ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 56
ஆத்மைவாத்மனா ஜிதஹ் பந்துஹு ... (அத்யாயம் 6 - ஶ்லோகம் 6)
Aatmaivaatmanaa jitah Bandhuhu ... (Chapter 6 - Shloka 6)
அர்தம் : தன்னைத் தானே ஜயித்தவனே தனக்கு நண்பன் ...
பந்துஹு ஆத்மைவாத்மனா ஜிதஹ் ... பந்து என்றால் மித்ரன் அல்லது நண்பன் . ஜிதஹ் என்றால் ஜயித்தவன் , வஶப்படுத்தியவன் ... ஆத்மைவாத்மனா என்றால் தன்னைத்தானே ...
தன்னைத்தானே ஜயித்தவன் என்றால் ஶரீரத்தை ஜயித்தவன் ? ஶரீரத்தை வஶபடுத்தியவன் ? நம்மிடம் உள்ள ஶரீரம் நாம் விரும்பும் வகையில் நடந்து கொள்கிறதா ? நாம் நிர்ணயத்திடும் கார்யங்களைச் செய்திடுகிறதா ? ஒரு இடத்தில் இருந்திடு என்றால் இருக்கிறதா ? அவஶ்யம் அற்ற அஸைவுகள் வேண்டாம் என்றால் கேட்கிறதா ? கனத்த ஶரீரமாக இருப்பத்தால் மாடிப்படி ஏற முடியவில்லை . கீழே உட்கார முடியவில்லை . பெரும் தொப்பை இருப்பதால் கீழே குனிய முடியவில்லை . மூச்சு முட்டுவதால் கார்யங்களைத் தொடர்ந்து செய்ய முடியவில்லை . கை தன் இஷ்டத்திற்கு அரிப்பு இல்லாமலே சொறிந்து கொள்கிறது . மூக்கையோ பல்லையோ நோண்டுகிறது . தலை மயிறுடன் விளையாடுகிறது . பாதமும் தொடையும் தம் இஷ்டத்திற்கு ஆடுகின்றன . டீ வீயில் ஆன்மீக ப்ரஸங்கம் செய்திடும் ஒருவரது மிக வேகமாக ஆடிடும் பாதம் நம் கவனத்தை அவரது ப்ரஸங்கத்தில் இருந்து திஶை மாற்றிடும் .
ஶரீரம் ஆத்யம் கலு தர்ம ஸாதனம் .. (शरीरं आद्यं खलु धर्म साधनम् ) ஶரீரம் ஒரு கருவி . தர்ம மய வாழ்க்கையை நாம் வாழ்ந்திட , தர்மத்தைக் காப்பதற்கு நம் ஶரீரம் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு கருவி ஆகும் . கருவி நம் வஶத்தில் இருக்க வேண்டும் . நாம் விரும்பும் கார்யங்களை , நாம் கட்டளையாக அதற்குப் பணித்திடும் கார்யங்களை முழுத் திறனுடன் செய்திடும் கருவி ஆக வேண்டும் .
பந்துஹு ஆத்மைவாத்மனா ஜிதஹ் . தன்னைத்தானே ஜயித்தவன் , வஶப்படுத்தியவன் . தன்னைத்தானே என்றால் இந்த்ரியங்களை ஜயித்தவன் ? இந்த்ரியங்களை வஶபடுத்தியவன் ? கண்கள் நாம் விரும்பிய விஷயத்தை மாத்ரம் பார்க்கின்றனவா ? காதுகள் நாம் புரிந்து கொள்ள விரும்பும் விஷயத்தை மாத்ரம் கேட்கின்றனவா ? நாக்கு நமக்கு ஹிதம் தரும் ருசிகளை மாத்ரம் நாடுகிறதா ? இந்த்ரியங்கள் நாம் விரும்பாத விஷயங்களை , நமக்கு நலன் பயக்காத விஷயங்களை புறக்கணிக்கின்றனவா ?
ஆறாவது இந்த்ரியமான மனஸ் இங்கங்கு அலைந்திடாமல் இருக்கிறதா ? நாம் விரும்பும் விஷயத்தில் குவிகிறதா ? பயம் , காமம் , க்ரோதம் போன்ற உணர்வுகளில் திளைத்து , அலைக்கழிக்கப்பட்டு நம்மை கை வஶக் கார்யத்தில் இருந்து , திஶை திருப்புகிறதா ?
சிந்தனை நம் வஶப்பட்டுள்ளதா ? உபயோகமான சிந்தனையில் இருந்து தடம் மாறி , கனவு காணுதல் , கவலைக் கொள்ளுதல் , வருத்தம் அடைதல் போன்றவற்றில் மூழ்கி விடுகிறதா ?
இவை நமக்கு வஶப்பட்டால் , அவைற்றின் மீது நாம் பூர்ண வெற்றி பெற்றால் , நாம் ஆத்மைவாத்மனா ஜிதஹ ... இத்தகையவனே தனக்கு நண்பன் .
Comments
Post a Comment