ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 105
समोऽहं सर्व भूतेषु , न में द्वेष्योsस्ति न प्रियः ... (अध्याय ९ - श्लोक २८)
ஸமோ(அ)ஹம் ஸர்வ பூதேஷு , ந மே த்வேஷ்யோsஸ்தி ந ப்ரியஹ ... (அத்யாயம் 9 - ஶ்லோகம் 28)
Samo(a)ham Sarva Bhooteshu , Na Me Dweshyo(a)sti Na Priyah ... (Chapter 9 - Shlokam 28)
அர்தம் : ஜீவன்கள் அனைத்தும் எனக்கு ஸமமானவையே . ஜீவன்களில் எனக்கு வெறுப்பென்றும் ப்ரியம் என்றும் எதுவும் கிடையாது .
தாய்க்குத் தன் குழந்தைகள் அனைவரும் ஸமமானவர்களாகத் தானே இருக்க வேண்டும் ? ஒரு தாய் தன் ஒரு குழந்தையை த்வேஷித்தும் மற்றொரு குழந்தையை ஸ்நேஹித்தும் பாரபக்ஷம் செய்திடுவாளோ ? அதே போல , படைத்தவனுக்குத் தன் படைப்புகள் அனைத்தும் ஸமமானவையாகத் தானே இருக்க வேண்டும் ? "ஜீவன்களில் எனக்கு த்வேஷம் என்றும் ப்ரியம் என்றும் கிடையாது" என்று படைத்தவனான ஸ்ரீ பரமாத்மன் ஏன் சொல்ல வேண்டும் ?
அவனுக்கு ஜீவன்கள் அனைத்தும் ஸமமே . அவன் எதையும் வெறுப்பதில்லை . ஸ்நேஹிப்பதும் இல்லை . ஆனால் , படைப்பில் அனைத்தும் ஸமமாகக் காணப்படவில்லையே ? எத்தனை வேறுபாடுகள் ? பொருளாதாரத்தில் , ஆற்றலில் , வாய்ப்புகளில் , புத்தியில் , குணங்களில் , ஶரீர அமைப்பில் , ஆரோக்யத்தில் ... எண்ணில் அடங்கா வேறுபாடுகள் ...
சிலர் ஏழையாகவே பிறந்து ஏழையாகவே மறைகின்றனர் . சிலர் தனவந்தராகப் பிறந்து தனவந்தராகவே மறைகின்றனர் . இவ்விரண்டு நிலைகளுக்கு மத்தியில் பலப்பல நிலைகள் . சிலர் ஜன்மத்திலேயே அரிய ஆற்றலுடன் பிறக்கின்றனர் . ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பும் கிடைக்கிறது . சிலர் ஆற்றலுடன் பிறந்தும் குடத்தில் இட்ட விளக்கு போல வாழ்ந்து மறைந்து விடுகின்றனர் . சிலர் விஶேஷ ஆற்றல் எதுவும் இல்லாமலும் உலகத்தில் ஜ்வலிக்கின்றனர் . சிலர் உழைத்து ஆற்றலை வளர்த்துக் கொள்கின்றனர் . இதே போல , வாய்ப்புகளிலும் பற்பல வேறுபாடுகள் . கூர்மையான புத்தி , ஸாதாரண புத்தி , மந்த புத்தி என்று புத்தியில் பலப்பல ஸ்தரங்கள் ... குணங்கள் அடிப்படையில் ராக்ஷஸ குணம் முதல் தெய்வ குணம் வரை ஆயிரக்கணக்கான வகைகள் ... தோலின் நிறம் , உயரம் , அங்க ஹீனம் .. என்று ஶரீர அமைப்பில் வேறுபாடுகள் .. ஆண் - பெண் என்ற வேறுபாடு .. நித்ய நோயாளி முதல் ஆஜீவன ஆரோக்யம் வரை ஆரோக்யத்தில் பலப்பல நிலைகள் ... மேற்கூறிய அனைத்தின் பல்வேறு Combinations ..என்று கோடிக்கணக்கில் வேறுபாடுகள் நிறைந்து காணப்படுகிறது இப்படைப்பு .
இத்தனை இத்தனை வேறுபாடுகளைக் காணும் போது , "படைத்தவன் ஒருவனே என்றால் அனைத்தும் ஸமமாக , ஒரே போல பிறந்து , ஸமமான வாய்ப்புகள் பெற்று , ஒரே போன்ற ஸுக - து:கங்களை அநுபவித்து , வாழ்ந்து மறைய வேண்டும் அல்லவா ?" என்ற சிந்தனை ஏற்படுகிறது . "இத்தனை வேறுபாடுகள் உள்ளன என்றால் , அனைத்து ஜீவன்களும் அவனுக்கு ஸமம் இல்லை என்றுதானே அர்தம் ஆகிறது ?" என்று தோன்றுகிறது . "சிலர் ஸுகத்தில் மிதக்கின்றனர் . சிலர் து:கத்தில் மூழ்குகின்றனர் . அவ்வாறெனில் , ஸில ஜீவன்கள் அவனுக்கு ப்ரியமானவை , வேறு ஸில ஜீவன்கள் வெறுப்பானவை என்றுதானே அர்தம் ஆகிறது ?" என்ற கேள்வி பிறக்கிறது .
ஸ்ரீ க்ருஷ்ணன் , "இல்லை . இல்லை . அனைத்து ஜீவன்களும் எனக்கு ஸமமானவையே . ஜீவன்களில் எனக்கு த்வேஷம் என்றும் ப்ரியம் என்றும் கிடையாது" , என்கிறான் .பின் , வேறுபாடுகள் ஏன் ?
மழை பொழிகிறது . மழை அனைவருக்காகவும் தான் பொழிகிறது . மழைக்கு வெறுப்பென்றும் ப்ரியம் என்றும் கிடையாது . ஆனால் , வானை நோக்கி வாயைத் திறந்து வைத்திருக்கும் பானை நிரம்புகிறது . கவிழ்த்து வைக்கப் பட்ட பானை மீது மழை நீர் வழிந்தோடி மறைந்து விடுகிறது . தூர் வாரப்பட்டு தயாராக இருக்கும் குளங்களும் ஏரிகளும் நிறைகின்றன . ஆக்ரமிக்கப்பட்டு , புதர் மண்டிக் கிடைக்கும் குளங்களும் ஏரிகளும் நிரம்புவதில்லை . அதற்கு மேல் , இவை நாஶத்திற்கும் காரணமாகின்றன . வான் நோக்கி வாயைத் திறந்து வைத்து தபஸ் இருக்கும் சிப்பி , மழைத்துளியை வாங்கி , கடலின் கீழ் மட்டத்தில் தன் தபஸைத் தொடர்ந்து , அழகான முத்தைப் படைக்கிறது . கவிழ்ந்து கிடக்கும் சிப்பி ? இந்த வெவ்வேறு விளைவுகளுக்கு மழை பொறுப்பாகுமா ?
ஸூர்யன் ப்ரகாஶிக்கிறான் . அனைத்து ஜீவன்களுக்காகவும் ப்ரகாஶிக்கிறான் . அனைவரும் ஒரே அளவில் ஸூர்ய உஷ்ணத்தையும் ப்ரகாஶத்தையும் உபயோகப் படுத்திக் கொள்கின்றனரா ? இல்லை . விளைவுகளில் காணப்படும் வேறுபாடுகளுக்கு ஸூர்யன் எவ்வாறு பொறுப்பாவான் ?
ஸ்ரீ பரமனின் பார்வை அனைவர் மீதும் ஸமமாகவே இருக்கிறது . ஆனால் , இவன் ஸ்ரீ பரமனை நோக்கி இராமல் , அவனுக்கு முதுகைக் காட்டி , உலகத்தை நோக்கித் திரும்பி இருந்தால் ? கவர்ச்சிகளில் மூழ்கி வாழ்ந்தால் ?
அவனுடைய அநுக்ரஹம் கிடைத்திடும் . நிஶ்சயம் கிடைத்திடும் . அதற்கு ஜீவனுடைய முயற்சியும் அவஶ்யம் . சிறு முயற்சி . மிகச் சிறிய முயற்சி . அவனை நோக்கித் திரும்ப வேண்டும் . அவ்வாறு திரும்பி விட்டால் , துராசாரியும் தத்க்ஷணம் ஸாது ஆகி விடுவான் என்கிறான் ஸ்ரீ க்ருஷ்ணன் . அடுத்த சொற்றொடரில் பார்ப்போம் .
Comments
Post a Comment