ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 102
येऽप्यन्य देवता भक्ता यजन्ते ... तेऽपि मामेव यजन्ति ... अविधिपूर्वकम् । (अध्याय ९ - श्लोक २३)
யேப்யந்ய தேவதா பக்தா யஜந்தே ... தேபி மாமேவ யஜந்தி ... அவிதி பூர்வகம் ... (அத்யாயம் 9 - ஶ்லோகம் 23)
Yepyanya Devataa Bhaktaa Yajante ... Tepi Maameva Yajanthi - AvidhiPoorvakam .. (Chapter 9 - Shlokam 23)
அர்தம் : அந்ய தேவர்களை பூஜிப்பவர்களும் என்னையே பூஜிக்கின்றனர், விதிகளுக்கு முரண்பட்டு ...
யேஶு தன்னை , "I am a Jealous God" என்கிறாராம் . அவருக்கு என்ன பொறாமை ? யார் மீது பொறாமை ? மற்ற கடவுள்கள் மீது ??? ஏன் பொறாமை ? இவர்களைப் பூஜிப்பவர்கள் இத்தனை நபர்கள் இருக்கிறார்களா ? இந்தப் பொறாமையின் காரணமாக , அவர்கள் அனைவரையும் க்றிஸ்தவத்திற்கு மாற்றித் தன் பின்னால் வரச் செய்திட , அக்கடவுள்களை மறக்கச் செய்திட சர்ச் பெரும் பாடு படுகிறது ... மாற மறுப்போரைக் கொன்று விடவும் தயங்குவதில்லை . மற்ற கடவுள்களின் வழிபாட்டு ஸ்தலங்களை தகர்த்து விடவும் தயங்குவதில்லை . பொறாமையின் தீவ்ரம் ...
ஸ்ரீ க்ருஷ்ணன் இங்கு சொல்வது அத்தகைய பாவனையை வெளிப்படுத்துகிறதா ? "நான் ஒருவனே தேவன்" என்கிறாரா ? அந்ய தேவதைகளை பஜிப்பவர்கள் ... ஸ்ரீ க்ருஷ்ண ரூபத்தை அல்லாமல் , மற்ற ரூபங்களைப் பூஜிப்பவர்கள் ... 'என்னையே பூஜிக்கின்றனர்' என்கிறார் . பாரத தேஶத்தில் மிக ஆழமாக வேரூன்றி உள்ள கருத்தையே கூறுகிறார் . வேதங்களின் கருத்து இது . "நீ எந்த ரூபத்திற்கு அர்சனை - ஆராதனை அளித்தாலும் , அது ஒரே பரமனை சென்று அடையும்" . ரூபங்கள் மாறலாம் . பரமாத்மன் ஒன்றுதான் என்ற கருத்தையே வெளிப்படுத்துகிறார் .
விதிகளுக்கு முரண்பட்டு என்கிறாரே ? ஸ்ரீ க்ருஷ்ணன் யஜந்தே அல்லது பூஜித்தல் என்று சொல்வது விக்ரஹ ஆராதனை மற்றும் புஷ்பங்களாலும் ஶ்லோகங்களாலும் செய்யப்படும் பூஜையைக் குறிப்பிடவில்லை .
தனம் , பதவி , கீர்தி ... போன்ற உலகாயத விஷயங்களில் ஏதேனும் ஒன்றை , அடைந்து விட வேண்டும் என்ற ஆவேஶத்துடன் , மனஸெல்லாம் அதே சிந்தனையால் நிறைத்து , ஶரீரத்தின் ஒவ்வொரு அணுவும் அந்த சிந்தனையால் துடித்து , செய்திடும் முயற்சிகள் அனைத்தும் அதே நோக்கத்தால் தூண்டப்பட்டு , இருந்திடும் இந்த நிலை பூஜித்தலே . தனம் என்ற ஶக்தியின் அதிதேவதை , பதவி - அதிகாரம் என்ற ஶக்தியின் அதிதேவதை அல்லது கீர்தி என்ற ஶக்தியின் அதிதேவதையின் பூஜை ... இந்த தேவதைகளின் அருள் வேண்டி நடந்திடும் பூஜை ... இந்தப் பூஜையில் புற ஷடங்குகள் இல்லை . ஆனால் , இங்கும் பாவனை ஒரு பக்தனின் பாவனையே . அநன்ய பாவனை . வேறு எந்த சிந்தனையும் இல்லாது , தான் நாடிடும் ஶக்தியின் சிந்தனை மாத்ரம் . பக்தனின் லக்ஷணங்கள் அனைத்தும் இருந்தும் , இதை "விதிகளுக்கு முரணான" பூஜை என்கிறான் ஸ்ரீ க்ருஷ்ணன் .
தனம் நாடுகிறான் . பதவியை நாடுகிறான் . கீர்தியை நாடுகிறான் . அந்த ஒரே நாட்டத்தில் வாழ்கிறான் . அந்த ஒரே சிந்தனையில் லயிக்கிறான் . ஏன் ? இவற்றை அடைந்து விட்டால் நிரந்தர ஆனந்தத்தை , பரம ஆனந்தத்தை அடைந்து விடலாம் என்று கருதுவதால் ... இயலாத நிலையை மாற்றி குறையற்ற ஐஶ்வர்யத்தைப் பெற்று விடலாம் என்று நினைப்பதால் , நிஶ்சயம் அழிவு என்ற நிலையை மாற்றி , அழிவற்ற அமர நிலையை அடைந்து விடலாம் என்று கருதுவதால் ... மரணத்திற்குப் பின்னும் நிலைத்து விட வேண்டும் என்று விரும்புவதால் .... இது ஸாத்யமா ? தனத்தால் , அளவற்றதாக இருந்தாலும் ... ஆனந்தத்தை வாங்கி விட முடியுமா ? து:கம் கலப்பில்லாத ஸுகத்தைப் பெற்று விட முடியுமா ? பதவியால் , வானளாவிய அதிகாரத்தால் குறைவற்ற ஐஶ்வர்யத்தைப் பெற்று விட முடியுமா (ஐஶ்வர்யம் என்றால் செல்வம் இல்லை . ஆதிக்யம் அல்லது ஈஶ்வரத் தன்மை) ? கீர்தியால் அழிவற்ற நிலையை , மரணம் இல்லா நிரந்தர நிலையை எய்து விட முடியுமா ? முடியாது என்பதே ஸத்யம் .
தனம் மூலம் பொருட்களை வாங்கி விடலாம் . ஸுகங்களை விலை பேசலாம் . ஆனந்தம் கிடைத்திடுமா என்றால் கிடைக்காது . பதவி மூலம் அதிகாரம் பெறலாம் . சில குறுகிய காலத்திற்கு , சிலர் மீது ஆதிக்யம் செலுத்தலாம் . பூர்ண ஆதிக்யம் , ஐஶ்வர்யம் லபிக்குமா என்றால் 'ம்ஹும் . லபிக்காது' . கீர்தியைப் பெற்றால் , சில கல்வெட்டுகளில் பெயர் பதியலாம் . சில ஶிலைகள் நிறுவப்படலாம் . பளிங்குக் கற்களால் ஸமாதி கட்டப் படலாம் . இவை குறுகிய காலத்திற்கே நிலைத்திடும் . நிரந்தரத் தன்மையை , மரணமற்ற நிலை கிடைக்குமா என்றால் கிடைக்காது . அதனால் தான் இம்முயற்சிகளை , இந்நாட்டங்களை "விதிகளுக்கு முரணானவை" என்கிறான் ஸ்ரீ க்ருஷ்ணன் .. அடைய வேண்டியது ஒன்று . அதற்கான பாதையை விட்டு விட்டு , வேறொரு பாதை வழியாக ப்ரயாணிக்க முயல்வதை "விதிகளுக்கு முரணான" என்கிறார் .
தனம் , அதிகாரம் , கீர்தி , ஸந்தானம் போன்றவற்றை நாடும் இவர்களே மற்ற தேவதைகளை வழிபடுபவர்கள் . இவர்களது பாவனை அநன்யமாக இருப்பதால் இவர்களும் பூஜித்திடும் பக்தர்கள்தான் . விரும்புவதை அடைந்தாலும் , இவர்களது நோக்கம் நிறைவேறாது என்பதால் இவை விதிகளுக்கு முரண்பட்டவை .
Comments
Post a Comment