ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 63
सर्व भूतस्थमात्मानं सर्व भूतानि चात्मनि ... (अध्याय ६ - श्लोक २९)
ஸர்வ பூதஸ்தமாத்மானம் ஸர்வ பூதானி சாத்மானி ... (அத்யாயம் 6 - ஶ்லோகம் 29)
Sarva Bhootasthamaatmaanam Sarva Bhootaani Chaatmani ... (Chapter 6 - Shloka 29)
அர்தம் : ஸர்வ உயிர்களிலும் தன்னைக் காணுதல் ... தன்னில் அனைத்து உயிர்களையும் காணுதல் ...
மிகவும் எளிய வார்தைகளில் சொன்னால் ... எல்லா உயிர்களிடத்தும் தன்னைக் காணுதல் ... ஸர்வ ப்ராணிகளின் உணர்வுகளை , வேதனைகளைப் புரிந்து கொள்ளுதல் ... அதற்கேற்ற படி நடந்து கொள்ளல் ...
தன்னில் அனைத்து உயிர்களையும் காணுதல் ... தனக்கு ஏற்படும் கஷ்டங்களை , வேதனைகளை வைத்து மற்ற உயிர்களின் உணர்வுகளை உணருதல் ... கஷ்டங்கள் , வேதனைகளை அறிதல் ...
இத்தகைய விரிதல் ஏற்படத் தடையாக இருப்பது ஸ்வய-நலம் . ஒரு சிலர் அப்பட்டமான ஸ்வய - நலம் உள்ளவராக , தன் தாய் தந்தை , மனைவி குழந்தை , தன் வீட்டில் வளர்கிற பஶு , காளை , நாய் , மரங்கள் போன்ற சில உயிர்கள் வரையும் கூட தன்னை விரித்துக் கொள்ள இயலாதவராக , ராக்ஷஸத் தன்மை கொண்டவராக இருப்பதைக் காண்கிறோம் .
இந்த வட்டம் வரை தன்னை விரித்துக் கொண்ட ஸாமான்யர் பலர் நம்மைச் சுற்றி இருப்பதையும் காண்கிறோம் . தன் தாய் தந்தையரின் ஶரீர உபாதைகளில் கண்ணீர் வாடிப்பவராய் , தன் குழந்தையின் ஸுகத்திற்காக கடும் உழைப்பை ஏற்பவராய் , தன் வீட்டு பஶுவின் ப்ரஸவ வேதனையைக் கண்டு உருகுபவராய் . பலர் உள்ளனர் . அவர்கள் தனக்கு ஸம்பந்தம் இல்லாத வயோதிகரின் ஶரீர உபாதையைக் கண்டு கண்ணீர் வடிக்கிறாரா ? யாரோ ஒரு குழந்தையின் ஸுகத்திற்காக உழைக்க ஸித்தமாக இருக்கிறாரா ? தெருவில் திரியும் பஶுவின் வேதனையைக் கண்டு உருகுகிறாரா ? இல்லை . அவரிடம் விரிதல் உண்டு . ஓர் அளவு விரிதலே . 'என்னுடைய ' என்ற அவரது வட்டம் சற்றே விரிந்தது . 'என்னுடைய ' என்ற அதே உணர்வு , அந்த வட்டத்தைத் தாண்டி அவரது விரிதலைத் தடுத்தும் விடுகிறது .
இங்கு ஸ்ரீ க்ருஷ்ணன் கூறுவது அதையும் தாண்டிய விரிதல் . கடினம் ஆனால் இயலாதது இல்லை . அரிது . ஆனால் , ஆனந்தமானது . எனவே தான் இத்தகைய விரிதலைக் கண்டவர் மதிக்கப் படுகிறார் . போற்றப் படுகிறார் . பூஜிக்கப் படுகிறார் . பரமனுடன் இணைப்பு என்ற திஶையில் எடுத்து வைக்கப் படும் ஒரு காலடி இது . அதற்கான ரஹஸ்யம் இந்த ஶப்தாவலியில் புதைந்திருக்கிறது .
த (थ) என்ற எழுத்து இணைந்தால் உறுதியாக நிலைத்திருக்கும் என்று அர்தம் . பூதஸ்த (भूतस्थ) என்றால் உயிர்களில் நிலைத்திருக்கும் அதை என்று அர்தம் . அனைத்து உயிர்களிலும் நிலைத்து நிற்கும் அந்த பரமாத்மனைக் காண்பவன் என்பதே உண்மையான தாத்பர்யம் .
Comments
Post a Comment