ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 62
शनैः शनैः उपरमेत् ... (अध्याय ६ - श्लोक २५)
ஶனைஹி ஶனைஹி உபரமேத் ... (அத்யாயம் 6 - ஶ்லோகம் 25)
Shanaih Shanaih Uparameth ... (Chapter 6 - Shloka 25)
அர்தம் : மெதுவாக , மெதுவாக அமைதி அடைதல் ...
மெதுவாக , மெதுவாக , அமைதி அடைதல் ... மெதுவாக , மெதுவாக உலகத்தில் இருந்து , உலக வாழ்க்கையில் இருந்து , உலகத்தைப் பற்றிய ஆர்வத்தில் இருந்து விடுபட்டு உள்ளடங்குதல் ... இதில் முக்யமான வார்தை ஶனைஹி ஶனைஹி .. அதை உச்சரிக்கும் பொழுதே அதன் பாவத்தை உணரலாம் . பொறுமை , மிக அதிக பொறுமை அவஶ்யம் .
பொறுமை இன்மைக்கு , பொறாமைக்கு என்ன காரணம் ? ஶீக்ரமாக இதை முடித்து விட வேண்டும் என்பது பொறாமை . இதை முடித்து விட்டால் வேறு ஒரு விஷயத்தில் ஈடுபடலாம் என்ற எண்ணம் , இதை முடித்து விட்டால் ஓய்வெடுக்கலாம் என்ற எண்ணம் , இதை முடிப்பதால் கிடைக்கக் கூடிய ஃபலன் மீது ஆர்வம் ஆகியன பொறாமைக்குக் காரணம் . வலுக்கட்டாயமாக ஓரு விஷயத்தில் ஈடுபட வைத்தால் பொறுமை இருந்திடாது . இந்த்ரியங்களின் ஆதிக்யம் அதிகம் ஆனாலும் மனஸின் பொறுமை வற்றிப் போகும் .
பரீக்ஷை முடித்த பிறகு ஸினிமா போகலாம் என்று சொல்லப்பட்ட மாணவன் பரீக்ஷையை ஶீக்ரமாக எழுதி முடித்து விட என்று எண்ணுவான் . முழுத் திறனுடன் எழுத முடியாது . களைத்து இருக்கும் டாக்டரிடம் இந்த ஒரு சிகித்ஸையை முடித்து விட்டு ஒய்வு எடுக்கலாம் என்ற எண்ணம் வந்தால் , அவரது மனஸு சிகித்ஸையில் முழுவதுமாக ஈடுபடாது . ஹோமம் நடத்திக் கொண்டிருக்கும் புரோஹிதர் வேறொரு கார்யத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் , ஹோமத்தை முறையாக முடித்திடும் பொறுமையை இழந்திடுவார் . மற்ற இடத்தில் இருந்து மீண்டும் மீண்டும் மொபைல் அழைப்பு வந்தாலோ பொய் பேசுவார் . குறுக்கு வழியில் ஹோமத்தை முடிக்க நினைப்பார் . கையில் இருக்கும் இந்தக் காரியத்தை விட அதிக மஹத்வமான கார்யம் உலகத்தில் வேறொன்றும் இல்லை என்ற பாவனையுடன் செய்தால் , பொறுமை , உச்ச கோடி பொறுமை மனஸில் நிலைத்திடும் .
இன்று பொறுமை இன்மை மிகக் கொடூரமான நோயாகப் பரவி வருகிறது . சிறு குழந்தைகளையும் இந்நோய் தாக்கி உள்ளது . பயிற்சிக்குப் பொறுமை அவஶ்யம் . ஆழமான திறமை வளர்த்திட பொறுமை அவஶ்யம் . ஸ ரி க ம .. என்ற ஸரளி வரிஸை கற்றுக் கொள்ள பொறுமை இல்லை என்றால் ஸங்கீத வித்வான் ஆக முடியாது . தா தை தக தை என்று பாதங்களுக்கு அடிப்படைப் பயிற்சி கொடுக்க பொறுமை இல்லை என்றால் , பரத நாட்யத்தின் நிபுணன் ஆக முடியாது . அனா , ஆவன்னா என்று அக்ஷர ரூபங்களையும் அவற்றின் ஸ்பஷ்ட உச்சரிப்பையும் பொறுமையாகக் கற்பதே உயர்ப் படிப்புகளுக்கு அடித்தளம் .
ஸமுதாய காரியங்களில் உள்ளவர்கள் , ஸமுதாயத்தில் மாற்றம் வேண்டும் என்ற ஆர்வத்துடன் செயலில் இறங்கியவர்கள் , தேஶம் முன்னேற வேண்டும் என்ற ஆவேஶத்தில் முயல்பவர்கள் , மதம் மாற்றம் தடுக்கப் பட வேண்டும் என்று போராடுபவர்கள் , பஶு பாதுகாக்கப் பட வேண்டும் என்று விரும்புபவர்கள் , பொறுமை இழந்து , உணர்ச்சி வஶப் படுவதைக் காண்கிறோம் . வேகமாக செயல் பட வேண்டும் . ஆனால் , பொறுமை இழக்கக் கூடாது . பொறுமை என்பது செயலின்மை இல்லை . தானே சரியாகும் என்ற பொய்யான ஆன்மிகம் இல்லை . செயல் , வேகமான செயல் , ஆனால் பொறுமை . அஸாத்யப் பொறுமை .
பொறுமை ஶ்ரத்தையின் வெளிப்பாடு . பொறுமை இருந்தால் வார்தைகளில் உத்வேகம் இருக்காது . வெற்று கோஷங்கள் இருக்காது . வாழ்க்கையின் இறுதி மூச்சு வரை செயல்பாடு இருந்திடும் . தமிழகத்தில் ஸ்ரீ ராம கோபாலன் உத்தமமான ஒரு உதாஹரணம் . உணர்ச்சி வஶமாகப் பேசுபவர்கள் , தொண்டைக் கிழிய கோஷம் போடுபவர்கள் குறுகிய காலத்தில் களத்தை விட்டு ஓடி விடுவர் அல்லது திஶை மாறி பண வஸூல் , அதிகாரக் குவிப்பு , காமக் களியாட்டம் போன்ற ஈனச் செயல்களில் ஈடுபடத் தொடங்குவர் .
உலக விஷயங்களுக்குப் பொறுமை . ஆன்மீக ஸாதனைகளிலும் பொறுமை . அவஸரப் பட்டால் முடியுமா ? நான் இத்தனை லக்ஷம் நாம ஜபம் செய்து விட்டேன் , இத்தனை ஆலயங்களுக்கு நடந்திருக்கிறேன் , இத்தனை வ்ரதங்கள் இருந்திருக்கிறேன் , இத்தனை ஹோமங்கள் நடத்தி இருக்கிறேன் . ஆனால் , எனக்கு ஒன்றும் நிகழவில்லை . பகவத் ப்ரஸாதம் எதுவும் கிடைக்கவில்லை . பல லக்ஷ யோனிகளின் வழியே (கர்பங்களின் வழியே) ப்ரயாணித்த பின் , இறுதியில் நமக்கு மனுஷ்ய ஜன்மம் கிடைத்திருக்கிறது . இத்தனை லக்ஷ வர்ஷங்கள் பொறுமைக் காத்தவனுக்கு இன்னம் சில வர்ஷங்கள் , இன்னம் சில ஜன்மங்கள் காத்திட முடியாதா ? ஆன்மீக ஸாதனைகளை பொறுமையாக , அஸாத்யப் பொறுமையுடன் பயில வேண்டும் . அடுத்த க்ஷணத்தைப் பற்றிய சிந்தனையும் இல்லாமல் பயில வேண்டும் .
Comments
Post a Comment