ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 99
सदसच्चाहम् । (अध्याय ९ - श्लोक १९)
ஸதஸச்சாஹம் ... (அத்யாயம் 9 - ஶ்லோகம் 19)
Sadasachchaaham ... (Chapter 9 - Shloka 19)
அர்தம் : ஸத் , அஸத் ரெண்டும் நான் .
வேதங்களில் நாம் மநுஷ்யர்கள் (ர்ஷீகள்) ஸ்ரீ பரமனைப் பற்றி விவரிக்கிறோம் . கீதையில் அவனே தன்னை விவரிக்கிறான் . அவனைப் பற்றி நம் மனஸில் (அர்ஜுனன் மனஸில்) எழக் கூடிய கேள்விகளுக்கு பதில் அளிக்கிறான் .
மனைவி ஸமைத்து போஜனம் .அளிக்கிறாள் மிகவும் ஸ்வாதிஷ்டமாக ஸமைப்பவள் , ஒரு நாள் , உப்பில்லாமல் அல்லது சூடு குறைவாக ஸமைத்து விடுகிறாள் . கோபமும் சண்டையும் அவ்ஶ்யமா ? ஸ்வாதிஷ்டமாக ஸமைத்தவளும் அவளே . இன்று மாறிய ருசியுடன் ஸமைத்திருப்பவளும் அவளே .
ஒரு ரோஜாச் செடி அநுதினமும் அழகான , மணமான ரோஜா புஷ்பங்களைக் கொடுக்கிறது . நாமும் அதைப் பறித்து , ஸ்ரீ பகவானின் பாதங்களில் ஸமர்பித்து , ஆனந்தம் அடைகிறோம் . ஒரு தினம் ரோஜாவைப் பறித்திடும் போது , ஒரு முள் குத்தி விடுகிறது . செடியிடம் கோபப் படலாமா ? ஸுகந்தமான , ஸுந்தரமான புஷ்பத்தைக் கொடுப்பதும் அதே செடி . முள்ளைக் கொடுப்பதும் அதே செடி .
ஒரு பதவியில் அமர்ந்திருக்கும் போது , கிடைக்கக் கூடிய பாராட்டுக்களும் , சலுகைகளும் , மர்யாதைகளும் , வரவேற்புகளும் மனஸிற்கு ஹிதம் அளிப்பவை . வயஸு ஆனதாலோ , சட்டம் மாறியதாலோ , கருத்து வேறுபாட்டினாலோ , அரஸியல் சூழ்நிலை மாறியதாலோ , அந்த பதவி பறிக்கப் படும்போது கிடைக்கக் கூடிய அபமானங்களும் அலக்ஷ்யங்களும் வசை மொழிகளும் மனஸிற்கு நெருடலானவை . ஒரே பதவியால்தான் ரெண்டும் விளைந்தன என்பதுதானே ஸத்யம் ?
க்ளாஷியஸ் க்ளே என்ற குத்துச் சண்டை வீரன் கூறியதைக் கேளுங்கள் . "பயிற்சிக் கூடத்தில் அழுபவன் பந்தய மேடையில் சிரிக்கிறான் . அங்கு அழ விரும்பாதவன் , சிரித்த படி இருக்க விரும்புபவன் , பந்தய மேடையில் அழுகிறான் . அழுகையும் , சிரிப்பும் ஒரே குத்துச்சண்டையில் விளைபவையே .
ப்ரஶ்னை மனைவியிலோ , ரோஜாச் செடியிலோ , பதவியிலோ , குத்துச் சண்டையிலோ இல்லை . ஸம்பந்தப் பட்ட மநுஷ்யனிடம் உள்ளது . இவனுக்கு ஸ்வாதிஷ்டமானதே வேண்டும் . அழகான , ஸுகந்தம் நிறைந்த புஷ்பம் மாத்ரமே வேண்டும் . பாராட்டுக்களும் பரிஸுகளும் வேண்டும் . சிரிப்பு மாத்ரமே வேண்டும் . அனுகூலமானவை , ஹிதமானவை , ஸுகமானவை மாத்ரம் வேண்டும் . எதிர்மறையானவை வேண்டாம் . ப்ரதிகூலமானவை வேண்டாம் . கசப்பானவை வேண்டாம் . ரெண்டையும் அளிப்பது ஒன்றே என்பதை நாம் அறிவதில்லை . அறிய மறுக்கிறோம் . மீறி அறிய வைக்கப் படும் போது அதிர்ச்சியாக இருக்கிறது .
ஸ்ருஷ்டி அவன் ஸமைத்தது . அதில் உள்ள அனைத்தும் அவன் கைவண்ணம் . அவன் திட்டத்தில் உருவானவை . ஸ்ருஷ்டியில் தென்றலும் அவனே . புயலும் அவனே . தூறலும் அவனே . பெருவெள்ளமும் அவனே . ஹிதமான , ரம்யமான விடியற் காலை வானமும் அவனே . கொளுத்திடும் மத்யாஹன வானமும் அவனே . சோலையும் அவனே . பாலையும் அவனே . அட்டஹாஸமான ஸுநாமியும் அவனே . மந்தஹாஸமான அமைதியான அலைகளுடன் கூடிய ஸமுத்ரமும் அவனே . மலரும் அவனே . முள்ளும் அவனே . ஜன்மமும் அவனே . மரணமும் அவனே . பூத்துக் குலுங்கும் வஸந்தமும் அவனே . காய்ந்து கிடக்கும் வறட்சியும் அவனே . அவன் படைப்பு . அதில் உள்ள எல்லாம் அவனே .
ப்ரஶ்னை அதுவல்ல . நாம்தான் ப்ரஶ்னை . நமக்கு ஒன்று வேண்டும் . மற்றொன்று வேண்டாம் . நாம் அவனது படைப்பிற்கு மார்க் போட்டு , அநுகூலமானவை - ப்ரதிகூலமானவை , இனிப்பு - கசப்பு , ஹிதமானவை - முரடானவை , பிடித்தவை - பிடிக்காதவை என்று பாகு படுத்தி உள்ளோம் . முதல் வகைகளைப் படைத்தவன் எவ்வாறு ரெண்டாம் வகைகளைப் படைத்திருக்க முடியும் என்று கேட்கிறோம் . ரெண்டும் ஒரே 'ஒருவனுடைய' படைப்பு என்று நம்ப மறுக்கிறோம் . க்றிஸ்தவமும் இஸ்லாமும் இந்த ரெண்டு வகைகளின் படைப்பிற்கு வெவ்வேறு ஶக்திகளை நியமித்தே விட்டன . முதல் வகைகளைப் படைத்தவன் கடவுளாம் . ரெண்டாம் வகைகளைப் படைத்தவன் ஶைதானாம் .
இங்கு ஸ்ரீ க்ருஷ்ணன் , "இல்லை . இல்லை . ரெண்டும் என் படைப்பே . ரெண்டும் நானே" என்கிறான் . ஸத்தும் நானே . அஸத்தும் நானே .
Comments
Post a Comment