ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 61
दुःख संयोग वियोगम योग .... (अध्याय ६ - श्लोक २३)
Du:kha Samyog Viyogam Yoga ... (Chapter 6 - Shloka 23)
து:க ஸம்யோக வியோகம் யோக ... (அத்யாயம் 6 - ஶ்லோகம் 23)
அர்தம் : து:கத்தின் பிணைப்பில் இருந்து விடுபடுவதே யோகம் ...
அத்புத யோஜனை . து:கத்தின் பிணைப்பில் இருந்து விடுபடுதல் . து:கம் நம்மைக் கட்டிப் போடுகிறதா ? இல்லை . நாம் தான் அதைக் கட்டிப் பிடித்து உள்ளோம் . விட மறுக்கிறோம் . மேலும் து:கங்கள் வர வர , அவற்றை எல்லாம் ஶேகரித்து , பெரிய மூட்டைகளாக்கி , அனைத்தையும் கட்டிப் பிடித்து வைத்துள்ளோம் , அந்த தெருவோர பைத்யம் மூட்டை மூட்டையாக குப்பையைச் சேர்த்து வைத்திருப்பதைப் போல . அவனுக்கும் நமக்கும் பெரிய வித்யாஸம் இல்லை . அவனிடம் இருப்பது கண்களுக்குத் தெரிந்திடும் மூட்டை . நம்மிடம் இருப்பது பிறர் கண்களுக்குத் தெரியாத மூட்டை . அந்த மூட்டையை விட இந்த மூட்டை அதிக பாரமானது .
பிறர் கண்களுக்குத் தெரியாத மூட்டை என்பதும் தவறு . நாம் தான் , எவர் கிடைத்தாலும் அவரிடம் புலம்பிக் கொண்டிருக்கிறோமே ? "சின்ன வயஸில் நான் ரொம்ப கஷ்டப் பட்டேன் தெரியுமா ?" "அம்மா என்னைக் கொடுமைப் படுத்தினாள்" ; "மும்பை வந்த புதுஸில் , ஒரு வேளை சாப்பாட்டிற்கு எவ்வளவு அலைந்தேன் தெரியுமா ?" "அப்பப்பா ! எனக்கு வந்த மாதிரி கஷ்டங்கள் வேறு எவருக்கும் வந்திருக்காது" : "எனக்கு ரெண்டு லக்ஷம் ரூபாய் நஷ்டம் ஆகி விட்டது" ; "ஒரு முறை ரயிலில் வடக்கே சென்றேன் . என்ன கஷ்டம் தெரியுமா ? ஸரியான கூட்டம் , காற்றில்லை , ஒரு பிடி சோறு தின்ன முடியவில்லை" ; "நேற்று ராத்ரீ முழுவதும் மின்சாரம் இல்லை . ரொம்பக் கஷ்டப் பட்டு விட்டேன் ஸார்" ; இன்னம் எத்தனை எத்தனையோ புலம்பல்கள் நாம் அடிக்கடி கேட்பதே . அநுபவிக்கும் முன் "இவ்வாறெல்லாம் நடந்து விடுமோ" ? என்ற பயம் அல்லது சந்தேஹத்தினால் து:கம் . அநுபவித்திடும் போதும் து:கம் . அநுபவித்த பின்னர் பல வர்ஷங்கள் வரை அதை மீண்டும் மீண்டும் நினைத்து து:கம் . து:கத்தை எதிர்பார்த்து , து:கத்தில் திளைத்து , து:கத்தை ஸுமந்து .. வாழ்க்கையே து:க மயம் .
"து:கம் இல்லாது வாழ்வது ஸாத்யமா ?" ஒரு ஆன்மீகவாதி கேட்டார் . "து:கம் என்று கருதாமல் , து:கம் என்ற முத்ரை குத்தாமல் இருந்தால் ஸாத்யமே" , என்றேன் . தான் அநுபவித்த து:கங்களே பிற்காலத்தில் தன் குற்ற நடவடிக்கைகளுக்குக் காரணம் என்று கூறும் பலரைக் காண்கிறோம் . கர்ணன் ஒரு சிறந்த உதாஹரணம் . அதர்மத்தின் பக்ஷத்தில் ஏனடா நின்றாய் ? அதர்மத்திற்குத் தூண்டுகோலாய் ஏனடா நடந்து கொண்டாய் ? என்று கேட்டால் , "பெற்ற அம்மா என்னைத் தூக்கி எறிந்து விட்டாள் . பரஶுராமன் ஶாபம் கொடுத்து விட்டார் . பஶுவைக் கொன்று விட்டேன் என்று வ்யவஸாயியின் ஶாபம் வேறு . வாழ்க்கையின் இறுதியில் அன்னை குந்தி என்னிடம் வந்து உண்மைகளைக் கூறினாள் , ஆனால் , தன் மற்ற மகன்களின் உயிர்க் காத்திடவே வந்தாள் . எல்லாம் கோணல் . எல்லா வகையிலும் நான் வஞ்ஜிக்கப் பட்டேன்" என்பான் .
யாருக்குத்தான் து:கம் இல்லை ? யாருக்குத்தான் கஷ்டம் இல்லை ? ஏதோ நமக்கு மாத்ரமே வருவதாக நினைத்துக் கொள்கிறோம் . நேற்று நடந்தது . நேற்றே முடிந்தது . இது வேறு நாள் . வேறு நேரம் . நேற்றைக் கட்டிப் பிடித்து வைத்து இருப்பது ஏன் ? விட்டு விடு . நேற்றின் பிணைப்பை அறுத்து விடு. து:கத்தை என்று ஏன் கூறுகிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ? ஸுகமான அநுபவங்களை நாம் ஸுமப்பதில்லை என்பதால் .
ஸமத்வம் யோகம் என்றார் . கௌஶல்யத்துடன் (திறனுடன்) கர்மங்களில் ஈடுபடுவது யோகம் என்றார் . இங்கு ஸுலபமான ஒரு வழியைச் சொல்கிறார் . து:க ஸம்யோக வியோகம் யோக ... து:கத்தின் பிணைப்பில் இருந்து விடுபடுவதே யோகம் என்கிறார் .
Comments
Post a Comment