ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 112
सर्वमेतद ऋतं मन्ये यत् वदसि ... (अध्याय १० - श्लोक १४)
ஸர்வமேதத் ர்தம் மன்யே யத் வதஸி .. (அத்யாயம் 10 - ஶ்லோகம் 14)
Sarvametad Rtam manye yat vadasi ... (Chapter 10 - Shlokam 14)
அர்தம் : தாங்கள் சொல்வதனைத்தையும் ஸத்யம் என்று கருதுகிறேன் ...
அர்ஜுனன் ஒரு நரன் . ஸாதாரண மநுஷ்யன் . நம்மை ஸுற்றி ஸாதாரண மநுஷ்யர்களில் காணும் ஒரு பார்வையை அர்ஜுனன் பேசிடும் இந்த சொற்றொடரில் காணலாம் .
செல்வத்தாலோ படிப்பாலோ பதவியாலோ புகழாலோ பெரியவன் என்று கருதப்படும் ஒருவன் சொல்வதை , அவன் பெரிய மநுஷ்யன் என்று கருதுவதால் மாத்ரம் , ஸத்யம் என்று நம்புவது ஸாதாரண மநுஷ்யர்களில் நாம் காணும் ஒரு தன்மை . உரையாடல்களில் தன் பக்ஷ வாதம் பலஹீனமாகும் போது , சாணக்யனே சொல்லி இருக்கிறான் , நரேந்த்ர மோதியே சொல்லி இருக்கிறார் என்றெல்லாம் இந்த பெரிய மநுஷ்யர்களை நடுவில் இழுத்து , எதிராளியின் வாயை மூட வைக்கும் முயற்சியை நாம் பல முறை கண்டிருக்கிறோம் . இங்கு ஸ்ரீ க்ருஷ்ணன் அர்ஜுனனின் நண்பன் . உறவினன் . கீதையின் பத்தாம் அத்யாயமான விபூதி யோகத்தில் இந்த சொற்றொடரைப் பேசும் இந்த தருணத்தில் ஸ்ரீ க்ருஷ்ணன் பரமாத்ம ஸ்வரூபம் என்று உணர ஆரம்பித்து இருக்கிறான் அர்ஜுனன் .
பெரிய மநுஷ்யனாக இருந்தால் என்ன ? தேஶத்தின் ப்ரதம மந்த்ரியாகவே இருந்தால் என்ன ? ஏன் ? பரமாத்மாகவே இருந்தால் தான் என்ன ? அவன் சொல்கிறான் என்பதற்காக அதை ஸத்யம் என்று நம்புவது ஸரியா ? ஆனால் , ஸாதாரண மநுஷ்யர்களுக்கு நக்கீரனாவது மிகக் கடினம் .
ஸத்யம் என்று கருதுவதாக , நம்புவதாக அர்ஜுனன் கூறுகிறான் . ஏற்பதாக என்று சொல்லவில்லை . எத்தனை பெரிய மநுஷ்யன் சொல்லி இருந்தாலும் , எத்தனை ஸாக்ஷிகளை அழைத்தாலும் நம்பிக்கை ஸத்யம் ஆவதில்லை . நம்பிக்கை என்று சொல்லும் பொழுதே அவநம்பிக்கையும் சேர்ந்தே வருகிறது . நம்பிக்கைக்கு ஸாக்ஷிகள் தேவை . பெரிய மநுஷ்யர்களின் மேற்கோள்கள் தேவை . தானே ஸ்வயமாக அநுபவித்தால் மாத்ரமே ஸத்யமாக ஏற்கப் படுகிறது . ஸத்யத்திற்கு ஸாக்ஷிகள் தேவை இல்லை . பெரிய மநுஷ்யர்களின் மேற்கோள்கள் தேவை இல்லை . ஸ்வ அநுபவம் மாத்ரம் போதுமானது . உள்ளத்தின் ஆழத்தில் உறுதியாக பதிந்து விடுகிறது . அவநம்பிக்கை கலப்பு இல்லாத ஶ்ரத்தையாகி விடுகிறது .
Comments
Post a Comment