுவாக , நாம் நம்மை மற்றவருடன் ஒப்பிட்டுக் கொள்கிறோம் . விளைவாக , அவருடன் போட்டியில் இறங்குகிறோம் . போட்டி பஹிரங்கமானதாக இருக்கலாம் . சாலையில் மற்ற வாஹனங்களுடன் ஒப்பிட்டு , வேகப் போட்டியில் இறங்குவதைப் போல ... போட்டி ஸூக்ஷ்மமானதாக இருக்கலாம் . மனஸினுள் நடக்கக் கூடியதாக இருக்கலாம் . மற்றவருடைய தோலின் நிறம் , ஸமூஹ அந்தஸ்து , செல்வம் , வீடு , இளமையான தோற்றம் போன்று எதுவும் ஒப்பிடுதலுக்கான விஷயம் ஆகலாம் . அதை நாமும் அடைந்து விட வேண்டும் என்ற ஆவேஶத்துடன் போட்டியில் நம் மனஸ் இறங்கி விடும் . இத்தகைய போட்டியால் தூண்டப்பட்ட நம் செயல்கள் நாட்கணக்கில் , மாஸக்கணக்கில் ஏன் , வர்ஷக்கணக்கிலும் தொடர்ந்திடும் வாய்ப்பு உண்டு . நமக்குக் கிடைத்துள்ள காலம் என்ற பொக்கிஷத்தை , நம் வாழ்க்கையை அல்பமான போட்டிகளில் தொலைத்து விடுகிறோம் . நம் வாழ்க்கை ஸ்வய ஸாதனைகள் மையமானதாக அமையாமல் , ஒப்பிடுதல் - பொறாமை - போட்டி - பரபரப்பு - தோல்வி - இயலாமை - து:கம் என்ற ஸுழற்சியில் ஸிக்கித் தொலைந்து விடுகிறது .
ஒப்பிடுதல் இருந்தால் அது தன்னுடன் (ஸ்வயத்துடன்) மாத்ரம் இருக்க வேண்டும் . தன்னுடைய தற்போதைய நிலையுடன் ஒப்பிட வேண்டும் . போட்டி அவஶ்யம் என்றால் , அது ஸ்வயத்துடன் மாத்ரமே இருக்க வேண்டும் . ஸ்வய வளர்ச்சிக்கு , ஒரு அடி முன்னேற்றத்திற்கு இவை ப்ரேரணையாகி விட வேண்டும் . "சென்ற முறை செய்ததை விட , இம்முறை சிறப்பாகச் செய்திட வேண்டும்" . "இந்த க்ஷணத்தில் என் நிலையை விட நான் ஒரு அடி முன்னேற வேண்டும்" . இதில் புறத் தூண்டுதல் இல்லாததால் , தொடர்ச்சியான வளர்ச்சிக்கு வாய்ப்பு உண்டு . வாழ்நாள் முழுவதும் ஸ்வய வளர்ச்சிக்கான முயற்சிகள் தொடர்ந்திடும் வாய்ப்பு உண்டு .
அந்யருடன் ஒப்பிடுதலும் போட்டியும் நடந்திடும் போது , மனஸில் பொறாமை , படபடப்பு , பயம் , தாழ்வு மனப்பான்மை , தோல்வியின் வருத்தம் , போன்ற கீழான உணர்வுகள் உதித்திடும் . ஆனால் , ஒப்பிடுதல் ஸ்வயத்துடன் இருந்தால் இத்தகைக் கீழான உணர்வுகளுக்கு இடம் இல்லை .
ஸ்தூல - சூக்ஷ்ம , லௌகீக - ஆன்மீக .. என்று அனைத்து விஷயங்களிலும் நம் ஸ்வய வளர்ச்சிக்கு ஸ்வயத்தால் மாத்ரமே முயற்சி செய்ய முடியும் . மற்றவர்களின் பங்கு ஏதும் கிடையாது . செல்வம் , செல்வாக்கு , கல்வி , பதவி , ஆற்றல் , குணம் , ஸங்கீதம் போன்ற கலைகளில் நிபுணத்வம் , பேச்சுத்திறன் போன்ற திறன்கள் , போன்ற எல்லா விஷயங்களுக்கும் இது பொருந்தும் . ஸ்ரீ க்ருஷ்ணனும் இதையே சொல்கிறார் . "உன்னை ... நீயே வளர்த்துக் கொள்" என்கிறார் . ஒவ்வொரு சிறு வளர்ச்சியும் , ஒவ்வொரு படி முன்னேற்றமும் உன் வாழ்க்கையில் நீ படைத்திடும் ஸாதனைகள் .
ஸ்ரீ கிருஷ்ணன் , 'உன்னை நீ வீழ்த்திக் கொள்ளாதே' என்று சொல்லும்போது , 'அந்யருடன் ஒப்பிடுதல் மற்றும் போட்டி - பொறாமையில் இறங்காதே . பொன்னான காலத்தை வெற்று முயற்சிகளில் விரயம் ஆக்காதே . கீழான உணர்வுகளுக்கு உன் மனஸில் இடம் கொடுக்காதே .' என்றெல்லாம் சொல்கிறார் .
'வளர்த்துக் கொள்ள முயற்சிகள் செய்வதும் , வீழ்ச்சிப் பாதையில் இறங்குவதும் , உன்னால் மாத்ரமே செய்ய முடியும் . உன் நிலைக்கு நீ மாத்ரமே பொறுப்பு . அந்யருக்கு எந்தப் பங்கும் இல்லை' , என்றும் சொல்கிறார் .
Comments
Post a Comment