ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 100
अनन्याश्चिन्तयन्तो माम् । (अध्याय ९ - श्लोक २२)
அநந்யாஶ்சிந்தயந்தோ மாம் ... (அத்யாயம் 9 - ஶ்லோகம் 22)
AnanyaashChintayanto Maam ... (Chapter 9 - Shloka 22)
அர்தம் : என்னுடைய சிந்தனையில் மூழ்கி இரு ... (வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் ... அநந்ய) .
நமக்கு ரெண்டு சாய்ஸ் , மாற்றுக்கள் உண்டு . படைப்பு - படைத்தவன் , உலகம் - அவன் , ஜடம் - சைதன்யம் . நாம் உலத்திற்காக வாழலாம் அல்லது அவனுக்காக . ஜடத்திற்காக வாழலாம் அல்லது சைதன்யத்திற்காக ... (படைப்பு என்பது நம்மிடம் உள்ள ஶரீரத்தில் இருந்து உலகம் வரை ...) .
மாற்று 1 - உலகத்திற்காக வாழ்தல் ... உலகத்தைப் பற்றிய சிந்தனை ... ஜடத்தைப் பற்றிய சிந்தனை மேலோங்கும் . ஶரீரம் , அதன் தேவைகள் , பணம் , குடும்பம் , ஸுகங்கள் , பெயரும் புகழும் , செல்வாக்கு , கெளரவம் , போன்ற விஷயங்களைப் பற்றிய சிந்தனை மனஸில் நிலைத்து நிற்கும் . கூர்மையாகக் குவிந்து , ஒரு விஷயத்தில் நிலைக்கும் மனஸ் , நம் (லௌகீகக்) காரியங்களின் செயல் திறனை ஊக்குவிக்க வாய்ப்பு உண்டு . ஆனால் , உலக விஷயங்களின் சிந்தனை ஓங்கி இருக்கும் இதே மனஸ் தெய்வம் / பரமன் ஸம்பந்தமான கார்யங்களில் பெரும் தடங்கலாக அமைந்து விடும் . இத்தன்மையை ஆலயங்களில் பளிச்சென்று காணலாம் . பெரும்பாலோர் , ஆலயங்களில் நுழைந்து ஸந்நிதிக்குச் சென்று அவனுக்கு ஒரு 'கும்பிடு' போட்டு விட்டு , ஏதோ அக்னி குண்டம் மேல் நடப்பது போல வேகமாக ப்ரஹாரத்தை ஸுற்றி வந்து , ஓரிரு நிமிஷங்கள் மண்டபத்தில் அமர்ந்து விட்டு , கோயிலை விட்டு வெளியேறி விடுவர் . ஆன்மீக யாத்ரை என்ற பெயரில் செல்லும்போதும் ஒரு கோவிலில் இருந்து அடுத்த கோவிலுக்குத் தாவிக் குதித்து , குறுகிய விடுமுறைக் காலத்தில் அதிகக் கோவில்களை 'முடித்து விட்டுத் திரும்புவோர் பலர் . த்யானம் செய்யவும் ரெண்டு மூன்று நிமிஷங்கள் அமர முடியாதவர்கள் இவர்கள் . த்யானம் வேண்டாம் . ஆடாமல் அஸையாமல் ஓரிரு நிமிஷங்கள் ஸும்மா உட்காருவதும் இயலாது . பஜனையில் , ஆன்மீக ப்ரஸங்கத்தில் ஒரு மணி நேரம் உட்காரச் சொல்லுங்கள் . இவர்களது பரிதாப நிலையைப் புரிந்து கொள்ளலாம் . ஸ்வய நல நோக்கத்தில் இவர்கள் நடத்திடும் ஹோமம் போன்ற ஸந்தர்பங்களில் , மனஸ் ஒன்றி , மந்த்ரங்களைத் திரும்பிச் சொல்ல முடிகிறதா ? மொபைல் பேசுதல் , 'அதிதி' என்ற பெயரில் வேடிக்கை பார்க்க வருவோரை வரவேற்று குஶலம் விசாரித்தல் , ஜோக் என்ற பெயரில் அசடு வழிதல் , நடத்தப்படும் வைபவம் பற்றி கமெண்ட் அடித்தல் , போன்று பல வழிகளில் திஶை மாறித் தடுமாறுவர் . "ஶீக்ரம் முடித்து விடுங்கள்" என்று நடுநடுவே புரோஹிதருக்குக் குறிப்பு வேறு . ஆனால் , இதே மநுஷ்யர்களால் டீவீ முன் மணிக்கணக்கில் உட்கார்ந்து அபத்தமான தொடர்களைப் பார்க்க முடிகிறது . மால் என்ற பெயரில் வந்திருக்கும் அங்காடிகளில் அலங்காரமாக வைக்கப் பட்டிருக்கும் அல்ப வஸ்துக்களை 'ஜொள்ளு' விட்ட படி பார்த்துக் கொண்டே பல மணி நேரம் செலவிட முடிகிறது . உலகத்தைப் பற்றிய சிந்தனை மனஸில் பதட்ட நிலை ஏற்படுத்துகிறது . நிலை கொள்ளாமல் தவிக்க வைக்கிறது .
மாற்று 2 - அவனுக்காக வாழ்தல் ... அவனைப் பற்றிய சிந்தனை , அவனது மஹிமைகளைப் பற்றிய சிந்தனை , அவனது தயை , அவனது விபூதி , அவனது படைப்பு , படைப்பினைப் பற்றி அவனது அன்பு , அவன் வெளிப்படும் விதம் , உதவிடும் அவன் வழிமுறை , போன்ற சிந்தனைகள் மனஸில் மேலோங்கி நிலைக்கின்றன . விளைவாக , மனஸில் அமைதி ஊற்றெடுக்கிறது . அன்பு ஊற்றெடுக்கிறது . தெய்வீக , ஆன்மீக முயற்சிகள் ஸுலபமாகின்றன . த்யானம் , பஜனையில் லயித்தல் , ப்ரஸங்கத்தில் கவனம் செலுத்துதல் , ஹோமம் செய்தல் , கோவிலில் வழிபடுதல் , மலைக்கோவில் தர்ஶனம் , கிரி ப்ரதக்ஷிணம் , தீர்த ஸ்நானம் , போன்ற நிகழ்வுகளில் அமைதியாக கலந்து கொள்ள முடிகிறது . விளைவாக மனஸில் அமைதி மேலும் உறுதி படுகிறது . உலகாயத கர்மங்கள் மீது எத்தகைய தாக்கம் ஏற்படுகிறது ? அவஶ்யமான கார்யங்கள் , வ்யாபாரம் , வேலை , ஒரு தொழில் ஶாலை நடத்தல் , CA , மருத்துவம் , வகீல் , ஆராய்ச்சியாளன் , ஆசிரியர் போன்றவை ஆனந்தமயம் ஆகின்றன . சிறப்பாகவும் செய்ய முடிகிறது . அவனைப் பற்றிய சிந்தனை ஓங்கினால் , நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அவனுக்காகவே செய்யப்படும் . அக்கர்மங்களில் ஃபலனாகக் கிடைப்பவை அவனுக்கே அர்பணம் ஆகின்றன . எது கிடைத்தாலும் அதை அவனது ப்ரஸாதமாக ஏற்றுக் கொள்ள முடிகிறது .வேகம் அல்லது ஆவேஶம் இல்லை . மனஸில் தளர்ச்சியும் அலுப்பும் இல்லை . ஆனந்தம் , நிலைத்த ஆனந்தமே . தெய்வீகக்க கர்மங்களிலும் , லௌகீக கர்மங்களிலும் ஆனந்தமே . இத்தகைய மநுஷ்யன் ஸுற்றி உள்ள பலருக்கும் உத்ஸாஹம் மற்றும் ஆனந்தத்தின் ஊற்றாகி விடுகிறார் .
ஆனால் , இத்தகைய நிலை ஸாத்யமா ? அநந்யாஶ்சிந்தயந்தஹ் ... நான் இத்தகைய தாய்மார்கள் சிலரை அறிவேன் . ஶ்லோகங்களைப் பாடிக் கொண்டே ஸமையல் செய்திடுவர் . ருசி பார்க்க வேண்டும் என்ற உந்துதல் இருந்திடாது . உணவை ஏற்போர் கூறக்கூடிய பாராட்டு அல்லது குறைகளைப் பற்றி பதட்டம் இருந்திடாது . கார்யபாரத்தைப் பற்றிய அலுப்பு இருந்திடாது . ஆனந்தமாக , அமைதியாக இருந்திடுவர் . உத்ஸாஹத்துடன் பணியை ஏற்பர் . அவர்களது ஸமையல் என்றும் ருசியில் ஏமாற்றியதில்லை . இவர்கள் ஸமைப்பது அவனுக்காக . நான் சில வ்யாபாரிகளை அறிவேன் . கடைக்கு எவரும் வராத நேரங்களில் அமைதியாக அமர்ந்திருப்பர். வ்யாபாரத் தொய்வில் கவலையும் கிடையாது . அதிக வ்யாபாரத்தில் பரபரப்பும் கிடையாது . கடைக்கு வருவோரை தெய்வ ஸ்வரூபமாகக் காணக் கூடியவர்கள் . அவஶ்யம் ஏற்படும்போது ஸுறுஸுறுப்பாக வேலை செய்வர் . வ்யாபாரம் மந்தமாகும் போது , பிரார்தனை செய்தபடி , கீதை படித்த படி அமைதியாக அமர்ந்திருப்பர் . இவர்கள் வ்யாபாரம் செய்வது அவனுக்காக . கிடைத்திடும் ஒவ்வொரு பைஸாவும் அவன் பிரஸாதம் .
அநந்யாஶ்சிந்தயந்தோ மாம் ..என் சிந்தனையில் மூழ்கி இரு . வேறு எந்த சிந்தனையும் அல்லாது என் சிந்தனையில் மாத்ரம் மூழ்கி இரு .
Comments
Post a Comment