ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 64
चँचलम् हि मनः कृष्ण प्रमाथि बलवद् दृढम ... (अध्याय ६ - श्लोक ३४)
சஞ்சலம் ஹி மனஹ க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம் ... (அத்யாயம் 6 - ஶ்லோகம் 34)
Chanchalam Hi Manah Krishna Pramaathi Balavad Drudham ... (Chapter 6 - Shloka 34)
அர்தம் : ஹே க்ருஷ்ண ! மனஸ் பிடிவாதம் நிறைந்ததாக , சஞ்சலம் கொண்டதாக இருக்கிறதே ...
இது அர்ஜுனனின் ப்ரஶ்னை மாத்ரம் இல்லை . நம் அனைவரின் ப்ரஶ்னையும் இது . மனஸ் சஞ்சலமானது . நிலையில்லாதது . பிடிவாதம் கொண்டது . சிந்தனை செய்தால் ஒரு விஷயத்தில் தொடர்ந்து இருந்திடாது . கை வஶம் உள்ள கார்யத்தில் தொடர்ந்து ஈடுபட விடாது . ஒரு ப்ரஸங்கம் கேட்டுக் கொண்டிருந்தாலோ , ஒரு நாடகம் பார்த்துக் கொண்டிருந்தாலோ , ஒரு கார்யம் செய்து கொண்டிருந்தாலோ , நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தாலோ , அதில் தொடர்ந்து ஈடுபடாமல் , அலுத்துக் கொண்டு வேறு பக்கம் தாவி விடும் . தனியாக இருக்கும் போது கை , தொடையை ஆட்டிக் கொண்டும் , நகத்தைக் கடித்துக் கொண்டும் , சொறிந்து கொண்டும் , தலை மயிரைக் கோதிக் கொண்டும் , மீசையை முறுக்கிக் கொண்டும் , மீசை நுனியை வாயில் சப்பிக் கொண்டும் இன்னம் இவை போன்ற ஏதேனும் ஒரு அர்தம் அற்ற பழக்கம் கொண்ட பலரை நாம் காண்கிறோம் . இப்பழக்கங்கள் அனைத்தும் சஞ்சல மனஸின் வெளிப்பாடுகள் . ''நாய்க்கு செய்ய கார்யம் எதுவும் இல்லை . ஆனால் நிற்க நேரமும் இல்லை'' என்று சொல்லப் படுவது மனஸிற்குப் பொருந்தும் .
சஞ்சல மனஸ் நம்மை நிர்ணயம் எடுக்க விடாது . நாற்சந்தில் ஒரு பாதையை , துணிக்கடையில் ஒரு துணியை , ஹோடலில் ஒரு தின்பண்டத்தை , டைல்ஸ் கடையில் ஒரு டிஸைனை , ஏன் ! காலி பஸ்ஸில் ஒரு ஸீட்டைத் தேர்ந்தெடுக்க முடியாமல் தவித்திடும் பலரும் மனஸின் சஞ்சலத் தன்மைக்கு பலி ஆனவர்கள் . மாற்றுக்கள் (சாய்ஸ்) அதிகமாக அதிகமாக மனஸின் சஞ்சலத் தன்மையும் அதிகமாகிடும் . "இது ஒன்றுதான் . வேறு வழி இல்லை' எனும் போது வாலைச் சுருட்டிக் கொண்டு ஏற்றிடும் .
மனஸின் மற்றொரு தன்மை அதன் பிடிவாதம் . வேண்டாம் என்று மறுக்க மறுக்க , அதையே மீண்டும் மீண்டும் நாடும் . மனஸின் பழக்கத்தை மாற்றுவது மிகக் கடினம் .
கிருமிகள் இல்லாது வரும் பல்வேறு நோய்களுக்கு சஞ்சல மனஸே காரணம் என்றும் மனஸ் அமைதியாக வேண்டும் என்றும் தன் இஷ்டத்திற்கு அலையாமல் , நம் நிர்ணயத்திற்கு ஏற்றபடி நடந்து கொள்ள வேண்டும் என்றும் நவீன கால மருத்துவம் சொல்லத் தொடங்கி இருக்கிறது . உலகத்தில் மிக மிகக் கஷ்டமான கார்யம் ஒன்று உண்டென்றால் அது மனஸை ஸ்திரப் படுத்துவதுதான் . அதனால் தான் இன்று வீதிக்கு வீதி யோக வகுப்புகளும் , த்யான , ப்ராணாயாம வகுப்புகளும் புற்றீஸல் போல் கிளம்பி இருக்கின்றன . வனப்பகுதிகளில் , மலை அடிவாரத்திலும் நிலத்தை வளைத்துப் போட்டு , எல்லா வஸதிகளுடன் கூடிய கூடங்கள் (Cottages) கட்டிப் போட்டு , ஆயிரங்களில் , லக்ஷங்களில் கட்டணம் வஸூலித்து வகுப்புகள் நடத்திடும் கார்பொரேட் ஸ்வாமியார்களின் எண்ணிக்கையும் அதிகமாகி விட்டது . இவ்வகுப்புகளில் வருவோரின் பாக்கெட்டுகளில் இருந்து பணம் தான் கை மாறிப் போகிறதே அன்றி , அவர்களது மனஸின் சஞ்சலத்தன்மை இம்மி அளவும் குறையாமல் இருக்கிறது .
ஸ்ரீ க்ருஷ்ணனின் உபாயம் என்ன ? அர்ஜுனனின் கேள்விக்கு அவன் பதில் வழங்கும் பதில் என்ன ? அடுத்த ஶ்லோகத்தில் ....
Comments
Post a Comment