ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 72
धर्माविरुद्धो भूतेषु कामोs स्मि भरतर्षभ । (अध्याय ७ - श्लोक ११)
தர்மாவிருத்ததோ பூதேஷு காமோ(அ)ஸ்மி பரதர்ஷப ... (அத்யாயம் 7 - ஶ்லோகம் 11)
DharmaAviruddho Booteshu Kaamo(a)smi Bharatarshabha ... (Chapter 7 - Shloka 11)
அர்தம் : பரதர்ஷபனே ! தர்மத்திற்கு முரண் இல்லாத காமம் நானே ...
பூதேஷு காம அஸ்மி ... தர்ம அவிருத்தஹ் ... உயிர்களில் காமமும் நானே ... தர்மத்திற்கு விரோதம் இல்லாத (காமம்) ...
காமத்தில் என்ன தர்மம் இருக்கிறது ?
காமம் படைப்பில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது . காமம் என்ற வார்தை விருப்பம் என்ற பொதுவான அர்தம் கொண்டது . ஆண் - பெண் மத்தியில் ஏற்படும் ஸம்போகத்திற்குக் காரணமான உணர்வும் காமம் தான் . தர்மத்திற்கு உட்பட்ட காமம் எது ? பஸி வந்தால் உணவு வேண்டும் என்ற விருப்பம் இயற்கையானது . தாஹம் ஏற்பட்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்பது இயற்கையான விருப்பம் . களைப்பு வந்தால் உறக்கம் வேண்டும் என்று விரும்புவதும் இயற்கையானதே . ஶரீரத்தில் ரோகம் வந்தால் அது ஸரி ஆக வேண்டும் என்று விரும்புவதும் இயற்கையான காமமே . இவ்வகை விருப்பங்களை பூர்தி செய்து கொள்ள செய்யப்படும் முயற்சிகளும் இயற்கையானவை . இயற்கையானது எதுவும் தர்மத்திற்கு உட்பட்டதே . தர்மத்திற்கு விருத்தமானது இல்லை .
ஆண் - பெண் ஸம்போகத்தைத் தூண்டும் காமமும் இயற்கையானது . படைப்பு என்ற மாயா ஸ்ருஷ்டி தொடர்ந்திட , காமம் அவஶ்யமானது . காமம் மறைந்து விட்டால் படைப்பு நின்று விடும் . எனவே , ஸந்ததி உத்பத்தி என்ற ஹேதுவிற்காக மலர்ந்திடும் காமம் தர்மத்திற்கு உட்பட்டது . மாறான காமம் தர்மத்திற்கு முரணானது .
ஸ்ரீ பரமாத்மனை அறிந்திட , ஸாதகர்கள் செய்திடும் ஸாதனைகளின் விளைவாக காமம் அழிக்கப் பட வேண்டும் என்றும் ஆதலால் குடும்ப வாழ்க்கையை விட்டு வெளியேறி ஆன்மீக ஸாதனைகளில் ஈடுபட வேண்டும் என்றும் பரவலான கருத்து நிலவுகிறது . ஸ்ரீ க்ருஷ்ணனும் பதினாறாவது அத்யாயத்தில் காமத்தை நரகத்திற்கான நுழைவாஸல் என்கிறார் . பதினெட்டாம் அத்யாயத்தில் , "காமத்துடன் கூடிய கர்மங்களைத் துறப்பவன் ஸந்யாஸீ" என்கிறார் . காமம் இயற்கையானது என்றால் கர்மங்கள் அனைத்தும் காமத்துடன் கூடியவை என்றும் எனவே , கர்மங்கள் துறக்கப்பட முடியாதவை என்றும் நாம் நினைக்கலாம் . ஸ்ரீ க்ருஷ்ணனும் இக்கருத்தினை ஏற்றுக் கொள்கிறான் . கர்மத்தை அல்ல , கர்மத்தினால் விளையக் கூடிய ஃபலன் மீதுள்ள விருப்பத்தையும் கர்மம் மீது உள்ள பற்றையும் தவிர்க்கச் சொல்கிறான் . எனவே , குடும்ப வாழ்க்கை ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல . நம் ஆஶ்ரம அமைப்பில் ஆன்மீக ஸாதனைக்கான ஸந்யாஸ ஆஶ்ரமம் , க்ருஹஸ்தாஶ்ரமத்தில் இருந்த பின்னர் , வாழ்க்கையின் இறுதி பர்வத்தில் தான் சொல்லப் பட்டிருக்கிறது .
தர்மம் , அர்தம் (பொருள்) , காமம் மற்றும் மோக்ஷம் , இவை நான்கு வித புருஷார்தங்கள் . அர்தமும் காமமும் தர்மம் மற்றும் மோக்ஷம் என்ற ரெண்டு கரைகளுக்கு அடங்கி இருக்க வேண்டும் . எனவே , (தர்மத்திற்கு உட்பட்ட) காமம் தவிர்க்கப் பட வேண்டியது இல்லை . வெறுக்கப் பட வேண்டியது இல்லை . (அதே போல , அர்தமும்) தர்மத்திற்கு முரண்படாத காமம் ஸ்ரீ பரமனின் ஸ்வரூபமே . "தர்ம அவிருத்த காமஹ அஸ்மி" என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .
Comments
Post a Comment