ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 114
अहम् आत्मा सर्व भूताशय स्थितः ... (अध्याय १० - श्लोक २०)
அஹம் ஆத்மா ஸர்வ பூதாஶய ஸ்திதஹ ... (அத்யாயம் 10 - ஶ்லோகம் 20)
Aham Aatmaa Sarva Bhootaashaya Sthitah ... (Chapter 10 - Shlokam 20)
அர்தம் : அனைத்து ஜீவன்களிலும் உறைந்திடும் ஆத்மா நானே ...
ருத்ரர்களில் ஶங்கரன் நான் (சொற்றொடர் 116) என்ற சொற்றொடரைப் பற்றி எழுதி விட்டு இதை எழுதுகிறேன் . கீதை அத்வைதத்தின் ஸாரம் என்பதை ஸந்தேஹமற ப்ரகடனம் செய்யும் மற்றொரு கோஷம் இது .
அனைத்து ஜீவன்களுள் நிலையாக வீற்றிருக்கும் ஆத்மா நான் . இது உண்மை இல்லை , வெறும் கல்பனை என்று வைத்துக் கொள்வோம் . அவ்வாறு நினைத்தாலும் இது ஒரு அழகான கல்பனை . அத்புதமான பார்வை அளித்திடும் ஒரு கல்பனை . உலகம் வெவ்வேறாகத் தெரிகிறது . வகை வகையான ஜீவன்கள் .. ஸ்தாவரங்கள் ... மரம் , செடி , கொடி , புல் , பூண்டு என்று லக்ஷக் கணக்கான ஜீவன்கள் .. ப்ராணிகள் ... நீர் வாழ் , நிலம் வாழ் , பக்ஷிகள் , ஊர்வன , காட்டு வாழ் , நகர வாழ் என்று லக்ஷக் கணக்கான ப்ராணிகள் ... மநுஷ்ய இனத்திலும் எத்தனை வகைகள் ... கறுப்பன் , சிவப்பன் , சப்பை மூக்கன் , கூர் மூக்கன் , உயரம் குள்ளம் என்று லக்ஷக் கணக்கான வகைகள் ... இவ்வகைகள் அனைத்தும் வெவ்வேறு என்று கருதுவதால் தான் யுத்தங்கள் , பகை உணர்வுகள் , சுரண்டல்கள் , அடிமைப் படுத்தல் , அழித்தல் , ஆகிய நாஶகார செயல்கள் அனைத்தும் .
அனைத்தும் ஒன்றே என்ற ஶ்ரத்தை மாத்ரமே , என்னில் உள்ளதே இவை அனைத்திலும் உள்ளது என்ற ஶ்ரத்தை மாத்ரமே என்னை மற்ற ஜீவன்களுடன் பிணைத்திடும் . என் மனஸில் மற்ற ஜீவன்களைப் பற்றி அன்பு , அக்கறை , கருணை ஏற்படுத்திடும் .
வேறுபாடுகளைப் பார்த்தால் ஒன்று என்ற பாவனை ஏற்பட மறுக்கிறது . வேறுபாடுகளைத் தாண்டிய ஏதோ ஒன்று அனைத்திலும் உறைகிறது என்ற கருத்தே , அது கல்பனையாக இருந்தாலும் , ஒருங்கிணைக்கும் பார்வையை ஏற்படுத்தும் .
இன்று விக்ஞானமும் இதே கருத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது . வேறுபாடுகளைப் பார்த்தது . நுட்பமான பார்வையை வளர்த்து , அணுவைப் பார்த்தது . அணுவைப் பிளந்து மின்னணுவைப் பார்த்தது . அதையும் தாண்டி ஆற்றலைப் பார்த்தது . ஆற்றலுக்கும் அப்பால் உள்ளதைத் தேடிக் கொண்டிருக்கிறது .
நம் ஹிந்து முன்னோர்கள் வேறுபாடுகளைக் கண்டனர் . வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றைத் தேடினர் . பரமனைக் கண்டனர் . பரமனின் ஒரு அம்ஶமே அனைத்து ஜீவன்களிலும் இருப்பதைக் கண்டனர் . பல இல்லவே இல்லை . ரெண்டும் இல்லை . ஒன்றுதான் . என்று அறிவித்தனர் . அதனால்தான் , "வஸுதைவ குடும்பகம்" (உலகம் ஒரு குடும்பம்) ; "ஸ்வதேஶோ புவன த்ரயம்" (மூன்று உலகங்களும் ஸ்வதேஶமே . என்னுடையதே) ; "யத் பிண்டே . தத் ப்ரஹ்மாண்டே" (பிண்டத்தில் உள்ளதுதான் ப்ரஹ்மாண்டத்தில் உள்ளது) ; "ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம்" (அனைத்தும் ப்ரஹ்மமே) ; "அஹம் ப்ரஹ்மாஸ்மி" (நான் ப்ரஹ்மம்) ; "தத் த்வம் அஸி" (அது நீயே) ; என்றெல்லாம் ஹிந்துக்களால் முழக்க முடிந்தது . இம்முழக்கத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறையை இங்கு பாரதத்தில் நிறுவ முடிந்தது . வெறும் கோஷமாக இல்லாமல் , ஆழ்ந்த ஶ்ரத்தையுடன் இந்தக் கருத்தை ஏந்தி , உலகெங்கும் சென்று , ஆங்காங்கு வாழும் ஜனங்கள் உயர்ந்த வாழ்க்கை வாழ்வதற்கு வழி பகரக் கூடிய ர்ஷிகளைப் படைக்க முடிந்தது . அனைவரும் "நான் தனி , நான் வேறு , நீ வேறு" என்று கூறி , பிரிந்து செல்வதற்கு முயன்றிடும் உலகத்தில் ... "இல்லை . நாம் அனைவரும் ஒன்று . நம் அனைவருள்ளும் ஒரே பரமன் உறைகிறான் . பல்வேறாகத் தோன்றும் நம் அனைவரின் / அனைத்தின் அனைத்து அஸைவுகளுக்கும் , அனைத்து செயல்களுக்கும் , அனைத்து ஆற்றல்களுக்கும் காரணமானவன் ஒருவனே . பல அல்ல . ரெண்டு கூட இல்லை . ஒன்றுதான் ." என்ற அத்வைதக் கருத்தை த்ருடமாக , தொடர்ந்து , மீண்டும் மீண்டும் சிந்தித்து வருகிறோம் . கூறி வருகிறோம் . வாழ்ந்து வருகிறோம் .
இங்கு பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனும் அத்வைத ஸாரமான கீதையில் அதே அறிவிப்பைச் செய்கிறான் . "அனைத்து ஜீவன்களில் நிலைத்திடும் ஆத்மா நானே" ....
Comments
Post a Comment