ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 96
न च मां तानी कर्माणि निबध्नन्ति ... (अध्याय ९ - श्लोक ९)
ந ச மாம் தானி கர்மாணி நிபத்னந்தி ... (அத்யாயம் 9 - ஶ்லோகம் 9)
Na Cha Maam Taani Karmaani Nibadhnanthi ... (Chapter 9 - Shlokam 9)
அர்தம் : இந்த கர்மங்கள் என்னைப் பிணைப்பதில்லை ...
இந்த கர்மங்கள் என்னைப் பிணைப்பதில்லை என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் . பிணைப்பது என்றால் என்ன ? கட்டிப் போடுவது , ஸ்வதந்த்ரமான ப்ரயாணத்தை முடக்குவது , வளர்ச்சியை - முன்னேற்றத்தைத் தடுப்பது ..
கர்மங்கள் பிணைக்கின்றன என்றால் கர்மங்களைச் செய்யாமல் இருக்க முடியுமா ? உலக வாழ்க்கையில் இது முடியாதது . இந்த ஶரீரம் , இந்த்ரியங்கள் , மனஸ் , புத்தி , வாக்கு என்ற ப்ராக்ருத ஸாதனங்கள் இருக்கும் வரை , நாம் விரும்பவில்லை என்றாலும் கர்மங்கள் நடந்திடும் . அப்போது பிணைப்பது எது ? கர்மங்கள் மீதும் அவற்றில் இருந்து கிடைத்து விடும் என்று நாம் எதிர்ப்பார்க்கும் ஃபலன்கள் மீதும் உள்ள பற்று , விருப்பம் தான் நம்மைப் பிணைக்கிறது .
எவ்வாறு பிணைக்கிறது ? "இது நான் செய்திடுவது" ; "இதை நான்தான் செய்ய வேண்டும்" ; "இதை நான் மாத்ரமே செய்கிறேன்" ; "இதை நான் செய்யவில்லை என்றால் ..." ; "மற்ற பலர் முயற்சி செய்துள்ளனர் . ஆனால் , இந்த வழியில் அல்ல . இது நானே சிந்தித்துக் கண்டு பிடித்தது" ; இவை எல்லாம் கர்மத்தின் மீது உள்ள பிணைப்பு .. பிணைப்பது 'நான்' என்ற கயிறு .
"இது எனக்குப் பெரும் செல்வத்தை ஈட்டிக் கொடுக்கும்" ; "இதனால் என் பெயர் - புகழ் இவ்வுலகத்தில் நிலைத்து நிற்கும்" ; "இதனால் ஜனங்கள் பெரும் நன்மை அடைவர்" ; இவை கர்ம ஃபலன் மீது உள்ள பற்று ... இங்கும் 'நான்' என்பதே பிணைத்திடும் கயிறு ..
பிணைக்கப் படுவதால் என்ன பாதிப்பு ? முதல் பாதிப்பு - அறியாமை என்ற தேக்க நிலை .. நான் நிலைத்திடுவேன் என்பது அறியாமை .. நான் இல்லை என்றால் எல்லாம் குலைந்து விடும் என்பது அறியாமை .. 'நான் என்பதே அறியாமை .. மற்ற பலரின் உதாஹரணங்கள் நமக்கு இந்த ஸத்யத்தை உணர்த்திடுகின்றன . ஆனாலும் மனஸ் கேட்பதில்லை . அவற்றைப் பார்க்க மறுக்கிறது . மூடி மறைக்க முயற்சிக்கிறது . அவர்களுக்கு ஏற்பட்டது எனக்கு ஏற்படாது என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ள வழி வகுக்கிறது .
ரெண்டாவது பாதிப்பு - அஹங்காரம் என்ற முள் .. இது பூ லோக வாழ்க்கையில் நம் உறவுகளை பாதித்து , நம்மைத் தனிமைப் படுத்தக் கூடியது . நம் சிந்தனையைத் தடுமாறச் செய்யும் ஆற்றல் படைத்தது . ஆன்மீக ரீதியாக நம் வளர்ச்சியைத் தடுக்க வல்லது .
மூன்றாவது பாதிப்பு - நாம் ஒரு பொய்யனாகி , நடிகனாகி , மித்யாசாரி ஆகி , கீழ் நோக்கித் தள்ளப் படுவது .. நடிகன் மற்றவரை 'குஷி' படுத்த முயல்கிறான் . பொய் முகத்தைக் காட்டுகிறான் . தன் ரசிகர்கள் கலைந்து விடுவர் என்ற பயத்தில் ஸத்யத்தைப் பேசத் தயங்குகிறான் . தன் விருப்பம் இல்லாத கார்யங்களைச் செய்கிறான் . வேறு வழி இல்லை என்று பெருமூச்சு விடுகிறான் . நடிகன் என்றால் ஸினிமா நடிகன் மாத்ரம் அல்ல . ஃபேஸ்புக்கில் எழுதுபவர்கள் 'லைக்' கை எண்ணுகின்றனர் . மேடையில் பேசுபவர்கள் கைத்தட்டலை எண்ணுகின்றனர் . ஸினிமா நடிகன் கோடிகளை எண்ணுகிறான் . இவைக் கிடைக்க வேண்டும் என்பதற்காக , இருப்பது குறைந்து விடக் கூடாது என்பதற்காக .. பொய் , மிகைப்படுத்தல் , அலங்காரம் , எல்லாம் சேர்ந்து விடுகின்றன .
பின் என்ன செய்வது ? தன் ஸ்வபாவத்திற்கு ஏற்ப செயல்படுவது என்பதுதான் ஒரே வழி ..
Comments
Post a Comment