ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 98
मोघाशा मोघ कर्माणो मोघ ज्ञाना विचेतसः राक्षसीम् मोहिनॆम् । (अध्याय ९ - श्लोक १२)
மோகா மோக கர்மாணோ மோக க்ஞானா விசேதஸஹ ராக்ஷஸீம் மோஹினீம் ... (அத்யாயம் 9 - ஶ்லோகம் 12)
Moghaashaa Mogha Karmaano Mogha Gyaanaa Vichetasah Raakshaseem Mohineem ... (Chapter 9 - Shloka 12)
அர்தம் : மோக என்றால் வெற்று . வீணான .. (அமோக என்ற வார்தை தமிழகத்தில் உபயோகத்தில் உள்ளது . அமோக என்றால் மிகச் சிறந்த , மிகப் பயனுள்ள ...) மோக ஆஶா என்றால் ... வெற்று நம்பிக்கை . மோக க்ஞானம் என்றால் வெற்று க்ஞானம் . மோக கர்ம என்றால் வீணான முயற்சிகள் . இவை மோஹத்தைத் தோற்றுவித்து , புத்தியைக் குழப்ப வைத்து , ராக்ஷஸத் தன்மையைத் தூண்டி விட்டு , மநுஷ்யனை தாமஸனாக்கக் கூடியவை .
மூடன் யார் ? அவஶ்யமானதை காரியத்தைச் செய்யாதவன் மூடன் . உபயோகமான க்ஞானத்தை ஏற்காதவன் மூடன் . அர்தமுள்ள நம்பிக்கைகளை வைத்திடாதவன் மூடன் . அதற்கு மேல் , வெற்று க்ஞானத்தைப் பெறுபவன் , வெற்று நம்பிக்கைகளை போஷிப்பவன் , அர்தமற்ற கார்யங்களைச் செய்பவன் ... மஹா மூடன் . மூடன் மாத்ரம் இல்லை . புத்தி ப்ரஷ்டன் . குழப்பத்தில் ஆழ்ந்திருப்பவன் . தாமஸன் . ராக்ஷஸன் . அப்பப்பா !! ஸ்ரீ க்ருஷ்ணனின் கடுமையான வார்தைகள் .
நம்பிக்கையே வாழ்வின் ஆதாரம் என்கிறார்கள் . எனில் மோக ஆஶைகள் எவை ? அர்தம் அற்ற , வெற்று நம்பிக்கைகள் எவை ? வீட்டு வாஸலில் ஒரு கல்லைத் தொங்க விட்டால் கேடு வராது . கையில் ஒரு கயிற்றைக் கட்டிக் கொண்டால் , எல்லாம் நல்லபடி நடந்திடும் . ஸ்ரீ க்ருஷ்ணன் குறிப்பிடுவது இத்தகைய மூட நம்பிக்கைகளை , என்று கருதி , மூடன் என்று அவர் குறிப்பிடுவது என்னை அல்ல என்று நினைப்பது தன்னையே ஏமாற்றிக் கொள்ளுதல் . நம்மிடம் 'இத்தகைய மூட நம்பிக்கைகள் இல்லை . ஸரி . ஆனால் , நம் நம்பிக்கைகள் எவ்வாறு உள்ளன ? இன்று நன்றாக நடந்தது போலவே நாளையும் நடந்திடும் . இன்று கிடைத்த மோசமான அநுபவங்கள் இனி .கிடைத்திடாது பிறருக்கு ஏற்பட்ட அநுபவம் எனக்கு ஏற்படாது . பிறர் செய்த தவறுகள் என்னால் நிகழாது . என் தவறுகள் கண்ணில் படாமல் இருந்து அல்லது மன்னிக்கப் பட்டு , எனக்கு நல்ல ஃபலன் கிடைத்திடும் . என் திட்டம் மிகச் சரியானது . அதன் படியே நடந்திடும் . என் முயற்சிகள் நிஶ்சயம் நான் எதிர்ப்பார்த்த ஃபலன்களையே கொடுத்திடும் . நான் மோஹ வலையில் வீழ்ந்திட மாட்டேன் . நான் அன்றாடம் தேஹப் பயிற்சி செய்பவன் . எனக்கு நோயெதுவும் வராது . நான் பூர்ண ஆயு வாழ்ந்திடுவேன் . போன்றவை . இவை ஒவ்வொன்றும் மோக ஆஶைகளே . மோஹத்தில் ஆழ்த்த வல்லவை .
க்ஞானம் புனிதமானது . க்ஞானத்தைப் பெறுதலே வாழ்க்கையில் ப்ரதான கார்யம் . ஸத்யம் . ஆனால் , க்ஞானம் என்ற பெயரில் குப்பை கூளங்களை மூளையில் நிரப்பிக் கொண்டு தன்னை க்ஞானி என்று சொல்லிக் கொண்டால் ?? உலகத்தில் அன்றாட சோற்றை ஸம்பாதித்திட , துள்ளிக் குதித்தல் , உருளுதல் ,கரணம் அடித்தல் போன்ற நான்கைந்து விஷயத்தைக் கற்றுக் கொண்டால் குரங்கிற்குப் போதும் . ஆனால் , அது க்ஞானம் இல்லை . இன்று கல்வி என்ற பெயரில் அளிக்கப் படுவது இத்தகையதே . அதே போல , ஆயிரக்கணக்கில் வெற்று விவரங்களை மனப்பாடம் செய்து வைத்தலும் க்ஞானம் இல்லை . இவை நமக்கு சில பரிஸு பாராட்டுக்களை கொடுக்கலாம் . நமக்கு வழி காட்டும் வகையில் நம்முள் ஒளி ஏற்றாது .
மோக கர்மம் எவை ? நிழலைப் பிடிக்க முயற்சி , நாயின் வாலை நேராக்க முயற்சி .. ஈ அல்லது கொசுவைத் துரத்தி துரத்தி அடிப்பது ... போன்ற செயல்கள் வெற்றானவை என்பது வெளிப்படை . ஆனால் நம்மில் பெரும்பாலோர் ஈடுபட்டிருக்கும் பல செயல்கள் வெற்றானவையே . அர்தம் அற்றவையே . நாய் ஒரு எலும்பைச் கடித்துக் கொண்டிருக்கும் . அது காய்ந்து போன எலும்பு . அது நாயின் வாயில் குத்தி , காயம் ஏற்படுத்தும் . நாய் தன் ரக்தத்தையே சுவைத்து , எலும்பின் சுவை என்று கருதிடும் . எலும்பை விடாமல் கடித்திடும் . நமது பல செயல்கள் இதே போன்றவை . அறியாமையில் தோய்ந்தவை . வாழ்வதற்காக செல்வம் வேண்டும் . அதை ஈட்டிட செய்யப்படும் கர்மங்களில் அர்தம் உண்டு . செல்வம் , அதிக செல்வம் , மிக அதிக செல்வம் ... அளவற்ற செல்வம் குவித்திட செய்யப் படும் முயற்சிகள் ... "நான் யார் ?" என்று அறிந்திட செய்யப் படும் முயற்சிகள் அமோகம் . விவேகம் கூடியவை . "நான் யார் !!" என்று காட்டிட செய்யப் படும் முயற்சிகள் வெற்றானவை . அநுதினமும் தேஹப் பயிற்சிகள் செய்தல் விவேகம் . ஶரீரம் ரோகம் இல்லாமல் இருந்திட வேண்டும் என்ற பயத்தில் செய்யப் படும் முயற்சிகள் வெற்று . ஶரீரத்தில் ரோகம் ஏற்பட்டு விட்டால் ... பல்துறை டாக்டர்கள் பின்னால் அலைந்து , மற்ற பலரும் கூறிடும் யோஜனைகளை பின்பற்ற முயன்று , கோவில் கோவிலாக திரிந்து , ரோகத்தில் இருந்து முக்தி பெற்றிட செய்யப் படும் முயற்சிகள் வெற்று . தவறான முயற்சிகள் செய்து விட்டு ஸரியான ஃபலன் கிடைக்க முயலுதல் , அஸத்யத்தைப் பற்றி விட்டு , தீய ஃபலன் தவிர்த்திட முயலுதல் , விஷ விதையை ஊன்றி விட்டு இனிய பழம் வேண்டும் என்று பிரார்தனை செய்தல் .. இவை எல்லாம் வெற்று முயற்சிகள் ...
இது உபயோகமானதா ? இது என்னை உயர்த்திடுமா ? இது எனக்கு அவஶ்யமானதா ? இந்தக் கேள்விகள் கேட்டு நம் நம்பிக்கைகளை , க்ஞானத்தை மற்றும் கர்மத்தை உரஸிப் பார்க்க வேண்டும் . ஆம் என்று பதில் வருபவற்றை மாத்ரம் ஏற்று ... அமோக வாழ்க்கை , அர்தமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் .
Comments
Post a Comment