ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 93
स सर्वेषु भूतेषु नश्यत्सु न विनश्यति । (अध्याय ८ - श्लोक २०)
ஸ ஸர்வேஷு பூதேஷு நஶ்யத்ஸு ந விநஶ்யதி ... (அத்யாயம் 8 - ஶ்லோகம் 20)
Sa Sarveshu Bhooteshu Nashyatsu Na Vinashyathi ... (Chapter 8 - Shloka 20)
அர்தம் : அனைத்து உயிர்களும் அழிந்து மறைந்த பின்னரும் எது இருக்கிறதோ , அதுவே அவன் ..
ருசி என்பது என்ன ? ஒரு பண்டத்தின் ருசியை எவ்வாறு அறிவது ? அதை வாயில் போட்டு , மென்று , முழுங்கிய பின்னர் , அதாவது , அந்த பண்டம் அழிந்து மறைந்த பின்னர் , நாக்கில் எது தங்குகிறதோ ... அது ருசி . அந்த பண்டத்தின் ஒவ்வொரு அணுவிலும் ருசி உள்ளது . ஆயின் , ருசியைத் தனியாகப் பிரித்து எடுக்க முடியாது . அது அருவம் ஆனது . அதை உணர மாத்ரமே முடியும் . அந்த பண்டம் இருக்கும் போது , அது இருந்தது . பண்டம் எங்கும் வ்யாபித்திருந்தது . அதன் அணு அணுவிலும் இருந்தது . இருந்தும் மறைந்து இருந்தது . பண்டம் அரைபட்டு அழிந்த பிறகு , வயிற்றுக்குள் சென்று விட்ட பிறகு , நாக்கில் தங்குவது ருசி .
க்ஞானம் என்பது என்ன ? புஸ்தகங்கள் , பேனாக்கள் , வித்யாலயம் , மஹாவித்யாலயம் , ஆசிரியர்கள் , லைப்ரரி , லெபோரேடரி , கட்டிடங்கள் , பரீக்ஷை இவை எல்லாம் கல்வி பெற்றிட , க்ஞானம் பெற்றிட அவஶ்யமானவை . இவை இல்லாமல் கல்வி பெற முடியாது . ஆனால் , ஒருவன் தான் பெற்ற க்ஞானத்தை , கல்வியை எவ்வாறு உணர்வது ? வித்யாலய பர்வம் முடிந்த பின் , மஹாவித்யாலய பர்வம் முடிந்த பின் , புஸ்தகங்கள் , பேனாக்கள் , பரீக்ஷைகள் என்ற இவை அனைத்தும் அவனது வாழ்க்கையில் இருந்து மறைந்த பின்னர் , அவனுள் எது தங்கி இருக்கிறதோ , ஒளி ரூபமாக அவனுள் இருந்து , அவனது வாழ்க்கையை வழி நடத்துகிறதோ , அதுவே அவன் பெற்ற க்ஞானம் . க்ஞானம் அரூபமானது . புஸ்தகங்கள் , பேனாக்கள் , ஆசிரியர்கள் , லைப்ரரிகள் , லெபோரெடரி , பரீக்ஷைத் தாள் , என்ற இவை அனைத்திலும் க்ஞானம் வ்யாபித்திருக்கிறது . புதைந்து மறைந்து , அவ்யக்தமாய் இருக்கிறது . இவை அனைத்தும் மறைந்த பின்னரும் எது மறையாமல் , ஒளி ரூபமாய் , உள்ளே ப்ரகாஶித்துக் கொண்டிருக்கிறதோ அதுவே ஞானம் .
ஒருவனுடைய வாழ்க்கை என்பது எது ? ஶரீரம் , மூச்சு விடுதல் , போஜனம் , உடைகள் , அவரது பேச்சு, எழுத்து , உறவுகள் , பணம் ஸம்பாதித்திடும் முயற்சிகள் , அதற்கான கருவிகள் , யந்த்ரங்கள் , போக்குவரத்து வாஹனங்கள் ... என்று எத்தனையோ விஷயங்கள் வாழ்க்கையில் உள்ளன . இவையே வாழ்க்கை என்று ஏமாந்து விடும் வாய்ப்பு உண்டு . ஆனால் , இவை அனைத்தும் இல்லாத போதும் , மறைந்த பிறகும் , அவரும் மறைந்த பின்னர் , அவரைப் பற்றிய எத்தகைய பாவம் நிலைத்து நிற்கிறதோ , அதுவே அவரது வாழ்க்கை .
இங்கு ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ பரமாத்மனை இவ்வாறு வர்ணிக்கிறார் . அனைத்தும் வெளிப்பட்டது அவனாலே . அனைத்தின் உள்ளேயும் அவன் வ்யாபித்திருக்கிறான் . அனைத்தும் செயல்படுவது அவனாலே . (அதனாலே என்றும் சொல்லலாம் . ஸ்ரீ பரமாத்மா ஆண் பாலோ பெண் பாலோ இல்லை .) அனைத்தும் அடங்குவதும் அவனாலே . அனைத்தும் அழிந்த பிறகும் , மறைந்து விட்ட பின்னரும் எது இருக்கிறதோ , அதுவே அவன் . அனைத்து உயிர்களும் இருக்கும் போது , வெளிப்பட்டிருந்த நிலையில் , வ்யக்தமாக , ஸ்வரூபமாக இருக்கிறான் . அனைத்தும் மறைந்த பிறகு , வெளிப்படாத நிலையில் , அவ்யக்தமாக இருக்கிறான் . அவன் இருக்கிறான் . அவன் மாத்ரமே இருக்கிறான் .
Comments
Post a Comment