Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 73


கீதையில் சில சொற்றொடர்கள் - 73


आर्तो जिज्ञासु अर्थार्थी ज्ञानी  ।  (अध्याय ७ - श्लोक १६)
ஆர்தோ ஜிக்ஞாஸு அர்தார்தி க்ஞானி  ...  (அத்யாயம் 7 - ஶ்லோகம் 16)
Aartho Jigyaasu Arthaarthi Gyaani  ...  (Chapter 7 - Shloka 16)

அர்தம் :  அழுபவன் , ஆராய்பவன் , வேண்டுபவன் , க்ஞானி  ...

என்னை வழிபடும் பக்ர்கள் நான்கு விதம் .  நான்கு வகையினரும் நல்லவர்களே .  (ஸுக்ருதினஹ)  .  அவர்கள் முறையே 1.  ஆர்த ... அழுபவன் , குறைகளைச் சொல்லிப் புலம்புபவன் ...  2.  ஜிக்ஞாஸு ...  ஆராய்பவன் , கேள்வி கேட்பவன் ...  3.  அர்தார்தி ... வேண்டுபவன் , கோரிக்கைகள் வைப்பவன் ...  4.  க்ஞானி ...  தன் போக்கில் ஆனந்தமாக இருப்பவன் ...

நம் வீட்டிற்கு உறவினர் ஒருவர் வருகிறார் .  தன் ஊரில் இருந்து பற்பல பொருட்களும் , துணிமணிகளும் , இனிப்புகளும் வேறு தின்பண்டங்களும் எடுத்து வந்திருக்கிறார் .  வீட்டில் நான்கு மகன்கள் .  அதிதி கொண்டு வந்த பொருட்களையும் இனிப்புகளையும் பார்த்து ஒருவன் , அம்மாவிடம் சென்று அழுகிறான் .  "அந்த பொம்மை என்னிடம் இல்லை .  இந்த வகை ஆடை நான் அணிந்ததில்லை .  அந்த வகை இனிப்பு நான் சாப்பிட்டதில்லை ." என்றெல்லாம் புலம்புகிறான் ..  இவன் ஆர்த வகை .

மற்றொரு மகன் , வந்த விருந்தாளியை ஆர்வத்துடன் அணுகுகிறான் .  "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் ?"  "உங்கள் ஊர் எப்படி இருக்கும் ?"  "எப்படி வந்தீர்கள் ?"  "இத்தனையும் வாங்கி வருகிறீர்கள் !  வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் ?"  "நீங்கள் எங்களுக்கு எந்த வகையில் உறவு ?" .. போன்று பற்பலக் கேள்விகள் கேட்கிறான் .  அவனுக்குப் பொருட்களில் ஆர்வம் இல்லை .  ஆனால் , அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் .  (Curiosity) .  இவன் ஜிக்ஞாஸு வகை .

மற்றொரு மகன் அவரிடம் சென்று , "எனக்கு இந்த பொம்மையைக் கொடுப்பீர்களா ?"  "அடுத்த முறை வரும் போது எனக்கு இந்த வகை ஆடை வாங்கி வருவீர்களா ?" போன்ற கோரிக்கைகள் வைத்து அவருடன் பேசுகிறான் .  அவர் கொடுப்பதை வாங்கிக் கொள்கிறான் .  இவன் அர்தார்தி வகை .  (பொருளுக்காக வழிபடுபவன்) .

நான்காமவன் அவர் வந்தவுடன் அவரை நமஸ்கரிக்கிறான் .  மற்றவர்கள் அவரை வரவேற்று , குஶலம் விசாரித்துப் பேசும் போது , மர்யாதை நிமித்தம் கொஞ்ஜ நேரம் அங்கு இருந்து விட்டு , அங்கிருந்து அகன்று விடுகிறான் .  தான் ஈடுபட்டிருந்த புஸ்தகத்திலோ , விளையாட்டிலோ மீண்டும் நுழைந்து விடுகிறான் .  இவன் க்ஞானி வகை .

நம்மை நாமே அறிந்து கொள்ள இந்த ஶப்தாவலீ நமக்கு உதவுகிறது . நாம் பரமாத்மனை ஏன் வழிபடுகிறோம்  என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டும் .  நம் வழிபாட்டின் த்வனி எவ்வாறு இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் .  புலம்பல் வழிபாடா , கோரிக்கை வழிபாடா , ஆய்வு மேலோங்கிய வழிபாடா அல்லது அன்பு மேலோங்கிய வழிபாடா ?  குறைகளை முன் வைத்த புலம்பல் , வேண்டும் , வேண்டாம் என்ற பட்டியலை முன் வைத்த கோரிக்கைகள் , தர்கம் மற்றும் கேள்விகளை முன் வைத்த ஆய்வு , இவை மூன்றும் அல்லாமல் வழிபாடாக மாத்ரம் , நம் ஹ்ருதயத்தில் அவன் பால் உள்ள அன்பின் வெளிப்பாடாக அமைந்திடும் வழிபாடாக இருத்தல் சிறப்பு .  No Inquiries , No complaints and No demands .

Comments